தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 11

பெண்பிள்ளை ரகசியம் - 11

பெண்பிள்ளை ரகசியம் - 11


ADDED : ஏப் 15, 2026 08:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டாளைப் போலே

“அமிர்தம்மா... பெண்பிள்ளை சொன்ன 11ம் வாக்கியம் பிஞ்சிலேயே பழுத்தேனோ ஆண்டாளைப் போலே என்பதுதான்”

“ராமானுஜருக்கு ஆண்டாளை ரொம்ப பிடிக்குமாமே?” எனக் கேட்டார் அமிர்தம்.

“ஆமா, அதை கடைசியா சொல்றேன். ஆண்டாளைப் பற்றி முதலில் பார்ப்போம். ஸ்ரீவில்லிபுத்துாரில் தோன்றியவர் தான் பெரியாழ்வார். வேதம் கற்ற இவர், வடபத்ர சாயி பெருமாளுக்கு பூக்களை பறித்து தினமும் மாலை கட்டி சமர்ப்பித்து வந்தார்.

ஒருநாள் நந்தவனத்தில் ஒரு பெண் குழந்தை அழுது கொண்டிருப்பதை பார்த்தார். குழந்தைக்கு 'கோதை' எனப் பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு பக்தி கதைகளை சொல்லி வந்தார். கோதையும் தன்னை நப்பின்னையாகவும், கண்ணனை தன் கணவனாகவும் நினைத்து வாழ்ந்தாள். வடபத்ர சாயிக்கு செலுத்த வேண்டிய மாலையை யாரும் பார்க்காத வண்ணம் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள். இதனாலேயே ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொடி என பெயர் வந்தது.

கோதைக்கு 16 வயது வந்ததும் திருமணம் நடத்த விரும்பினார் பெரியாழ்வார். ஆனால் கோதை மனிதர்களை நான் மணம் செய்ய மாட்டேன் என தந்தையிடம் திட்டவட்டமாக கூறினாள்.

அவளுடைய ஞானக் காதலை தெரிந்து கொண்ட பெரியாழ்வார் அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் சென்றார். பாண்டிய மன்னர் முன்னிலை வகிக்க, பக்தர்கள் புடை சூழ, கோதை ஸ்ரீரங்கம் கருவறைக்குள் சென்றதும் ஸ்ரீரங்கநாதரால் ஆட்கொள்ளப்பட்டாள்.

ஆண்டாளின் பக்தி இணையற்றது. இவள் பிறக்கும் போதே பக்தியுடன் பிறந்தவள். திருப்பாவை 30 பாசுரங்களைத் தான் மார்கழியில் பாடிப் பரவசம் கொள்கிறோம். நாச்சியார் திருமொழியில் 143 பாசுரங்களையும் அவள் பாடியிருக்கிறாள்”

“ஆமா, நான் கூட பாடியிருக்கேன். சரி ராமானுஜருக்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு? அவர் பிட்சைக்குச் செல்லும் போது கூட திருப்பாவையைத்தான் பாடிக் கொண்டே போவாராமே?”

“இதோ சொல்றேன் கேளுங்க... கண்ணனை நினைத்து திருப்பாவை பாடிய அவள், நாச்சியார் திருமொழியில் வாரணமாயிரம் எனத் தொடங்கும் பாசுரத்தில் தன் திருமணத்தை கனவாக பாடி மகிழ்ந்தாள்.

கண்ணனையே நினைத்திருக்கும் போது ஒரு பக்கம் நாட்கள் கடந்து போய் கொண்டே இருந்தது. மறுபக்கம் என்ன செய்தும் கண்ணனின் கடைக்கண் பார்வை தன் மீது விழவில்லையே என்ற தவிப்பு. தன் தவிப்புக்கு முடிவு காண வேண்டும் என திருவேங்கடமுடையான் இருக்கும் திருமலைக்கு மேகங்களை துாது அனுப்பினாள். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கண்ணனுக்காக ஆண்டாள் காத்துக் கிடக்கிறாள் என்ற செய்தி ஸ்ரீவில்லிபுத்துார் மக்களுக்கு பரவ 'ஒரு மானிடப் பெண்ணிற்காக கண்ணன் பூமிக்கு இறங்கி வருவானா? அப்படி வந்து தான் திருமணம் செய்வானா? இதென்ன பைத்தியக்காரத்தனம்?' என ஆண்டாளுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கிளம்பி மதுரை அழகர் கோவிலுக்கு வந்தாள் ஆண்டாள். அங்கே ஒரு பிரார்த்தனையை முன்வைத்தாள். எனக்கும், ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் நடந்தால் நுாறு அண்டா அக்கார அடிசிலும், நுாறு அண்டா வெண்ணெய்யும் சமர்ப்பிக்கிறேன் என்றாள்.

இதை நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தில் குறிப்பிடுகிறாள்.

ஒரு நல்ல நாளில் பெருமாளும், ஆண்டாளை தன்னுடன் இணைத்துக் கொண்டார். சரி ஆண்டாள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினாளா? இல்லை, ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான ஆண்டாள் அதன் பிறகு மதுரைக்கு வரவே இல்லையே! இந்த பிரார்த்தனையை நிறைவேற்றும் எண்ணம் ஒருவருக்கு தோன்றியது. அவர்தான் ராமானுஜர்.

