தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 32

பெண்பிள்ளை ரகசியம் - 32

பெண்பிள்ளை ரகசியம் - 32


ADDED : செப் 18, 2026 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனந்தாழ்வான் போலே

அமிர்தம் குடையுடன் பூங்காவுக்குள் நுழைந்தார். “தினம் நனைஞ்சுக்கிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதான் மருமக நனையாம வாங்க அத்தைன்னு குடை கொடுத்தா” என சிரித்தார்.

“குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலேங்குற வாக்கியத்தை சொல்லப் போறேன்னு

தெரிஞ்சு எடுத்துட்டு வந்தீங்களோன்னு நெனச்சேன்” என்றார் கிருஷ்ணவேணி.

''அப்படி போடு அருவாள! இன்று 31 ஆவது ரகசியம் தானே”

“ஆமா! நாம நமக்கு தேவைப்படும் போது தான் குடையை பயன்படுத்துவோம். ஆனால் அனந்தாழ்வான் அப்படி இல்லை.பெருமாளுக்குக் குடையாக எப்போதும் கூடவே இருப்பான்” என கிருஷ்ணவேணி உற்சாகமுடன் சொல்லத் தொடங்கினார்.

“ரிஷிகளில் ஒருவரான காசியபருக்கு கத்ரு, வினதை என்ற மனைவிகள் இருந்தனர். இருவரும் புத்திர பாக்கியம் வேண்டும் என கேட்டனர். இதில் கத்ரு பாம்பு இனத்தவள். அவள் தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்றாள். வினதையோ பறவை இனத்தவள். தனக்கு அறிவுள்ள இரண்டு பிள்ளைகள் வேண்டும் என்றாள். அதன்படியே வினதையின் மகன்களாக அருணனும் கருடனும் பிறந்தனர். பெருமாளுக்கு பரமபதத்தில் தினமும் சேவை செய்பவர்களை நித்திய சூரிகள் என்பார்கள்.

அனந்த, கருட, விஸ்வக்சேனாதிகள் என்பது அந்த வரிசை. இதில் அனந்தன் என்ற ஆதிசேஷனே முதலாவதாக இடம் பெறும் நித்தியசூரி. இவரையே அனந்தாழ்வார் என நாம் அழைக்கிறோம். ஏனெனில் இவர் எப்போதும் மகாவிஷ்ணுவுடனே இருப்பவர். பூமியில் விஷ்ணு அவதாரம் எடுக்கும் போதெல்லாம் அவரும் மண்ணில் அவதரிப்பார். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உற்ற துணையாக சேவை செய்வார். அவருக்கான ஒரே வேலை கடவுளுக்கு சேவை செய்வது மட்டும் என்பதால் 'அனந்தாழ்வார்' என அழைக்கப்பட்டார். வடமொழியில் 'ஆதிசேஷன்' என்று பெயர்.

தமிழில் இவரை 'அனந்தன்' என்போம். 'சேஷன்' என்றால் நல்ல தொண்டன். எல்லா காலங்களிலும் எல்லா தொண்டுகளையும் முதலில் இருந்தே செய்வதால் 'ஆதிசேஷன்' எனப்பட்டார். அனந்தன் என்றால் எல்லையற்ற மகிமை கொண்டவர் என பொருள்.

இந்த ஆதிசேஷன் திருமாலின் எல்லா நிலைகளிலும் தொண்டு செய்பவர். திருமாலின் ஐந்து நிலைகள் என்ன என்றால் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை. முதலில் வரும் பரத்துவம் என்றால் வைகுண்டத்தில் பரமபத நாதனாக அமர்ந்திருக்கிறார் திருமால். அங்கே ஆசனத்தின் மீது குடையாக ஆதிசேஷன் இருப்பார். அடுத்து இரண்டாவதாக வியூகம் என்பது பாற்கடலில் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பது.

மூன்றாவதாக விபவம். ராமாவதாரத்தில் ராமருக்கு தொண்டு செய்த லட்சுமணன் வேறு யாரும் அல்ல ஆதிசேஷனின் அவதாரம் தான்.அந்தர்யாமி என்பது நம் மனதுக்குள் இருக்கும் பெருமாளின் நிலை.

கோயில்களில் பெருமாள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கே ஆதிசேஷன் உடன் இருப்பதாக ஐதீகம். பெருமாளுடனே அவர் எப்போதும் காட்சி தருவார். திருமாலின் எல்லா நிலைகளில் மட்டுமில்லாமல் எல்லா யுகத்திலும் ஆதிசேஷன் இருப்பதை நாம் பார்க்கிறோம். கிருத யுகத்திலே மகாவிஷ்ணுவுக்கு ஆதிசேஷனாகவும், திரேதா யுகத்திலே ராமருக்கு துணையாக லட்சுமணன் ஆகவும், துவாபர யுகத்திலே கிருஷ்ணனுக்கு துணையாக அவரது அண்ணன் பலராமராகவும், கலியுகத்தில் ராமானுஜராக இருந்து பெருமாளுக்கு 24 மணி நேரமும் சேவை செய்பவர் இவர் ஒருவரே.

