தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 14

பச்சைப்புடவைக்காரி - 14

பச்சைப்புடவைக்காரி - 14


ADDED : ஜூலை 16, 2026 10:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 10:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஷமும் விஷமுறிவும்

அன்று பச்சைப்புடவைக்காரியின் கோயிலில் அற்புதமான தரிசனம். மன நிறைவுடன் திரும்பிய போது எனக்கு தெரிந்த கோயில் ஊழியர் வந்தார்.

“உங்களுக்கு தொழிலதிபர் செல்வத்தை தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கேன். பழக்கம் கிடையாது.”

“அவன் செய்யாத பாவங்களே கிடையாது சார். தன்னோட கூட்டாளிங்க சொத்துக்கள ஆட்டையப் போட்டான். அது தெரிஞ்சதும் அவனோட கூட்டாளி ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்டான். தன்கிட்ட வேலை பாத்த பெண்ணை கற்பழிச்சிட்டான். அந்தக் கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. அவன் மீது புகார் கொடுத்த அந்தப் பெண்ணோட குடும்பத்தை பாடா படுத்திக்கிட்டிருக்கான் சார். ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்க மாட்டேன்னு செல்வம் மேல நடவடிக்கை எடுத்ததும், ஆள் வச்சி அவரை கொன்னுட்டு பிணத்துக்கு முதல் மாலை போட்டவன் சார் அந்த படுபாவி”

“அந்தாளு கதைய என்கிட்ட ஏன் சொல்றீங்க?”

“அவன் செஞ்ச பாவம் சும்மா விடுமா? அவனோட ஒரே பொண்ணுக்கு திடீர்னு புத்தி கலங்கிடுச்சி. காச் மூச்சுன்னு கத்தறா. எல்லாரையும் அடிக்கறா. அவ கால்ல சங்கிலியை கட்டி வச்சிருக்காங்க.

“வெள்ளி அன்று கோயிலுக்கு செல்வது விசேஷம். அன்று வரும் பக்தர்களுக்கு எள்சாதம் கொடுத்தா குணமாயிருவான்னு ஜோஸ்யக்காரன் சொன்னானாம். செஞ்ச பாவத்த பகிர்ந்து கொடுக்கற வழியாம்... விஷயம் தெரியாம நீங்க அத வாங்கிடக் கூடாதுன்னுதான் எச்சரிக்கை செய்யலாம்னு...” ஊழியர் சென்று விட்டார். ஒருவர் மனம் உவந்து தர்றது எதுவாக இருந்தாலும் பெற்றுக் கொள்வதுதான் பண்பு. கொடுக்கப்படுவது விஷமாக இருந்தாலும் அதை வாங்கிக் குடிப்பதே நாகரிகம் என திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.

என்றாலும் ஒரு பாவியின் கையில் பிரசாதம் வாங்க தயக்கமாக இருந்தது. அவன் பாவத்தை பகிர்ந்து கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். எள் சோறு கொடுத்தால் போதும், கொலை, கற்பழிப்பு, துரோகம் போன்ற பாவங்களில் இருந்தும் தப்பிக்கலாம் என செல்வம் நினைத்தால் இன்னும் அதிகமாக பாவம் செய்வானே!

கோயிலை பெருக்கிக் கொண்டிருந்த வயதான பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள். இந்த வயதில் இவ்வளவு கஷ்டமான வேலையைச் செய்கிறாளே என நினைத்தேன்.

“இதை விடச் சிலர் மனதிலுள்ள அழுக்கை எடுப்பது தான் எனக்கு கஷ்டமான வேலையாக இருக்கிறது”

தாயே எனக் கதறியபடி காலில் விழுந்தேன்.

“உன் மனதிலுள்ள அழுக்கைப் பற்றித் தான் சொன்னேன். “தீயவன் கொடுப்பதை வாங்கினால் தீமை உன்னிடம் ஒட்டிக் கொள்ளுமோ? பெருந்தொற்று காலத்தில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தங்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் கடமையைச் செய்தார்கள் தெரியுமா? அதில் எத்தனை பேர் அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்பதை நீ அறிவாய் அல்லவா? அவர்கள் எங்கே? செல்வம் கொடுப்பதை வாங்கினால் அவன் செய்த பாவம் ஒட்டிக் கொள்ளும் என பயப்படும் நீ எங்கே?”

நான் தலைகுனிந்தேன்.

“சக மனிதர்களைக் கெடுக்க வேண்டும் என நினைக்கும் ஒருவன் இன்று மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து கோயிலுக்கு வந்திருக்கிறான். அதை வாங்காமல் அவனை அவமதிக்கப் போகிறாயா என்ன? அப்படி செய்தால் தான் பாவம்”

“அவனை மன்னித்து விட்டீர்களா?”

