sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வத் திருமணம் - 17

/

தெய்வத் திருமணம் - 17

தெய்வத் திருமணம் - 17

தெய்வத் திருமணம் - 17


ADDED : மார் 12, 2026 08:24 AM

Google News

ADDED : மார் 12, 2026 08:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எமன் - விஜயா திருமணம்

சூரியன், உஷாதேவி தம்பதிக்கு சிராத்ததேவன், இரட்டைக் குழந்தைகளாக எமன், யமுனா பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத உஷாதேவி கணவரை விட்டுப் பிரிய நினைத்தாள்.

சூரியனுக்கு தெரியாமலேயே தன் நிழலில் இருந்து, அவளைப் போன்ற ஒரு பெண்ணை உருவாக்கினாள். அவளுக்கு சாயாதேவி என பெயரிட்டு, தன்னுடைய கணவன், குழந்தைகளை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு தவம் புரியச் சென்றாள்.

தன்னுடன் இருப்பது யார் என அறியாத நிலையில் சூரியன், சாயாதேவி தம்பதிக்கு சாவர்ணி மனு, சனி, தபதி என மூன்று குழந்தைகள் பிறந்தன. சூரியனுக்கு சாயாதேவி பற்றிய உண்மை எதுவும் தெரியவில்லை. ஆனால், எமனுக்கு சந்தேகம் வந்தது. இவள் தன் தாய் உஷாதேவி இல்லை என புரிந்து கொண்டார்.

ஒருநாள் எமன், தாயின் உருவத்தில் இருக்கும் சாயாதேவியிடம் சண்டையிட்டு காலால் உதைத்தார். அதனால் கோபமடைந்த சாயாதேவி, தன்னை உதைத்த கால்களில் ஆறாத புண் உண்டாகட்டும் என சபித்தாள்.

புண்ணால் துன்பப்படும் எமன் பற்றி கவலைப்பட்ட சூரியன், அதில் இருந்து விடுபட சிவனை வேண்டுமாறு சொன்னார். எமனும் அதை ஏற்று தவமிருந்தார். அதைக் கண்டு மகிழ்ந்த சிவன், புண்ணை போக்கியதுடன், இறக்கும் உயிர்கள் தங்கியிருக்கும் தெற்கு திசைக்கு காவலராகவும், இறப்பின் கடவுளாகவும் இருக்க எமனுக்கு ஆணையிட்டார்.

அன்று முதல் பணியாற்றத் தொடங்கிய எமன், பூமியில் பிறந்த உயிர்கள் செய்யும் நற்செயல், தீச்செயல்களை ஏட்டில் எழுதும் பணியை சித்ரகுப்தனிடம் ஒப்படைத்தார். ஆயுள் முடிந்த உயிர்களைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துக் கொண்டு வரும் பணிகளை இன்னும் சில பணியாளர்களிடம் ஒப்படைத்தார். அந்த உயிர்கள் செய்த நற்செயலுக்கு ஏற்ற நன்மையை சொர்க்கத்திலும், தீயசெயலுக்கு ஏற்ற தண்டனையை நரகத்தில் வழங்கவும் ஏற்பாடு செய்தார். இந்த நடைமுறையால் தவறு செய்பவர்களுக்கு இறப்பிற்குப் பின் கடும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. அதே சமயம் நற்செயலுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நல்ல எண்ணமும் ஏற்பட்டது.

இறப்பிற்குப் பின் கொண்டு வரப்படும் மனித உயிர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த செயலுக்கேற்ப சொர்க்கம், நரகம் என எமன் வழங்கிய தீர்ப்புகள் சரியானதாகவும், நடுநிலையோடும் இருந்ததால், 'தர்மதேவன்' எனப் பெயர் பெற்றார்.

தன் செயல்பாடு பற்றி மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அறிய விரும்பிய எமன், கணக்காளரான சித்ரகுப்தனுடன் பூமிக்கு வந்தார். மனிதர்களிடையே மரண பயம் ஏற்பட்டதுடன், மரணத்திற்குப் பின் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தால் வழிபாடு அதிகரித்தது. பலரும் நற்செயல்களில் ஈடுபட்டனர்.

இருப்பினும் சிலர், உடல் அழிந்த பின்பு எப்படி தண்டனை கொடுக்க முடியும் என நினைத்தனர். இறப்புக்குப் பின்பு உயிர் இன்னொரு உலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்பது கட்டுக்கதை என தவறுகளைத் தொடர்ந்து செய்தும் வந்தனர். இவற்றை எல்லாம் பார்த்தபடி சித்ரகுப்தனுடன் எமன் வந்த போது, வழியில் ஒரு அழகிய பெண் இருவரையும் கடந்து சென்றாள். அவளைப் பார்த்ததும், அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவளைத் திருமணம் செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

அவளைப் பற்றி அறிய விரும்பி சித்ரகுப்தனை அனுப்பினார் எமன். அவள் அந்த பகுதியில் வசிக்கும் அந்தணர் ஒருவரின் மகள் என்றும், அவளின் பெயர் விஜயா என்றும், அவளுடைய தாய் சமீபத்தில் இறந்தாள் என்றும், அவளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வந்து சொன்னார் சித்ரகுப்தன்.

“அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்றார் எமன். அதைக் கேட்ட சித்ரகுப்தன், “மானிடப் பெண்ணைத் தாங்கள் திருமணம் செய்வது சரியாக இருக்குமா?” எனக் கேட்டார்.

