
பாஞ்சால தேசத்தை ஆண்ட மன்னர் சிம்மகேது வேட்டைக்குச் சென்றார். அவருடன் வந்த வீரர்கள் ஆளுக்கொரு பக்கமாக சென்று விட்டனர். ஒரே ஒரு வீரனும், மன்னரும் மட்டும் அங்கிருந்த பாழடைந்த சிவன் கோயிலை அடைந்தனர். கருவறையில் சிவலிங்கம் இருந்தது. அதைக் கண்ட வீரன், 'யாரும் வராத இந்தக் காட்டுக்குள் சிவலிங்கம் தனித்து இருக்கிறதே! இதை எடுத்துச் சென்றால் என்ன' என நினைத்தான்.
“மன்னா! இந்த சிவலிங்கத்தை என் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழிபட விரும்புகிறேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என பணிவுடன் கேட்டான். மன்னரும் சம்மதித்தார். வீரனும் வீட்டுக்கு லிங்கத்தை எடுத்துச் சென்றான். ஆனால் முறையான வழிபாடு எதுவும் தெரியவில்லை. மன்னரிடம் வந்து, “சிவலிங்கத்தை முறையாக வழிபடுவது எப்படி எனத் தெரியவில்லையே” என வருந்தினான்.
அவனிடம் சிம்மகேது, “சிவ வழிபாடு மிக சுலபமானது. ஆற்றில் குளித்துவிட்டு, சுடுகாட்டில் இருந்து சாம்பல் அள்ளி வர வேண்டும். அதைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த சாம்பலே சிவனுக்கு விருப்பமானது. உனக்காக தயாரித்த உணவை நைவேத்யம் செய்து விட்டுச் சாப்பிட்டால் போதும்” என்றார்.
மன்னர் சொன்னபடியே வீரனும் குளித்ததும், சுடுகாட்டுக்குப் போய், சாம்பல் எடுத்து வந்து பூஜை செய்தான். ஒருநாள் கடும் மழை. சுடுகாட்டில் கிடந்த சாம்பல் நீரில் கரைந்து போய் விட்டது, “இன்று சிவபூஜை எப்படி செய்யப் போகிறேன்?” என மனைவியிடம் புலம்பினான். “ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஏன் இப்படி கலங்குகிறீர்கள்? குளித்துத் தயாராகுங்கள். அதற்குள் சாம்பல் தயாராகி விடும். அதற்கு நான் பொறுப்பு” என்றாள்.
'அது எப்படி சாத்தியம்?' என்ற கணவனிடம், ''அன்பரே! எந்தக் காரணம் கொண்டும் சிவபூஜை நிற்கக்கூடாது. நான் என் மீது நெருப்பு வைத்து உயிரை விடுகிறேன். என் சாம்பலை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அபிேஷகம் செய்யுங்கள். இது தீர்வதற்குள் மழைக்காலம் முடிந்து விடும். உங்களுக்கு வேறு சாம்பல் கிடைக்கும்” எனச் சொல்லி தன் மீது நெருப்பு வைக்க தயார் ஆனாள்.
வீரன் தடுக்க முயற்சிப்பதற்குள் நெருப்பு பற்றியது. ஆனால் ஒரு நொடிக்குள் அந்த நெருப்பு பூக்களாக மாறியது. பூஜைக்காக உயிரையே தரத் துணிந்த அவளுக்கு, பார்வதியுடன் காட்சியளித்தார் சிவபெருமான். “பெண்ணே! பக்தியாலும், கணவன் மீதுள்ள அன்பாலும் நெருப்புக்கு இரையாகத் துணிந்தாயே! சிவபூஜை செய்வதையே கடமையாகக் கொண்ட உனக்கும் உன் கணவனுக்கும் நல்லாசிகள்! அள்ள அள்ளக் குறையாத சுடுகாட்டு சாம்பல் கலசத்தை தருகிறேன். நீங்கள் இன்னும் பலகாலம் பூஜை செய்து வளமோடு வாழ்ந்து சிவலோகம் அடைவீர்களாக!” என வரம் அளித்தார். ஆச்சரியத்தில் அவளுக்கு பேச்சு வரவில்லை. வீரனும், அவன் மனைவியும் சிவனுக்கு நித்யபூஜை செய்து பிறவாநிலையை அடைந்தனர்.

