ADDED : நவ 26, 2026 10:51 AM

கொங்கு பிராட்டியைப் போலே
சென்னையிலிருந்து நெல்லை போகும் வந்தே பாரத்தில் அமிர்தமும் கிருஷ்ணவேணியும் ஏறியதுதான் தாமதம் வண்டி வேகம் எடுத்து ஓடியது.அமிர்தத்துக்கும், கிருஷ்ணவேணிக்கும் உட்கார இருக்கை வசதியாக இருந்தது. நெல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்று நவதிருப்பதிகளுக்கு செல்வது என முடிவு.
“உங்க மூத்த மகன் ரயில்வே ஸ்டேஷன் வந்துடுவாரில்ல?”
“11:30 மணிக்கு அங்க இருப்பான். இல்லன்னா அடிதான் விழும்.”
“ஓ! அடி வாங்கினேனோ கொங்கு பிராட்டியைப் போலே... ஆரம்பிக்கப் போறீங்க... அதானே கிருஷ்ணவேணிம்மா”
“அதே தான்” என்றார் கிருஷ்ணவேணி. அவர் ஆரம்பிப்பதற்கும் ரயிலில் ஸ்நாக்ஸ் பரிமாறவும் சரியாக இருந்தது. தொடர்ந்து ரெடிமேட் மசாலா டீ பொட்டலம். அதை பேப்பர் கப்பில் கொட்டியதும் சுடச்சுட நீர் ஊற்றப்பட்டது. குச்சியில் கலக்க கலக்க மசாலா டீ வாசனை மூக்குக்கு வந்து முத்தமிட்டது. இருவரும் ரசித்து குடித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும், குரல் உயர்த்தி சொல்லத் தொடங்கினார் கிருஷ்ணவேணி.
“திருக்கோளூர் பெண் பிள்ளை கொங்கு பிராட்டியை நினைத்தபடியே சொல்லத் தொடங்குகிறாள். வைணவ சம்பிரதாயத்தில் குருவுக்கு முக்கியத்துவம் அதிகம். குருவின்
சம்பந்தம் கிடைத்தால் கடவுளின் சம்பந்தம் தானாக வந்து விடும். ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் வைணவ பீடத்தை அலங்கரித்தார். அப்போது தீவிர சைவனான
சோழ மன்னன் வைணவர்களுக்கு தொல்லை கொடுத்தான். இப்படியே போனால் ராமானுஜரை இழக்க நேருமே என பயந்தார் சீடரான கூரத்தாழ்வார். அவரை
காப்பாற்றுவதற்காக ராமானுஜரின் காவி உடையை தான் உடுத்திக் கொண்டு ராமானுஜர் போல துறவி வேடமிட்டார். அதே போல அவர் உடுத்தி இருந்த வெள்ளை
ஆடையை ராமானுஜருக்கு கொடுத்து அங்கிருந்து தப்பியோட வேண்டினார்.
சீடர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த ராமானுஜரும், மற்ற சில சீடர்களுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அந்த நேரத்தில் கூரத்தாழ்வார், பெரிய நம்பியை சோழ அரசின் காவலாளி வளைத்துப் பிடித்தான். கூரத்தாழ்வாருக்கும், பெரிய நம்பிக்கும் என்ன ஆனதோ என கவலைப்பட்டுக் கொண்டே ராமானுஜரும் சென்றார். ரங்க நாதனே துணையாக நிற்க வேண்டும் என வேண்டியபடி நடந்தார்.
ஏழு நாள் சாப்பிடாமல் கொங்கு நாட்டில் நீலகிரி மலைத் தொடரை அடைந்தார். கடுமையாக மழை பெய்ததால் மாலை சீக்கிரமே இருள் சூழ்ந்தது. அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி சீடர்கள் ஓடினர். அங்கு இருந்த வேடர்கள் சிலர், 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' என கேட்க 'ஸ்ரீரங்கத்தில் இருந்து வருகிறோம்' என்றனர்.
