ADDED : நவ 14, 2025 08:04 AM

காலங்கி நாதர்
“போகரின் புத்திசாலித்தனத்தை அறிந்து மெய்சிலிர்த்தேன். உலோகங்களை தங்கச் சிலையாக வடிக்கும் ஆற்றலை எப்படித் தான் போகர் கற்றாரோ” என வியப்புடன் கேட்டாள் பார்வதி. அதற்கு மகேஸ்வரன், “உனக்குத் தெரியாதது அல்ல பார்வதி. அவரின் குருநாதரான காலங்கிநாதரே உலோக கலைக்கு வித்திட்டவர். போகரே தன் குருநாதரை மெய் மறந்து போற்றுகிறார். ஒவ்வொரு முறையும் தன் குருநாதரை வணங்கிய பின்னரே பாடல் பாடுகிறார் தெரியுமா” என்று சொல்ல “எனக்கு அதைப் பற்றி கேட்க ஆசை'' என்றாள் பார்வதி.
நாரதர் குறுக்கிட்டு, “மகேஸ்வரா... இது என்ன புதுக்கதை? போகர் தான் சிறந்தவர், நவபாஷாண முருகனுக்கு சிலை வடித்தவர் எனச் சொன்னீர்கள். இப்போது புதிதாக காலங்கிநாதர் என்கிறீர்களே...'' எனக் கேட்டார். ''நாரதரே... அவசரம் வேண்டாம் முழுமையாக கேளுங்கள். உங்களுக்கு புரியும்'' என்றார் மகேஸ்வரர்.
சித்தர்களில் சிறந்தவர் திருமூலர். அவர் தன் சீடர்களான மாலங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், ருத்திரன், காலங்கி நாதர், கஞ்சமலையான் என்ற ஏழுபேரும் முக்கியமானவர்கள் எனக் குறிப்பிடுகிறார். இதில் இடம் பெறும் காலங்கிநாதரே பல அரிய கலைகளை போகருக்கு கற்றுக் கொடுத்தார். இவர் காசியில் பிறந்து, 'நாதா' எனப்படும் சாதுக்களின் வழியில் தோன்றியவர். சதுரகிரி மலையை அடைந்து, அங்கு தமிழ் மொழியைக் கற்று தன் உலோகக்கலையை சித்தர்களுக்கு கற்றுக் கொடுத்தார். மந்திரத்தில் கைதேர்ந்த காலங்கிநாதர் மந்திர சக்தியால் காடுகளில் உள்ள விலங்குகளை கட்டுப்படுத்தினார். இந்த கலையை பின்பற்றியே நவபாஷாண சிலை வடிக்கும் போது தன்னைச் சுற்றியிருந்த சிங்கங்களை போகர் கட்டுப்படுத்தினார்.
காலன் என்றால் காற்று, அங்கம் என்றால் உருவம். புயலைப் போல இவர் செல்வதால் 'காலங்கி' என இவரை போற்றுகின்றனர். போகரை போல் இவரும் பல்வேறு உலோகங்களை சேர்த்து சிலை செய்தார். தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோகங்களை கற்களில் இருந்து தயார் செய்தார். மலையில் உள்ள கற்களை ரசவாதக் கலையால் தங்கமாக மாற்றினார் காலங்கி.
ஒருமுறை கஞ்சமலையில் அமர்ந்து, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவரைச் சுற்றியுள்ள விலங்குகள் அமைதியாக இருப்பதைக் கண்ட சித்தர்கள் சிலர், ''நாங்கள் கண்ணால் பார்த்தாலே விலங்குகள் அமைதியாகி விடும். மந்திரம் சொல்லி அமைதிப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது'' என கேலியாக கேட்டனர். மேலும் அவரிடம், ''நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? கல்லையும், மண்ணையும் பொன்னாக மாற்றப் போகிறோம். கல்மலையை பொன்மலையாக மாற்றும் ஆற்றல் எங்களுக்கு உண்டு. இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?'' என்றும் கிண்டல் செய்தனர்.
காலங்கிநாதர் புன்னகைத்தபடி, மந்திரம் சொல்லியபடியே கையில் இருந்த தீர்த்தத்தை அருகில் இருந்த பாறையில் தெளித்தார். உடனே அது பொன் போல மின்னியது. அருகில் இருந்த சித்தர்கள் வெலவெலத்து போயினர்.
''மகாசித்தரே, இதென்ன ஆச்சரியம், நீண்ட காலமாக இதற்காகத் தானே நாங்கள் தவம் செய்கிறோம். சில நொடியில் இதைச் செய்து விட்டீர்களே. உண்மையில் நீங்கள் ஒரு மகாசித்தர். எங்களுக்கு வழிகாட்டுங்கள்'' என தடாலடியாக அவரது காலில் விழுந்தனர்.
“அறியாமை என்னும் மாயையில் சிக்கி இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் உயர்ந்தது பொன் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும். இதற்கான வழியைத் தேடுங்கள். கல்லை பொன்னாக மாற்றும் வித்தைகள் உங்களின் தவப்பயனால் கைகூடும். பொன் தானே வேண்டும். இந்த தீர்த்தத்தை மலை மீது தெளிக்கிறேன். இந்த மலையே பொன்னாக மாறட்டும்'' என்றார் காலங்கிநாதர்.
தங்களுடன் இருக்குமாறு அவரை வேண்டினர். ஆனால் அவரோ, ''இந்த பொன்மலையை மன்னர் பராந்தகச்சோழனிடம் ஒப்படைப்போம். அவர் சிதம்பர் நடராஜர் கோயிலுக்கு தங்கக்கூரை வேயட்டும். இதுதான் என் விருப்பம். நோயின்றி வாழும் கலையை மக்களுக்கு கற்றுக் கொடுங்கள். கல்லை பொன்னாக மாற்றும் வித்தையை தேடி அலையாதீர்கள். சிவன் அருளால் அந்த கலையை அறிவீர்கள்” எனச் சொல்லி காலங்கி நாதர் விடைபெற்றார்.
கூடுவிட்டு கூடுபாயும் கலை, யோகக்கலை, மூச்சுப் பயிற்சியை திருமூலரிடம் கற்றார் காலங்கிநாதர். போகருக்கு முன்பாகவே மூலிகையை உட்கொண்டு சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் பாரதம் (இந்தியா) திரும்பிய அவர் காளி, முருகனை வழிபட்டு காஞ்சிபுரத்தில் முக்தி அடைந்தார். தன் குருவான காலங்கிநாதரை தந்தை எனப் போற்றுகிறார் போகர்.
''இது என்ன சோதனை! பார்க்கும் இடம் எல்லாம் பொன்னாக மாறினால் என்ன செய்வது? இதுவும் தங்களின் திருவிளையாடலா'' என நாரதர் கேட்டார். “அனைவரும் காலங்கிநாதராகவும், போகராகவும் மாறி விட முடியாது. சித்தர்களுக்கும் எல்லைகள் உண்டு. திருமூலரின் சீடரான காலங்கிநாதர் காற்றை அடக்கும் வித்தையை கற்றதால் இது அவருக்கு கைகூடியது. சீடனான காலங்கிநாதரே இப்படி என்றால் அவரது குருநாதர் திருமூலர் எத்தனை விளையாட்டைச் செய்திருப்பார்” என்றார்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250