“மன்னிக்கும்படியான பாவங்களை அவன் செய்யவில்லையே! அதைப் பற்றிக் கவலைப்படாதே! அவன் தருவதை விருப்பமுடன் வாங்கு. அவனிடம் நல்ல வார்த்தை பேசு. நல்ல வழியைக் காட்டு”

கோயிலின் வாசலில் நின்றிருந்த செல்வத்திடம் போனேன். கொடுப்பது எள் கலந்த சாதம் எனத் தெரிந்ததும் அனைவரும் விலகினர். செல்வம் கொடுத்ததை நான் வாங்கிச் சாப்பிட்டேன். இன்னும் இரண்டு கவளம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். 'அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்' என செல்வத்திற்காக வேண்டினேன்.

“இந்தப் பாவி கொடுத்ததை யாரும் வாங்கலை. நீங்க மட்டும்...''

“பாவின்னு யாருக்கும் முத்திரை குத்திர முடியாது செல்வம். ஏதோ பலவீனமான நேரத்துல தப்பு செஞ்சிட்டீங்க. நீங்க திருடினீங்க, கொலை செஞ்சிருக்கீங்கன்னு தெரிஞ்சாலும் உங்க அம்மா காட்டற அன்பு குறையாதே! பச்சைப்புடவைக்காரி நம்மளை பெத்த தாய்க்கும் மேல”

“அவ என்ன மன்னிப்பாளா”

“செஞ்ச வினையிலருந்து யாரும் தப்பிக்க முடியாது. இனி பாவம் செய்யாதீங்க. யாருக்கெல்லாம் துரோகம் செஞ்சீங்கன்னு யோசிங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்சத கொடுத்து வாழ வையுங்க.”

“அப்படி செஞ்சா என் மகளுக்கு புத்தி தெளியுமா?”

“நீங்க விஷத்தை குடிச்சிருக்கீங்க. அதுக்கான விளைவு இருக்கத்தான் செய்யும்? அன்பு காட்டறது, அள்ளி அள்ளிக் கொடுக்கறது, மனசார மன்னிப்பு கேக்கறது இதெல்லாம் எனக்குத் தெரிஞ்ச விஷ முறிவு வைத்தியம். விஷம் தன்னோட வேலையை செய்யும். விஷ முறிவும் தன்னோட வேலையை செய்யும். எல்லாத்துக்கும் மேல அன்பே வடிவான பச்சைப்புடவைக்காரி இருக்கா. அவ பாத்துப்பா. எதையும் ஏத்துக்கற பக்குவத்தோட வீட்டுக்குப் போங்க. நல்லதே நடக்கும்.”

என் காலில் விழப்போனவரைத் தடுத்து பச்சைப்புடவைக்காரி இருந்த திசை நோக்கி விழச் செய்தேன். வெளியே பச்சைப்புடவைக்காரி அதே தோற்றத்தில் நின்றிருந்தாள்.

“நீ பேசிய வார்த்தை, அதைவிட முக்கியமாக நீயாக மனம் விரும்பி வாங்கிக் கொண்ட பிரசாதம் செல்வத்தை நிலை குலையச் செய்து விட்டன. அடுத்த சில நாளில் தன் சொத்தின் பெரும் பகுதியை கூட்டாளிகளின் வாரிசுகளுக்குக் கொடுப்பான். முடிந்தவரை நல்லதைச் செய்வான்.

“தான் கற்பழித்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். அவள் அவனுடைய மன்னிப்பை ஏற்க மாட்டாள். வழக்கு நடக்கும். நீதிமன்றத்தில் செய்த குற்றத்தை ஒத்துக் கொள்வான். பத்தாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். அங்கு அவன் மனம் பண்படும். அதன் பின் சிறுநீரக பாதிப்பால் சிறையிலேயே இறப்பான்”

“ஐயோ! தண்டனை கொஞ்சம் கூட குறையவில்லையே!”

“அவன் செய்த பாவம் அப்படி. ஆனால் அவனுடைய மகள் குணம் அடைந்து நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வாள். நல்ல குழந்தைகளைப் பெறுவாள். அவனுடைய வம்சம் தழைக்கும். செல்வம் கேட்டதைக் கொடுத்துவிட்டேன்”

“அவன் கேட்டதற்கு மேலும் கொடுத்து விட்டீர்கள், தாயே! அவன் மகளைக் காப்பாற்றி அவனை நல்லவனாக்கி விட்டீர்கள். அவனுடைய அடுத்த பிறவி நன்றாக இருக்கவும் வழி செய்து விட்டீர்கள்.”

“உனக்கு என்ன வேண்டும் சொல்.”

“பாவம் செய்பவர்களைக் கண்டால் பற்றிக் கொண்டு வருகிறது. பாவிகளையும் நேசிக்கும் அளவிற்கு மனதில் அன்பு வேண்டும்.”

“அது இறைநிலை. என்னோடு ஒன்றும்போதுதான் அந்த நிலை கிடைக்கும்”

“அந்த நிலையை நோக்கி நான் செய்யும் தவமாக என் வாழ்க்கை அமைய வேண்டும்.”

கோயில் வாசலில் என்னைச் சிலையாக நிற்க வைத்து விட்டு அவள் மறைந்து விட்டாள்.

-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us