தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 23

பெண்பிள்ளை ரகசியம் - 23

பெண்பிள்ளை ரகசியம் - 23


ADDED : ஜூலை 16, 2026 10:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 10:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே

வானம் மேக மூட்டமாக இருந்ததால் அமிர்தமும் கிருஷ்ணவேணியும் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து இவர்கள் இருவருக்கும் இனிப்பை நீட்டிய மைத்ரேயி, “என் மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கு, இன்னைக்கு தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றாள் மகிழ்ச்சியுடன்.

இருவரும் “சந்தோஷம்” என்றனர் கோரஸாக. மைத்ரேயி சென்றதும் ''அவங்க மருமகளுக்கு முதல் குழந்தை இறந்திடுச்சு. அதனால குடும்பமே துக்கத்தில் இருந்தாங்க. இந்த குழந்தையாவது ஆயுள், ஆரோக்கியத்தோட நல்லா இருக்கணும்” என வாழ்த்தினார் அமிர்தம்.

“ஒரு குழந்தையை பறிகொடுக்கிறது கொடுமை. இப்படி தொடர்ந்து ஏழு குழந்தையை ஒருத்தி பறி கொடுத்திருக்கிறாளே அவள் எப்படித்தான் தாங்கினாளோ!”

“அடக்கடவுளே! யார் அவள்”

“அவள் தான் தேவகி”

“ஓ! வேகமா ரகசியத்துக்குள்ள நுழைஞ்சிட்டீங்க போல!”

“ஆமா! பெண்பிள்ளை ரகசியத்தின் 22ம் வாக்கியம் 'தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே' என்பது. முன்பொரு காலத்தில் சுதபஸ், பிருச்னி தம்பதி பக்தியுடன் வாழ்ந்தனர். பெருமாளை நோக்கி அதிக ஆண்டுகள் தவம் புரிந்தனர்.

மனம் மகிழ்ந்த பெருமாள், 'என்ன வரம் வேண்டும்' எனக் கேட்டார். 'எங்களுக்கு உன்னைப் போல மகன் பிறக்க வேண்டும்' எனக் கேட்டனர். 'மூன்று முறை நானே உங்களுக்கு மகனாக பிறக்கிறேன்' என வரம் கொடுத்தார் பெருமாள். முதல் முறையாக இந்த சுதபஸ் பிருச்னி தம்பதிக்கு 'பிருச்னி கர்ப்பன்' என்ற பெயரிலும், இரண்டாம் முறை கஸ்யபர், அதிதி தம்பதிக்கு வாமனராகவும், மூன்றாவதாக வசுதேவர், தேவகிக்கு கண்ணனாகவும் பிறந்தார். கண்ணனாக பிறக்கும் போது தான் தேவகிக்கு எண்ணற்ற போராட்டங்கள்.

அரக்கன் கம்சனின் தங்கை தான் தேவகி. அவளுக்கும், வசுதேவருக்கும் கோலாகலமாக திருமணத்தை நடத்தினான் கம்சன். மணமக்களை தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்த போது அசரீரி கேட்டது. ''கம்சா... தேவகியின் எட்டாவது குழந்தை உன்னை கொல்ல போகிறது'' என்று. அதைக் கேட்டதும் தங்கை என்றும் பார்க்காமல் அவளைக் கொல்ல முயன்றான்.

ஆனால் தங்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையை ஒப்படைத்து விடுவதாக வசுதேவர் வாக்குறுதி அளித்தார். அதனால் அவர்களை தண்டிக்கும் விதமாக சிறையில் தள்ளினான். அவர்களுக்கு குழந்தை பிறந்தால் உடனடியாக தனக்கு தகவல் தர ஆணையிட்டான். பத்து மாதம் கழித்து முதல் குழந்தை பிறந்தது. இதை அறிந்ததும் கம்சன் அந்தக் குழந்தையை சுவரில் அறைந்து கொன்றான். இப்படி தொடர்ந்து ஆறு குழந்தைகளை கொன்றான்”

“அடக் கடவுளே! இப்படி ஆறு குழந்தையை பிறந்ததும் பறி கொடுத்திருக்காளே” என வேதனைப்பட்டார் அமிர்தம்.

''ஒரு வழியா தேவகிக்கு ஏழாவதாக கரு தங்கியது. இந்த முறை ஆதிசேஷன் கருவாக தோன்றினார். கரு வளரும் போது நாராயணன் மாய சக்தியால், சிசுவை வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றினார். அவள் அப்போது கோகுலத்தில் இருந்தாள். பலராமனாக ரோகிணியின் வயிற்றில் பிறக்க வைத்தார் நாராயணன்.

