தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 21

சித்தர்களின் விளையாட்டு - 21

சித்தர்களின் விளையாட்டு - 21


ADDED : மார் 12, 2026 11:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 11:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீரங்கத்தில் சட்டைமுனி

“பார்வதி தாயே! சட்டைமுனி சித்தருக்காக மகேஸ்வரர் வழக்கு தீர்த்தது வியப்பை தருகிறது. இப்போது ரங்கநாதர் தன் ஆபரணங்களை கொடுத்த விளையாட்டை அறிய ஆவலாக இருக்கிறேன். சைவம், வைணவம் இரண்டும் சித்தருக்காக இணைந்தது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார் நாரதர்.

“நாரதரே! சைவமும், வைணவமும் தழைத்தோங்கிய புண்ணிய பூமி பாரதம். இரண்டையும் இரு கண்களாக போற்றி வளர்த்த சித்தர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது” என பார்வதி சொல்ல ஆரம்பித்தார்.

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சட்டைமுனி ஒருமுறை ரங்கநாதரை தரிசிக்க விரும்பினார். இதற்காக கயிலாய மலையில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டார். கோயிலுக்கு அவர் வந்து சேர தாமதமாகி விட்டதால் அன்றாட கோயில் பூஜை முடிந்து இரவு நடை சாத்தப்பட்டது.

ஏமாற்றம் அடைந்த சட்டைமுனி, கயிலையில் இருந்து இவ்வளவு துாரம் வந்தும் ரங்கநாதரை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். கைகளை தலையின் மீது துாக்கியபடி, “ரங்கநாதா... ரங்கநாதா” எனச் சொல்லி வேண்டினார்.

அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது. கோயிலின் கதவுகள் தானாக திறந்தன. தீபங்கள் பிரகாசமாக எரிந்தன. மேளதாளம் முழங்கியது. பூஜை மணிகள் ஒலித்தன. இரவு பூஜையில் சாத்தப்பட்ட மாலைகள், சூட்டப்பட்ட ஆபரணங்களுடன் மூலவர் ரங்கநாதர் கோயிலின் வாசலில் காட்சியளித்தார். சுவாமியை தரிசித்து மெய்சிலிர்த்தார் சட்டைமுனி. அப்படியே அவரது காலடியில் விழுந்து மயங்கினார்.

கோயிலில் திடீரென மேளதாளம் முழங்கியதையும், மணி ஒலித்ததையும், கதவு திறந்து கிடப்பதையும் கண்ட அக்கம் பக்கத்தினர் பரபரப்பாக கோயில் முன் கூடினர். அங்கே கோயில் வாசலில் சட்டைமுனி மயங்கிக் கிடப்பதையும், அவருடைய கைகளில் ரங்கநாதர் அணிந்திருந்த ஆபரணங்கள் இருப்பதையும் கண்டனர்.

கோயிலுக்குள் நுழைந்த திருடன் என நினைத்த அவர்கள் சட்டைமுனியை அடித்தனர். அவர் பதில் சொல்லாமல் “ரங்கநாதா... ரங்கநாதா” என கண்களை மூடியபடி ஜபித்தபடி இருந்தார். வாசலில் இருந்த துாணில் சட்டை முனியை கட்டி வைத்தனர்.

அதற்குள் தகவல் தெரிந்து மன்னர் அங்கு வந்தார். சட்டைமுனியை நோக்கி ''கை, கால் நன்றாகத் தானே இருக்கிறது. உழைத்துப் பிழைப்பதை விட்டு விட்டு, இப்படி திருட்டு புத்தியுடன் இரவு நேரத்தில் கோயில் நகையைத்திருடி செல்ல நினைக்கிறாயே” எனக் கேட்டார்.

“மன்னா, நான் திருடன் அல்ல. பெருமாளை தரிசிக்கவே வந்தேன். கோயில் கதவு பூட்டியிருந்ததால் வாசலில் நின்று மனமுருகி வணங்கினேன். கதவுகள் தானாக திறந்தன. பெருமாளை தரிசித்ததில் மெய்சிலிர்த்து மயங்கினேன். பெருமாளின் ஆபரணங்கள் எப்படி என்னிடம் வந்தன என்பது தெரியாது” என்றார்.

மன்னன் நம்பவில்லை. “ஆண்டாண்டு காலமாக நாங்கள் ரங்கநாதரை வணங்குகிறோம். எங்களுக்கு காட்சியளிக்காத ரங்கநாதர் ஒரு திருடனுக்காகவா காட்சியளிப்பார். எப்படி எல்லாம் பொய் சொல்கிறாய். எங்கே மீண்டும் அவரை காட்சியளிக்கச் சொல்” என சட்டைமுனியை வாசலில் நிறுத்தினார் மன்னர்.

காவலர்களை அழைத்து கோயில் கதவைப் பூட்டச் சொன்னார். மக்கள் அனைவரும் சூழ்ந்து நிற்க சட்டைமுனியைப் பார்த்து “எங்கே! ரங்கநாதா என சத்தமிடு. கதவு திறக்கிறதா என பார்ப்போம்” என ஏளனம் செய்தார். வீண்பழியால் வருந்திய சட்டைமுனி கண்ணீர் மல்க கைகளை தலைக்கு மேலே உயர்த்தி “ரங்கநாதா... இது என்ன சோதனை” என வேண்டினார்.

அப்போது அதிசயம் நிகழ்ந்தது. கோயில் மணிகள், ஒலிக்க மேளதாளம் முழங்க மீண்டும் கதவுகள் திறந்தன. ரங்கநாதர் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தும் சட்டைமுனியின் கைக்கு வந்தன.

மன்னரும், மக்களும் சட்டைமுனிக்கு நிகழ்ந்த அற்புதத்தை எண்ணி மெய்சிலிர்த்தனர்.

தவறை பொறுத்தருளும்படி சித்தரிடம் வேண்டினர். அனைவரின் முன்னிலையில் சட்டைமுனி ஜோதி வடிவில் ரங்கநாதருடன் கலந்தார். ஸ்ரீரங்கத்தில் இன்றும் ரங்கநாதரை வணங்கிய நிலையில் சட்டைமுனி அருள்புரிகிறார்.

பக்தர்கள் சிவன் கோயிலைத் தரிசித்த பின், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்கின்றனர். சட்டமுனி சித்தரின் வரலாறு சைவ, வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

“மகேஸ்வரா... எல்லாம் தங்களின் திருவிளையாடலே... சட்டைமுனி மருத்துவ நுால்களை எழுதாவிட்டால் இன்று மருத்துவம் தழைத்தோங்கி இருக்காது” என்றார் நாரதர்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us