ADDED : ஏப் 15, 2026 08:32 AM

அன்பிற்கு தண்டனையா?
“ஒரு மனுஷன் மீது அன்பு காட்டினா குத்தமா? இல்ல, பச்சைப்புடவைக்காரியே கதின்னு அவ காலடியில் கிடப்பது தப்பா? அவ ஏன் சார் இப்படி கொடுமைக்காரியா இருக்கணும்?”
என் முன் இருந்தவரை பார்த்தேன். பெயர் ராமநாதன். அரசுப்பணி செய்பவர். வசதியானவர். அவருக்கு ஒரே மகள்.
“என்னாச்சு?”
“குடும்பத்தோட வெளியூர் போயிட்டு திரும்பிக் கிட்டிருந்தோம். திடீர்னு ஒரு ஆளு கிராஸ் பண்ணான். டிரைவரால் பிரேக் போட முடியல. அவனக் கார் அடிச்சித் துாக்கிடுச்சு. உடனே டிரைவரை ஓடிப் போகச் சொல்லிட்டேன். நான் டிரைவர் சீட்டுல உட்கார்ந்துக்கிட்டேன்”
“ஏன்?”
“பத்து வருஷமா ஆக்டிங் டிரைவரா வர்றவன் சார் அவன், பேர் சேது. அவனுக்கு மன வளர்ச்சியில்லாத பொண்ணு ஒன்னு இருக்கு. கோர்ட், கேஸ்ன்னு அலைஞ்சா அவன் பொண்ண யாரு பாத்துப்பா? நானே வண்டி ஓட்டினதா போலீஸ்ல சொல்லிட்டேன். வண்டி என் பேர்லதான் இருக்கு. நான் சொன்னத நம்பி என் மீது கேஸ் போட்டாங்க. 30,000 ரூபா பைன் வரும்ன்னு வக்கீல் சொன்னாரு. அத நம்பி சும்மா இருந்துட்டேன்.
“ரெண்டு நாளைக்கு முன்னால தான் விஷயம் தெரிஞ்சது. கார்ல அடிபட்டவன் இறந்துட்டானாம். நான் கண்மூடித்தனமான வேகத்துல வண்டி ஓட்டினதாலதான் விபத்து நடந்ததுன்னு நீதிபதி நினைக்கிறாரு. அநேகமா ரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை கொடுப்பாராம்”
நான் அதிர்ந்தேன்.
“அப்படி ஒரு தீர்ப்பு வந்தா என் வேலை போயிடும் சார். ரிட்டயர்மெண்ட் தொகையும் பெரிசா வராது. என் பொண்டாட்டி வேலை பாக்கல. குடியிருக்கும் வீடு தான் ஒரே சொத்து. அதுலயும் கடன் இருக்கு. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா குடும்ப மானம் போயிடும். அப்புறம் எப்படி சார் என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகும்? டிரைவருக்கு நல்லது செய்யப் போய்...'' உடைந்து போய் அழுதார் ராமநாதன்.
“சத்தியமா சொல்றேன், சார். பச்சைப்புடவைக்காரியைத் தவிர வேற தெய்வத்தை வணங்கியதில்லை. வேலையில ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கியதில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படி கல் நெஞ்சுக்காரியா இருக்கணும்?”
அவர் பச்சைப்புடவைக்காரியை பழித்ததால் பொங்கிய கோபம் எனக்கு கண்ணீராக வெளிப்பட்டது.
“பிரார்த்தனை பண்றேன். நல்லதே நடக்கும்” எனச் சொல்லி ராமநாதனை அனுப்பினேன்.
ராமநாதன் சென்றபின் தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்தேன். மாலையில் தாயைச் சந்திக்க கோயிலுக்குக் கிளம்பினேன்.
ரெண்டு தெரு தாண்டி நடந்த போது கொய்யாப்பழத்தை நீட்டினாள் ஒருத்தி.
“தேனா இருக்கு சாமி... கொஞ்சம் பழம் வாங்கிட்டுப் போயேன்”
“சாப்பிடறதா வேண்டாமான்னு இன்னும் முடிவு எடுக்கலம்மா”
“ஓஹோ... நீ உண்ணா நோன்பு இருந்து அதன் சக்தியால் ராமநாதனை ஜெயிலில் இருந்து விடுவித்து விடுவாயோ? அவ்வளவு பெரியவனா நீ?”
தாயின் காலில் விழுந்தேன்.
“தப்பு செய்தவர்களைத் தண்டிக்கலாம். ஐயோ பாவம் டிரைவர் மாட்டிக் கொண்டால் அவன் வாழ்க்கை சிக்கலாகி விடுமே என அனுதாபப்பட்டு பழியை ஏற்றுக் கொண்டவரைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் தாயே”
“எனக்கே போதிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா?” என்றாள் அவள்.