எட்டாவதாக கர்ப்பம் தரித்தாள் தேவகி. அந்த கருவில் தானே சிசுவாக தோன்றினார். அவரே பகவான் கிருஷ்ணர். குழந்தையைக் கண்ட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கண்ணன் பிறந்த போது மழை பெய்தது. நட்சத்திரங்கள் பிரகாசமாக இருந்தன. மரங்கள் செடிகள் பூத்துக் குலுங்கின. மயில்கள் நடனமாடின, பறவைகள் கூவின. காற்று தென்றலாக வீசியது. எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சி நிறைந்தது. பூமியில் பிறந்த அந்த குட்டிக் கண்ணன் மலர்ந்த தாமரையாக காட்சியளித்தான். கையில் சங்கு, சக்கரம், கதாயுதம், மார்பில் ரத்தின பதக்கம், நீலமேனி, கிரீடம், குண்டலம் என தெய்வமாக காட்சியளித்தான் கண்ணன். தேவகியும் வசுதேவரும் அவனைக் கண்டு மகிழ்ந்தனர்.

'தெய்வமே... நீயே நாராயணன் நீயே உலகின் ஆதாரம். நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்' என்றனர். முந்தைய காலத்தில் இருவரும் தவம் செய்து தன்னிடம் வரம் பெற்றதை விளக்கினார்.

இப்படியாக பெற்றோரின் முற்பிறவியை நினைவுபடுத்திய பிறகு தான் தெய்வம் என்பதை மறக்கச் செய்தான். அவர்களும் கடவுள் என்பதை மறந்து குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர். இப்படியாக தேவகியைப் போல கடும் தவம் செய்து எல்லாம் வல்ல நாராயணனை பெற்றெடுக்கவில்லையே.

அவளைப் போல மனோதிடம், பொறுமை, பக்குவம் என்னிடம் இல்லையே. அதனால் திருக்கோளுரை விட்டு செல்கிறேன் சுவாமி என ராமானுஜரிடம் தெரிவித்தாள் பெண் பிள்ளை” எனச் சொல்லும் போதே உணர்ச்சிவசப்பட்டார் கிருஷ்ணவேணி.

கண்ணனை வயிற்றில் சுமந்த தேவகி பற்றி கேட்டதும் இசைஞானியார் தான் என் நினைவுக்கு வருகிறார். நாயன்மாரான சுந்தரரை பத்து மாதம் வயிற்றில் சுமக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். சிவபக்தையான இவர் சைவம் தழைக்க பாடுபட்டார்.

தன் மகன் சுந்தரரை சிவனாகவே கருதி வளர்த்தார். பக்தர்கள் அனைவரையும் தன் குழந்தையாக கருதினார். திருவாரூரில் கவுதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாக பிறந்த இவர், திருவாரூர் தியாகராஜர் மீது பக்தி கொண்டிருந்தார். குழந்தை பருவம் முடிந்து திருமண வயதை அடைந்ததும் திருநாவலுார் சடையனார் என்பவரை திருமணம் செய்தார்.

சடையனாரும் சிவபக்தர் தான். சடையனாரிடம் பதிபக்தியுடனும் சிவபெருமானிடம் சிவபக்தியுடனும் அழகாக வாழ்ந்து வந்தார். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை தர்ம வழியில் வாழ்வு நடத்த வேண்டும் என்பதற்காக கருவில் சுமக்கும் போது சிவ துதிகளை குழந்தைக்கு கற்பித்தார்.

இசையின் மூலம் சிவனை பாடினார் இசைஞானியார். மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு சுந்தரரை மகனாக பெறும் பேறு பாக்கியத்தை அருளினார். சிவன் கோயிலிலும் 63 நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள் இருப்பர். அதில் ஒருவராக இசைஞானியும் இருப்பது சிறப்பு. சுந்தரரை மகனாக பெற்றதால் அவரது தாய் இசைஞானியார், தந்தை சடையனாரை நாயன்மாராக கொண்டாடி மகிழ்கிறோம்.

“உண்மையில் தேவகியும் இசைஞானியாரும் பெரும் பேறு பெற்றவர்கள். தேவகி கண்ணனை வயிற்றில் சுமந்தவள், இசைஞானியாரோ சுந்தரரை வயிற்றில் சுமந்தவர். சிவன் கோயில் தோறும் சுந்தரரும் இருப்பார். இந்த இரண்டு பெண்களும் பக்தியால் உயர்ந்தவர்கள். ம்... அவர்கள் பெற்ற வரம் அப்படி. சரி அடுத்த வாக்கியம் என்ன” எனக் கேட்டார் அமிர்தம் ஆவலுடன்.

“இந்த வாக்கியத்தின் தொடர்ச்சியான 'ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே' என்பது தான் அடுத்த ரகசியம்” என்றார் கிருஷ்ணவேணி.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us