sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாரதியாரின் ஆத்திசூடி - 35

/

பாரதியாரின் ஆத்திசூடி - 35

பாரதியாரின் ஆத்திசூடி - 35

பாரதியாரின் ஆத்திசூடி - 35


ADDED : மார் 12, 2026 11:53 AM

Google News

ADDED : மார் 12, 2026 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தவம் செய்

தவம் என்றால் வாழ்க்கையை விட்டு விட்டு கண்களை மூடி கொண்டு தியானம் செய்வது அல்ல. பாரதியாரும் அப்படி சொல்லவில்லை. அவர் எழுதிய பகவத்கீதை விரிவுரையில் இல்லத்துறவு என்பதை விட உள்ளத்துறவுதான் முக்கியம் என்கிறார். இங்கே தவம் எனச் சொல்வது விடாமுயற்சியைக் குறிக்கும்.

புலன் அடக்கம், நல்ல எண்ணம், கடவுள் நம்பிக்கையுடன் மனதை ஒருநிலைப்படுத்தி, அறவழியில் நின்று இயற்கையான ஆசைகளை வென்று, உண்மை அறிவை உணரும் ஒழுக்க நெறியே தவம். இது உடலை மட்டுமின்றி மனதையும் செம்மைப்படுத்தும். மனம் துாய்மையானால் மந்திரம் கூடத் தேவையில்லை.

திருக்குறளில்,

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றெல்லாம்

அவம்செய்வார் ஆசையுட் பட்டு

என்கிறார் திருவள்ளுவர்.

இல்லறத்தில் இருப்போர் நன்னெறிகளை பின்பற்றி சிந்தனையாலும், செயலாலும் கடமையைச் செய்தல் வேண்டும். இதை விட்டு உலக வாழ்வை துறந்து செய்யும் தவம் என எண்ண வேண்டாம் என்கிறார்.

'தவம் கிடந்தேன்' 'தவமாய் தவமிருந்து பெற்றேன்' எனச் சொல்கிறோமே... அது போல 'தவம்' என்றால் 'ஒரு சிந்தனை, ஒரே செயல்' என்ற பொருளைக் குறிக்கும். ராமன் காட்டிற்குச் சென்றாலும் தவம் செய்யவில்லை; தன் கடமையை நிறைவேற்றினான்.தவம் பற்றி பாரதியார் பல பாடல்களில் கூறுகிறார். கவலைப்படாமல் நம் பணிகளைச் செய்வதுடன், அனைவரிடமும் அன்பாய் இருப்பதே தவம் என்கிறார்.

செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே

தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்!

வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை

அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு

மேலும்

யாகத்திலே தவ வேகத்திலே தனி யோகத்திலே

பல போகத்திலே ஆகத்திலே

பல பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர்நாடு

என பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

சேக்கிழாரும், தவ வாழ்வை உலகியலோடு இணைத்துக் கூறுகிறார். சங்கிலியாருக்குச் சுந்தரரை அறிமுகப்படுத்தும் போது 'மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்' என்கிறார் சிவபெருமான்.

தவத்தின் மேன்மையை உபநிஷதம், உண்மை பேசுதல் தவம். உண்மையாக நடத்தல் தவம். (பிரம்மத்தைப் பற்றிய) கேள்வி தவம், புலனடக்கம் தவம், மனவடக்கம் தவம், ஈகை தவம், வேள்வி தவம், ''பூ: புவ: ஸுவ:'' என்பது பிரம்மம், (அதாவது அனைத்தும் பிரம்மம்). இதை உபாசித்தலே தவம்.

நீதிநுாலான ஏலாதியில்,

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,

அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா

இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்றதன்

துன்பம் துடைத்தல் அரிது

பொருள்: தவம் கூட செய்து விடலாம். பிறருக்குக் கொடுக்கும் குணமான தானம் என்பது மிகவும் கடினம். தவம் என்பது செய்பவருக்கே பலனை தரும். ஆனால் தானம் என்பது பலருக்குப் பலன் தரும் என்பதால் பிறருக்கு உதவி செய்வது தவத்தை விடச் சிறந்தது.