உடனே வேடர்கள் வணங்கி, 'ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார்(ராமானுஜர்) நலமாக இருக்கிறாரா' என கேட்க சீடர்கள் வியந்தனர். உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும் எனக் கேட்டனர். அதற்கு வேடர் தலைவன்,''நாங்கள் நல்லானின் சீடர்கள், எங்களுக்கு ராமானுஜரின் பிரபாவத்தை நல்லான் சொல்லி இருக்கிறார். 'உய்ய ஒரே வழி உடையவர் திருவடி' என அவர் உபதேசம் செய்துள்ளார்'' என்றான்.
ஆச்சரியப்பட்ட சீடர்கள், 'இவர்தான் எம்பெருமானார்' என ராமானுஜரை காட்ட வேடர்கள் விழுந்து ராமானுஜரின் திருவடியை பற்றிக் கொண்டனர். இரவு உணவாக தேன், தினை மாவு கொடுத்தனர்.
மறுநாள் நல்ல உணவு தர வேண்டும் என மலை மீதுள்ள கிராமத்தில் வசிக்கும் கட்டளைவாரி என்பவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் கட்டளைவாரி என்பவர் இல்லை.
அவரது மனைவி மட்டும் இருந்ததால் அவள் சீடர்களை வரவேற்று அனைவரும் உணவருந்த வேண்டும் என வேண்டினாள். ராமானுஜரின் சீடர்களின் மனதில், 'இந்தப் பெண் எப்படிப்பட்டவளோ... உணவை எப்படி சாப்பிடுவது' என யோசித்தனர். அவர்களின் மனநிலையை உணர்ந்த அவள், 'பயப்படாதீர்கள்; நான் எம்பெருமானாரின் சிஷ்யை' என அதிர்ச்சி அளித்தாள்.
இவள் எப்போது எம்பெருமானாரின் சிஷ்யை ஆனாள் என சீடர்கள் குழம்பினர். அதற்கு அவள் தன் முன் கதையை சொல்ல ஆரம்பித்தாள். சீடர்களும் ஆர்வமாயினர்.
'என் பெயர் சுமதி. கொங்கு நாட்டைச் சேர்ந்தவள். ஒரு சமயம் அங்கு பஞ்சம் வந்தது. நானும் கணவரும் பிழைப்பு தேடி ஸ்ரீரங்கம் சென்றோம்.
அங்கு சில காலம் வாழ்ந்த போது விசித்திரமான காட்சியை கண்டேன். தினமும் ஒரு துறவி பிச்சை பெற ஏழு வீட்டுக்குச் சென்று அவர்கள் தரும் பிச்சையை
வாங்கிச் சென்றார்.
அந்த துறவியை ஒரு பக்கம் மன்னர்கள், செல்வந்தர்கள் விழுந்து வணங்கினர். மறு பக்கம் இவர் ஏன் பிச்சை எடுக்கிறார் என விசாரித்த போது 'அவரே எம்பெருமானார்' என அறிந்தேன். அப்படி ஒருமுறை அவர் பிச்சை எடுக்க வரும் போது, 'செல்வந்தர்களும் மன்னர்களும் தங்களின் திருவடியில் விழுந்து கிடக்க நீங்களோ பிச்சை வாங்குகிறீரே... அவர்களிடம் இல்லாதது இந்த மக்களிடம் என்ன உள்ளது' எனக் கேட்டேன்.
'நான் அவர்களுக்கு கடவுள் விஷயத்தில் நல்ல வார்த்தைகள் சொல்வதால் இப்படி செய்கிறார்கள்' என் பதில் அளித்தார் எம்பெருமானார்.