ஒரு பெண் பிரார்த்தனை செய்து, அதை நிறைவேற்றாவிட்டால் அந்த பொறுப்பு அவளின் சகோதரனைச் சேரும். ராமானுஜர் தன் சகோதரியாக ஆண்டாளை பாவித்து அழகர் கோவிலுக்குச் சென்று நுாறு அண்டா அக்கார அடிசிலும் வெண்ணெய்யும் மார்கழி மாத கூடாரவல்லி நாளில் சமர்ப்பித்து வழிபட்டார். இதனால் ஆண்டாள் அவரது சகோதரியாக மாறினாள்''

“அது சரி, ஆண்டாள் காலத்துக்கு பிறகு தோன்றியவர் தானே ராமானுஜர்... அவர் எப்படி அண்ணனாக முடியும், தம்பியாக தானே இருக்க முடியும்?”

“பொறுங்க பொறுங்க... ஆண்டாளின் பிரார்த்தனையை அழகர் கோவிலில் நிறைவேற்றிவிட்டு ஸ்ரீவில்லிபுத்துாருக்கு சென்றார் ராமானுஜர். அவர் வருவதை கண்டு மகிழ்ந்த ஆண்டாளின் உற்ஸவர் சிலை கருவறையில் இருந்து சற்று முன்னோக்கி வந்து ராமானுஜரை கைகூப்பி 'வாரும் என் அண்ணலே' என வரவேற்றது. அதனால் தான் இன்றும் கருவறையில் உள்ள மூலவர், உற்ஸவர் ஆண்டாளுக்கு இடையே 15 அடி இடைவெளி இருக்கிறது. அன்பால் அரவணைத்த ராமானுஜரை அண்ணனாக ஏற்று குடும்பத்தில் ஒருவராக ஆண்டாள் கொண்டாடியுள்ளார்”

“ஓஹோ! ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி முறையா?” என தலையாட்டினார் அமிர்தம்.

“ஆமா, அப்படி ஆண்டாள் மீது பாசத்தோடு பழகிய ராமானுஜரை பார்த்து தான் பிஞ்சு வயதிலே பக்தியில் நான் ஆண்டாளைப் போல பழுக்கவில்லையே. அதனால் இந்த ஊரை விட்டுச் செல்கிறேன் என ஏக்கத்துடன் சொல்லி முடிக்கிறாள் பெண்பிள்ளை.

“ம்... ஆண்டாளைப் போலவே சிறுவயதிலேயே பக்தி கொண்டவர் திருஞானசம்பந்தர். அவரும் 16 வயசுல முக்தி அடைந்தார். வள்ளலாரும் அப்படித்தான். சின்ன வயசுலயே பக்தி மிக்கவராக இருந்தார். குழந்தையாக இருக்கும் போது அவரது பெற்றோர் சிதம்பரம் கோயிலுக்கு போனாங்க. அங்கு சிதம்பர ரகசியத்தை காட்ட திரையை விலக்கிய போது குழந்தையாக இருந்த ராமலிங்கம் சிதம்பர ரகசியத்தை புரிந்து கொண்டு சிரித்தார். இது பற்றி திருவருட்பாவில் குறிப்பிடுகிறார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்தார். வளர்ந்ததும் பள்ளிக்குப் போகாமல் தியானத்தில் ஆழ்ந்தார். மனதில் கவிதை ஊற்று பொங்க தெய்வ மணிமாலையை பாடினார். ஒருநாள் ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதிக்கு உடல்நிலை சரியில்லை. தான் பங்கேற்க வேண்டிய சொற்பொழிவுக்கு தம்பியை அனுப்பினார். சிறுவனான ராமலிங்கம் அரிய கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்தினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

ஒருநாள் தம்பியின் சொற்பொழிவு எப்படி இருக்கிறது என அண்ணனே மறைந்து நின்று கேட்டார். அன்றுதான் தன் தம்பியின் உள்ளொளியை அவரும் உணர்ந்தார். அதன் பிறகு தன் தம்பியை கடவுளின் பிள்ளையாகவே கருதினார். ராமலிங்கர் 12 வயது முதல் முறையான ஞான வாழ்க்கையை தொடங்கினார்.

ஆனாலும் அவர் மக்களோடு கொண்டிருந்த தொடர்பை கைவிட வில்லை. படிப்படியாக வள்ளலாராக உயர்ந்தார். 1874ல் கருங்குழி சித்தி வளாக மாளிகையில் தனி அறையில் தாழிட்டுக் கொண்டார். பின்னால் அறையை திறந்த போது அறை வெறுமையாக இருந்தது. வள்ளலார் சித்தி பெற்றதை உணர்ந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கருவறையில் ஆண்டாள் மறைஞ்சிட்டார். வள்ளலாரும் இப்படி தனி அறையில் மறைஞ்சிட்டார். இருவருமே உலகம் பயனுற வாழ்ந்தவர்கள் இல்லையா?”

“ஆமாம்” என்றாள் கிருஷ்ணவேணி ஆமோதிப்பவளாய். சரி வானத்தை பார்த்தால் மழை வரும் போல இருக்கு. வாங்க சீக்கிரமா நடந்து அவர்களைப் போல நாமும் மறைஞ்சிடலாம்.”

குபீரென சிரித்த அமிர்தம் அடுத்த வாக்கியம் என்ன என்பது போல பார்க்க, அதை உணர்ந்த கிருஷ்ணவேணி 'எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே' என்றார் பாந்தமுடன்.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us