இந்த ஆதிசேஷன் எப்படிப்பட்டவர் தெரியுமா? பெருமாள் எங்கு போகும் போது அவருக்கு குடையாக இருப்பார். அவர் உட்கார்ந்தால் இந்த ஆதிசேஷன் சிம்மாசனம் ஆகி விடுவார். அவர் நின்றாலோ அவருக்கு கால் செருப்பாக மாறுவார். சரி எதுவும் வேண்டாம் என படுத்தால் போதும் உடனே படுக்கை ஆவார். அது மட்டுமல்லாமல் பெருமாளுடன் எப்போதும் உடன் இருக்கும் விளக்காக இருப்பார். அவர் உடுத்தும் பட்டாடையாகவும் அணைத்துக் கொள்ளும் தலையணை என எல்லா தொண்டுகளையும் அவரே செய்வார். இப்படி ஆதிசேஷனாகிய அனந்தன் பல வடிவங்களில் சிறப்பான சேவை செய்தது போல நான் எந்த தொண்டும் செய்யவில்லையே சுவாமி.எனக்கு அப்படிப்பட்ட பாக்கியம் இல்லையே அதனால் நான் திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? வெளியேறுகிறேன் என புறப்பட்டாள் அந்தப் பெண்” என முடித்தார் கிருஷ்ணவேணி.

''இப்படி விஷ்ணுவை பிரியாமல் இருக்கும் அனந்தாழ்வானை கேள்விப்படும் போது எனக்கு சிவன் நந்தியின் பிணைப்பு தான் ஞாபகத்துக்கு வருது. சிவன் கோயிலுக்கு போனால் முதலில் நாம் பார்ப்பது நந்தியைத் தான். சிவலிங்கத்துக்கு நேர் எதிராக எப்போதும் சிவனை பார்த்தபடி இருக்கும் நந்தி அவருக்கு வாகனம் மட்டும் இல்லை. சிவனின் உயிர், உடல், பாதுகாவலர், அன்பன் ஏன் முதல் சீடன் எனலாம். இவர்களின் பிணைப்பு பக்தியின் உச்சம்.

சிலாத முனிவர் புத்திர பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சிவன், 'உனக்கு பிறக்கும் மகன் எனக்கு நிகரானவன், என்றும் வாழும் சிரஞ்சீவி' என வரம் கொடுத்தார். அதன்படி யாக குண்டத்தில் இருந்து தோன்றிய குழந்தையே நந்தி. அவருக்கு இயற்பெயர் நந்திகேஸ்வரர்.

சிறு வயதிலிருந்தே வேதம், சாஸ்திரத்தை படித்து சிவனையே குருவாக ஏற்றார். சிவன் எங்கே போனாலும் நந்தியின் மீது தான் போவார். அதனாலேயே அவருக்கு ரிஷப வாகனன் என்று பெயர். ஆனாலும் நந்தியின் முக்கிய வேலை என்ன தெரியுமா? கைலாயத்தில் துவார பாலகராக இருப்பது. சிவன் தியானத்தில் இருக்கும்போது பார்வதியே கூட நந்தியின் அனுமதி இன்றி நுழைய முடியாது. ஒரு சமயம் சிவன் பார்வதிக்கு சிவாகமம், யோக ரகசியத்தை உபதேசம் செய்ய பார்வதி களைப்பில் அப்படியே உறங்கி விட்டார். ஆனால் நந்தி அதை கேட்டு மனப்பாடம் செய்தார்.

பின்னாளில் அதை சனகாதி முனிவர்களுக்கு நந்தி உபதேசித்தார். இவ்வளவு சிறப்பான நந்தி கேட்ட ஒரே வரம் 'சிவபெருமானே... எப்பொழுதும் நான் உங்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும். உங்களைத் தவிர நான் வேறு எதையும் பார்க்கக் கூடாது. அதனால் தான் இன்றும் சிவன் கோயில்களில் நந்தி சிவலிங்கத்தையே பார்த்தபடி உள்ளது. கோயிலில் சிவனுக்கு முன்பாக நந்தியிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது ஐதீகம். அதோடு நந்தியின் காதில் வேண்டுதலைச் சொன்னால் அவர் சிவனிடம் சொல்லி நடத்திக் கொடுப்பார். அதோடு 'நந்தி' என்றால் மகிழ்ச்சி, தர்மம் என பொருள். அதனால் தான் நந்தியை வணங்காமல் சிவனை வணங்கினால் பயன் இல்லை என்பார்கள்” என நந்தியின் பெருமையைச் சொல்லி முடித்தார் அமிர்தம்.

“பெருமாளுக்கு ஆதிசேஷன் மாதிரி, சிவனுக்கு நந்தி மாதிரி நமக்கும் ஒரு ஆத்ம சம்பந்தம் இருக்குன்னா அது கடவுள் தான்.நாம அவன் மீது பக்தி பண்ணும் போது நமக்கு என்ன நன்மை செய்யலாம்னு அவன் யோசிக்கிறான். அவன் கால்களை விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டா போதும். அவன் நமக்காக இறங்கி வந்து நல்லதை செய்வான். அனந்தாழ்வான், நந்தி இதைத்தான் நமக்குச் சொல்றாங்க”

“ம்... இன்னிக்கு மழை வரல, குடைக்கு வேலையில்ல. நாம பக்தி செஞ்சா கடவுளே நமக்கு குடையா இருந்து காப்பாற்றுவார். இந்த ஞானம் நமக்குள்ள இன்னிக்கு விதையா விழுந்திருக்கு. சரி, அடுத்த ரகசியம் என்ன?

“கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே”



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us