அதற்கு எமன், “அவளைத் திருமணம் செய்யாமல் எமலோகம் திரும்புவதாக இல்லை' என்றார்.

இதன்பின் அந்தணர் வீட்டிற்கு எருமை வாகனத்தில் எமன் சென்றார். எருமை மாட்டின் மீது அமர்ந்த நிலையில், அடர்ந்த கருப்பு நிறத்தில், கம்பீர தோற்றத்துடன், சிவந்த கண்கள், கையில் கயிறு, கதாயுதம் ஏந்தியபடி காட்சியளித்த எமனைப் பார்த்துப் பயந்த அந்தப் பெண் மயங்கி விழுந்தாள். அவள் மீது தண்ணீர் தெளித்து எழுப்பி, தன்னைப் பற்றி அறிமுகம் செய்தார். உடனே அவள், 'நான் இறக்கும் நேரம் வந்து விட்டதா' என்ற பயத்துடன் கேட்டாள். அதை அறிந்த எமன், அவளைச் சமாதானப்படுத்தி திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்.

தன்னுடைய தோற்றம் கண்டு பயப்பட வேண்டாம் எனச் சொன்னதுடன், திருமணம் செய்தால் எம உலகத்தின் ராணியாக வாழலாம் என்றார். எமனின் பேச்சில் நம்பிக்கை கொண்ட அவள் திருமணம் பற்றி தன் தந்தையிடம் கூறச் சொன்னாள். அவளது தந்தையிடம் பேசி, திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். அவளின் தந்தை, சித்ரகுப்தன் முன்னிலையில் விஜயாவைத் திருமணம் செய்தார் எமன்.

மனைவியை அழைத்துக் கொண்டு எம உலகம் திரும்பினார். ஆடம்பர அரண்மனையில் தங்கியிருப்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எமன் மீது அன்பாக இருந்தாள். எமனும் அவள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார்.

விஜயாவிடம், அரண்மனையை விட்டு வெளியில் செல்ல வேண்டாம், அப்படியே சென்றாலும், தெற்கு பக்கம் மட்டும் செல்லக் கூடாது என அடிக்கடி எமன் எச்சரித்தார். அதற்கு என்ன காரணம்? என பலமுறை கேட்டு பார்த்தாள். ஆனால் எமன் பதிலளிக்கவில்லை.

அவளுக்கு எமன் மீது சந்தேகம் ஏற்பட்டது. தெற்கில் இன்னொரு அரண்மனை இருக்குமோ? அங்கு தன்னைப் போல், எமனுக்கு வேறு மனைவி இருப்பாளோ? என சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் உண்மையை அறிய விரும்பி எமனுக்குத் தெரியாமல் தெற்கு நோக்கிச் சென்றாள். பணியாளர்கள் பலரும் தடுத்தனர். ஆனால் அவர்களை மீறி அந்தப் பகுதிக்குள் சென்றாள்.

அங்கே தீயசெயல்கள் செய்த மனிதர்களுக்கு கடும் தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த உயிர்கள் அனைத்தும், தங்களை தண்டனையில் இருந்து விடுவிக்கும்படி வருந்துவதைக் கண்டாள். அவள் மனம் வேதனை அடைந்தது. அங்கிருந்து திரும்பி விட நினைத்த போது, அவளைப் பெற்ற தாயும் அங்கு இருப்பதைக் கண்டாள்.

அப்போது அங்கு எமனும் வந்து விட்டான். 'இங்கு உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு என் மனம் கலங்குகிறது. என் தாயும் இங்குதான் இருக்கிறார். அவரை நீங்கள் விடுவிக்க வேண்டும்' என்றாள்.

அதற்கு எமன், “இங்குள்ள எந்த உயிரையும் தண்டனைக்காலம் முடியாமல் விடுவிக்க இயலாது. என் பணியில் எந்த தவறும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் உன் தாயை துன்பத்தில் இருந்து விடுவிக்க வழி சொல்கிறேன். பூவுலகில் இருப்பவர் யாராவது ஒருவர், அனைவரும் மதிக்கும்படியான தியாகத்தைச் செய்து, அதன் பலனை உன் தாய்க்கு அளித்தால் விடுதலை கிடைக்கும்” என்றார்.

இதற்காக தன்னைப் பூமிக்கு அழைத்துச் செல்லுமாறு விஜயா வேண்டினாள். எமனும் அவளுடன் பூமிக்கு வந்தார். தாயின் துன்பத்தைத் தீர்க்க, பலரிடம் உதவி கேட்டாள். ஒருவரும் உடன்படவில்லை. கவலையுடன் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்தாள். அங்கு ஒரு பெண் தவம் செய்தபடி இருந்தாள். அவளிடம் தன் தாயின் துன்பம் தீர செய்த தியாகத்தின் பலனை தருமாறு கேட்டாள். தவம் செய்த பெண்ணும் சம்மதித்தாள். எமன் அதை ஏற்றுக் கொண்டார்.

பூமியில் இருந்து எம உலகம் திரும்பிய எமன், மனைவி விஜயாவின் தாயை தண்டனையில் இருந்து விடுவித்தார். அப்போது எமன், 'இனி நீ தெற்கு பக்கம் செல்லக் கூடாது. யாரையும் தண்டனையில் இருந்து விடுவிக்கச் சொல்லி என்னிடம் கேட்கக் கூடாது' என்றார். அதற்கு விஜயாவும் சம்மதித்து இன்று வரை எமனுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us