“மன்னித்து விடுங்கள், தாயே! யார் வேண்டுமானாலும் ஜெயிலுக்குச் செல்லட்டும். யார் வேண்டுமானாலும் உயிரை இழக்கட்டும். நான் உங்கள் கொத்தடிமை என்ற நிலை...”
“வசனத்தை அள்ளி விடாதே. அடுத்து நடக்கப் போவதைப் பார்”
நீதிமன்றம் கண் முன் விரிந்தது. குற்றவாளிக் கூண்டில் ராமநாதன் நின்றிருந்தார்.
நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அரக்க பரக்க ஓடிவந்தான்.
“என்னை மன்னிச்சிருங்கய்யா” கத்தினான் அவன். போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்துக்கொண்டனர். இருந்தாலும் அவன் விடாமல் பேசினான்.
“அன்னிக்குக் கார் ஓட்டினது நான்தான்யா. என் பேரு சேது. அந்தப் பையனோட சாவுக்குக் காரணம் நான் தான்யா. வேணும்னே அப்படிச் செய்யலங்கய்யா. என் மகளுக்கு வலிப்பு வந்திருக்குன்னு பொண்டாட்டி போன் பண்ணா. வீட்டுக்குச் சீக்கிரமாப் போகணும்னு வண்டிய வேகமா ஓட்டினது என் தப்புதான். என் நிலைமையப் புரிஞ்சிக்கிட்ட ராமநாதன் ஐயா என்னைப் போகச் சொல்லிட்டு தானே வண்டி ஓட்டினதாச் சொல்லிட்டாருங்க. எனக்கு துாக்குத் தண்டனை வேணும்னாலும் கொடுங்க. இந்த மனுஷ தெய்வத்தை விட்டிருங்க”
நீதிமன்றம் பரபரப்பானது. விசாரணைக்குப் பின் ராமநாதன் விடுவிக்கப்பட்டார்.
“என் மீதுள்ள கோபம் தீர்ந்ததா?”
பச்சைப்புடவைக்காரியின் கால்களில் மீண்டும் விழுந்தேன்.
“நீ இன்னும் என் அன்பை முழுமையாக நம்பவில்லை”
“தாயே! ராமநாதன் நல்லவர். யாருக்காகவோ பழியைத் தன் மீது போட்டுக்கொண்டார். கடந்த சில நாட்களாக அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? உங்கள் ஆட்சியில் அன்பிற்குத் தண்டனை உண்டா என்ன?”
“ராமநாதனின் கர்மக் கணக்கின்படி அவர் இரண்டு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும். ஆனாலும் அவர் அனுபவித்த மன வேதனையைக் கணக்கில் கொண்டு அதை ரத்து செய்தேன்”
“இப்போது வண்டியை ஓட்டிய சேதுவின் மீது வழக்கு வருமே? அதில் அவன் மாட்டிக்கொண்டால் அவனுடைய மன வளர்ச்சி குன்றிய மகளின் நிலை?”
“அவனுக்கு முதலில் ஜெயில் தண்டனை விதிப்பர். மேல்முறையீடு செய்யும் வரை அதை நிறுத்தி வைப்பார்கள். மேல் முறையீட்டில் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனை ரத்தாகும். அபராதம் விதிப்பர். அந்தத் தொகை விபத்தில் இறந்தவன் குடும்பத்துக்குப் போக வேண்டும் என்பார்கள். அதை ராமநாதனே கட்டிவிடுவான்”
“பாவம் அந்த விபத்தில் தங்கள் மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்...''
“சிறுவனாக பிறந்தவனின் கர்மக்கணக்கில் இருந்த மிச்ச சொச்சமும் தீர்ந்து அவன் உயர்ந்த நிலையை அடைந்து விட்டான். அதுவரை வறுமையில் தவித்த அவன் பெற்றோர், விபத்தில் கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையை வைத்து தங்களின் இரண்டாவது மகனை படிக்க வைப்பர். ராமநாதனும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்வான். எல்லோரையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்'' என்றாள் பச்சைப்புடவைக்காரி.
“ஒவ்வொருவரிடமும் அன்பைக் கொட்டுகிறீர்களே தாயே! இப்படிப்பட்ட அன்பரசியின் கொத்தடிமையாக இருக்கும் பாக்கியம் வேண்டும்”
“அந்த வரத்தைப் பெற நீ தவம் செய்ய வேண்டுமே”
“என்ன தவம்...”
“அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். அன்பு குறைந்தாலும் தவம் கலைந்துவிடும். நீ கேட்ட வரம் கிடைக்காது”
“என் தவம் கலையாமல் இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்” என்றேன்.
என் தாய் சிரித்தபடி மறைந்தாள். தனியாக நான் அழுது கொண்டிருந்தேன்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