'அந்த நல்ல வார்த்தைகளை எனக்கும் சொல்லுங்களேன்' என இவள் கேட்க 'என் மடத்திற்கு வந்தால் சொல்வேன்' எனச் சொல்லி புறப்பட்டார் எம்பெருமானார். நானும் மடத்துக்குச் சென்றேன். பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து காதில் மந்திரங்களை ஓதினார். இது ஒரு புறம் நடக்க சில காலம் கழித்து கொங்கு நாட்டில் மழை பெய்ய பஞ்சம் நீங்கியது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்படும் போது எம்பெருமானார் காதில் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வரவில்லை. அதனால் மடத்துக்கு போய் அந்த நல்ல வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள்' என வேண்டினேன். அவரும் சாந்தமுடன் உபதேசம் செய்தார். கடைசியாக புறப்படும் போது 'சுவாமி உங்கள் நினைவாக ஏதாவது பொருள் தாருங்கள்' எனக் கேட்டதற்கு எம்பெருமானார் தன் காலணியைக் கொடுத்தார். அத்துடன் இங்கு வந்த நான் குடும்பமாக தங்கினேன்' என்றாள்.
'நான் சொன்னதை நம்பி நீங்கள் எல்லோரும் பயப்படாமல் இங்கு உண்ணலாம்' என்றாள்.
ராமானுஜர் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். கூரத்தாழ்வாரின் வெள்ளைத் துணி அணிந்திருந்ததால் அவளுக்கு ராமானுஜரை அடையாளம் தெரியவில்லை. போதாக்குறைக்கு அங்கு இருட்டு வேறு. சீடர்கள் அவளிடம், 'ராமானுஜரின் காலணியை காட்டுங்கள்' என ஆர்வமாக கேட்க அவளும் அதை தலையில் சுமந்து வந்தாள்.
'ராமானுஜரிடம் உபதேசம் பெற்றது உண்மையானால் எங்களில் யார் ராமானுஜர் என்பதை நீயே சொல்' என்றனர். விளக்கு ஏற்றி வந்து சீடர்களின் கால்களை வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தாள். ராமானுஜர் முன்பு வந்ததும் அவரது திருவடியை கண்டு திகைத்துப் போனாள். விழுந்து நமஸ்கரித்து கண்ணீரால் நனைத்தாள். அவளைத் தேற்றி, 'கொங்கு பிராட்டி' எனப் பெயரிட்டு அங்கீகாரம் அளித்தார் ராமானுஜர்.
திருக்கோளூர் பெண் பிள்ளை போல கொங்கு தேசத்தில் இந்த கொங்கு பிராட்டி. இங்கே இந்த வாக்கியத்தில் வரும் 'அடி வாங்குதல்' என்பதற்கு காலணியை கேட்டு வாங்குதல் எனப் பொருள்” என சொல்லி முடித்தார் கிருஷ்ணவேணி.
கதையை சொல்லி முடிக்கவும் இரவு உணவு வந்து சேர்ந்தது. தயிர் புளிப்பில்லாமல் இருக்கவே இருவரும் விரும்பி சாப்பிட்டனர்.
“கொங்கு பிராட்டியை பற்றி கேட்டதும் எனக்கு திலகவதியாரின் பக்தி தான் நினைவில் முந்தி வந்து நின்னது”
“நின்னதை இந்த ரயிலுடன் சேர்த்து ஓட விடுங்களேன் கேட்போம்”
“நான் சொல்ல தயார் தான், ஆனா திருநெல்வேலி வந்தாச்சே”
இரவு 11:00 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது வந்தே பாரத் ரயில். கிருஷ்ணவேணியின் உறவினரின் மகன் கோவிந்தன் தயாராக நின்றிருந்தான். ரயிலை விட்டு இறங்கியதும் இருவருக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை பார்க்கப் போகிறோம் என்ற பரவசம் ஏற்பட்டது. மகிழ்ச்சியில் ஓம் நமோ நாராயணாய என உச்சரித்தபடியே கோவிந்தனுடன் வீட்டுக்கு நடந்தனர்.
-முற்றும்
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.
