தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி


ADDED : மார் 12, 2026 08:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 08:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்திர தேசத்து மன்னர் அஸ்வபதி ஒருமுறை நாரதரிடம் தனக்கு குழந்தைப்பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினார். சாவித்திரி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார் நாரதர்.

அதன்படியே விரதமிருக்க மன்னருக்கு பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரி எனப் பெயரிட்டு வளர்த்தார். கல்வி, கலைகளைக் கற்றுக் கொடுத்து வீரமங்கையாக மகளை வளர்த்தார். ஒருநாள் வேட்டைக்குப் போன சாவித்திரி, காட்டில் சாளுவ தேசத்து மன்னர் சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்தித்தாள்.

போரில் நாட்டை இழந்த சால்வன் காட்டில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். மாற்றுத் திறனாளிகளான சால்வனும் அவரது மனைவியும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள். பெற்றோரை அன்புடன் சத்தியவான் கவனிப்பதைப் பார்த்த சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். 'இந்த குணவான் சத்தியவானே எனக்கு ஏற்ற கணவர்' என மனதிற்குள் தீர்மானித்தாள். விஷயத்தைத் தன் தந்தையிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார்.

மந்திர தேசம் வந்த நாரத மகரிஷிக்கு மகளின் விருப்பத்தை தெரிவித்தார் அஸ்வபதி. அதற்கு அவர், 'இன்னும் பன்னிரண்டு மாதத்தில் சத்தியவான் இறப்பான்' என எச்சரித்தார். ஆனாலும் மன உறுதியுடன் சத்தியவானைக் கணவராக அடைந்தாள் சாவித்திரி. கணவன் சத்தியவான் என்றைக்கு இறப்பான் என தெரிந்த போதிலும், அந்த ரகசியத்தை அவள் சொல்லவில்லை.

அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். மாமனார், மாமியாரைப் பரிவுடன் கவனித்தாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. அவன் இறப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இல்லாமல் கடும் விரதம் இருந்தாள் சாவித்திரி. இறுதிநாள் இரவெல்லாம் உறங்காமல் கண்ணீர் மல்க கணவனுக்காக பிரார்த்தனை செய்தாள்.

அடுத்த நாள் விறகு வெட்டச் செல்லும் கணவன் சத்தியவானுடன் சென்றாள் சாவித்திரி. காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் சத்தியவான், சாவித்திரியின் மடிமீது தலை வைத்து உயிர் துறந்தான். அப்போது சத்தியவானின் உயிரை அழைத்துச் செல்ல எமதுாதர்கள் வந்தனர். ஆனால் அவர்களால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்கமுடியவில்லை.

எனவே எமனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, சத்தியவானின் உயிர் பிரிந்த உடலை விட்டு விடு; மரணம் என்பது மனிதனுக்கு விதிக்கப்பட்டது என்றான். அதன்பின்னரே அவள் சத்தியவான் உடலை விட்டு விலகி நின்றாள். ஆனாலும் தன் கற்புத்திறத்தால் போராடி கணவரின் உயிரை மீட்டாள்.

'உண்மையான அன்பிற்கு முன்பு மரண தேவனான நான்கூட ஆற்றலை இழந்து விட்டேன்' என்றான் எமன். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு ஆகிய வரங்களை எமனிடம் பெற்றாள்.

பெண்களின் பெயருக்கு பின்னர் கணவரின் பெயரை எழுதுவது வழக்கம். ஆனால் கணவரின் மீதுள்ள பக்தியால் இவளை மட்டும் 'சத்தியவான் சாவித்திரி' என்றே அழைக்கிறோம். சிவ புராணத்தில் இந்த வரலாறு உள்ளது. பாண்டவர்களின் வனவாச காலத்தில் மார்க்கண்டேய முனிவர் இதை திரவுபதியிடம் எடுத்துச் சொன்னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us