ஆனால் அடுத்த வரியில் தக்கார் அதாவது சான்றோருக்கு தீமை செய்வது கடினமான செயல். ஆனால் நன்மை செய்வது அவர்களுக்கு எளிது என்கிறார். இதைப் பார்க்கும்போது, தவத்தின் மூலம் ஒருவன் தன்னை உணர்ந்தால் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் வரும் என்பதே அடிப்படைக் கருத்து.

கண்ணதாசன் இதை,

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு

தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்...

உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்...

இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்

வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்...

உலகம் உன்னிடம் மயங்கும்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால்...

உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்

பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்...

எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

என மனிதர்களுக்கு ஆண்டவனின் ஆறு கட்டளைகளாகக் கூறுகிறார்.

தவம் என்ற வார்த்தை 'தபஸ்ய' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது. 'தபஸ்ய' என்ற வார்த்தையின் மூலம் 'தப்'. இதற்கு வெப்பத்தை வெளிப்படுத்துதல் எனப் பொருள். 'தபஸ்' என்றால் 'வெப்பம், தணல் என்பது பொருள். உடலில் வெப்பம் உள்ளவரை தான் நாம் உயிரோடு இருக்கிறோம். தவம் என்பது நம் உடலைச் சீர் செய்கிறது எனலாம்.

தவம், தியானம் இரண்டும் கடவுளிடம் தொடர்பு கொள்ளும் முறைகள். 'தவம்' என்பது கடவுளிடம் நமக்கு வேண்டியதைக் கேட்பதாகும். கடவுளிடம் இடைவிடாமல் தொடர்பு கொள்வது தியானம். அதனால்தான், தாயாக கருதி அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர்

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்

பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த

கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே.

என்கிறார். இதன் பொருள் என்ன?

அம்பிகையின் சிறிய இடை, அவளின் உருவ அழகு, முத்தாரம் அணிந்த மேனி, கருமையான கூந்தல், மூன்று கண்களையும் மனதில் தியானிப்பதை விட உலகில் வேறு தவமில்லையே என்கிறார்.

ஆதிசங்கரர் மற்றும் அவர் வழிவந்த அருள்நிறை ஜகத்குருக்கள் செய்துவரும் தவம், இந்த தேசம் நன்றாக இருக்கவேண்டும், மக்கள் செழித்து இருக்கவேண்டும், தொன்மையான பண்பாடும் கலாசாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

பாரதியார் நம்பிக்கையுடன் பாரதமாதா பள்ளி எழுச்சியில், எல்லோரும் செய்த தவத்தால்,பொழுது புலர்ந்து, ஒளி பிறந்துவிட்டது. இருள் மறைந்து, துன்பம், கேடுகள் போய்விட்டன என்பதுடன், என்ன தவங்கள் செய்து எத்தனை

காலம் ஏங்குவம் என்றும் பாடுகிறான்.

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,

புன்மை யிருட்கணம் போயின யாவும்,

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,

தொழுதுனை வாழ்த்தி

வணங்குதற்கு இங்குஉன்

தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்

விழிதுயில்கின்றனை இன்னும் எம் தாயே

வியப்பிது காண்! பள்ளி யெழுந்தருளாயே

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்

ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ?

இன்னுயிரே? பள்ளி யெழுந்தருளாயே!

தனிமனிதன் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாகி தவம் செய்து காக்கிறாள் என்பதை

நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட

மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்

மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு

என்று பாடுகிறார்.

பாரதத்திற்கு முக்கடல் மோதும் தெற்கு எல்லைதான் குமரி எல்லை. அங்கு எந்த விதமான துன்பங்கள், விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக கன்னியாகுமரி அம்மன் தவம் இருப்பதாக சொல்கிறார் பாரதியார். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நம் கடமைகளை, பொறுப்புக்களைச் செய்து, எல்லோரிடமும் அன்பு காட்டி வாழவேண்டும் என்பதையே 'தவத்தினை நிதம் புரி' என்னும் ஆத்திசூடி கூறும் கருத்து.



- ஆத்திசூடி அடுத்த வாரம் முற்றும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010






      Dinamalar
      Follow us