ADDED : செப் 27, 2024 09:06 AM
நிலைக்காத பணத்தின் பின்னே மனிதன் ஓடுகிறான். இது பற்றி காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார்...
''பெற்றோர் விட்டுப் போன வீடு, வாசல் எல்லாம் நாளடைவில் பழசாகி விடும். அவ்வப்போது மராமத்து செய்யாது விட்டால் குடியிருக்க முடியாது. சொந்தமா வயல் உள்ளவர்கள்... வருஷா வருஷம் முதலீடு செய்யணும். அதன் பிறகே மகசூல் பார்க்க முடியும். எத்தனை உரம் இட்டாலும் சத்து இல்லாமல் போகும் நிலமும் உண்டு.
மழை இல்லாமல் போவது, பூச்சி, புழுக்களால் பயிர் பாதிப்பது, அடைமழையால் பயிர் அழுகுவது என எத்தனையோ கஷ்டம். இவை எல்லாவற்றுக்கும் மேலே ஒரு நபருக்கு இவ்வளவு தான் சொத்து இருக்க வேண்டும் என நில உச்சவரம்பு சட்டம் இருக்கு! இதுதவிர சொத்துக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சொத்துக்காக மனிதன் பலவிதங்களில் தப்பும் செய்கிறான். பிறருக்கு நஷ்டம் அல்லது கஷ்டத்தை உண்டாக்கி தனக்கு சாதகமாக்கி கொள்வது, பொய்க் கணக்கு எழுதுவது, பினாமியாக சொத்து எழுதுவது என எத்தனையோ விஷயங்களில் ஈடுபடுகிறான். இதனால் பாவமூட்டை பெரிதாகிக் கொண்டே போகிறது.
என்ன தான் சொத்தை பாதுகாத்தாலும் கடைசியில் ஒரு நாள் 'காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என உலகை விட்டே மறைந்து விடுகிறான்.
அரண்மனை மாதிரி வீடு இருக்கும். பெட்டியில் கோடி கோடியாக பணமிருக்கும். அத்தனையையும் விட்டு விட்டு, ஒருநாள் உலகை விட்டே கிளம்ப வேண்டியிருக்கிறது. நம்மைக் கடவுளுடன் சேர்க்கும் உண்மையான சொத்து 'ஞானம்' (கடவுளை அறியும் வழி). அதை அடைய ஆசைப்படுங்கள்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com