ADDED : நவ 27, 2025 11:16 AM

திருமூலர்
“நாரதரே! பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தையும் 'சிவம்' என்றும், அவை இயங்கும் போது அவற்றை 'சக்தி' என்றும், எல்லையில்லா ஆற்றலை பெறும் போது சிவசக்தி என்றும் பெயர் பெறும். இந்த பிரபஞ்சம் ஆற்றலை வெளிப்படுத்தும் திருநடனத்தை தரிசனம் செய்த சித்தர்களில் திருமூலரும் ஒருவர். இதுவே சிதம்பர ரகசியம் எனப்படும்” என பார்வதி விளக்கம் சொல்ல மகேஸ்வரன் புன்னகைத்தார்.
“தாயே! திருமூலர் முக்தி பெற்ற சிதம்பரத்தில் தானே திருநடனம் நடந்தது” என நாரதர் கேட்க பார்வதி விளக்கத் தொடங்கினாள்.
''ஆமாம். திருமூலர் காடு, மலை என நடந்தே பஞ்சபூத தலங்களை தரிசித்தார். சிவனின் கட்டளையால் காவிரிக்கரையில் தவத்தில் ஈடுபட்டார். வேதங்களை கற்று தேர்ந்து, ஆண்டுக்கு ஒன்றாக 3000 பாடல்கள் பாடினார். 'சுந்தரநாதர்' என்னும் நான் திருமூலராக மாறியது எப்படி' என்பது பற்றி திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளையும், அனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாம்யகம், வசித்துவம், ஈசத்துவம் ஆகிய சித்து விளையாட்டுகளையும் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். மாரங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், ருத்திரன், காளங்கி,கஞ்சமலை சித்தர் ஆகியோர் இவரின் சீடர்களாக இருந்தனர்.
நற்செயல் செய்வதன் மூலம் கடவுளின் திருவடியை அடையலாம் என்கிறது திருமூலரின் திருமந்திரம். உடலில் உள்ளம் என்னும் பெயரில் ஒளிந்திருப்பவர் கடவுளே. எனவே நினைப்பது எல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்கிறது திருமந்திரம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிகளில் சிவனை அடையலாம். இவை முறையே தொண்டு, தொழில் புரிதல், உடல், மனதை இணைத்தல், அறிவுபூர்வமாக சிந்தித்தல் ஆகும். அன்பே சிவம் என்பதே திருமந்திரத்தின் அடிப்படை தத்துவம். மூச்சுப்பயிற்சி, தியானம் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம்'' என முடித்தாள் பார்வதி. மகேஸ்வரன் தொடர்ந்தார். “பஞ்ச பூத தலங்கள் ஐந்து. அவை காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம். இதில் ஆகாய பூதமான சிதம்பரத்தில் திருநடனத்தை அரங்கேற்றியது ஏன் தெரியுமா?
பிரபஞ்சத்தின் காந்தப் பகுதி, பூமத்திய ரேகையின் மைய பகுதி தான் சிதம்பரம். சிதம்பரம் என்பதில் உள்ள 'சித்' என்பது வெற்றி; 'அம்பரம்' என்பது அண்டவெளி. ஆகாயத் தலமான சிதம்பரத்தில் திருமூலர் சித்தி பெற்றார். சிதம்பரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு களிக்கலாம். இங்கு நடக்கும் வில்வ அர்ச்சனையை தரிசிப்பவருக்கு மனதிலுள்ள மாயை மறைந்து மனத்துாய்மை ஏற்படும். அதற்காகவே மாயை போக்கும் விதமாக யோக சூத்திரங்களை சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார் திருமூலர். “தாயே! சிவசக்தியின் ஆற்றல் எல்லையற்றது என்பதை உணர்ந்தேன். தங்களின் திருவடியை பணிகிறேன்'' என்றார் நாரதர்.
திருமூலரின் வரலாற்றை பற்றி சொல்ல ஆரம்பித்தார் மகேஸ்வரன். ''ஒருமுறை மார்க்கண்டேயர் காவிரிக் கரையோரமாக நடந்து வந்தார். அங்கிருந்த மரத்தில் தலைகீழாக தொங்கிய சித்தர்களையும், சிரசாசனத்தில் தியானம் செய்தபடி இருந்த திருமூலரின் தவத்தையும் கண்டு வியந்தார். தன் எதிரில் நிற்பவர் மார்க்கண்டேயர் என்பதை அறிந்து கொண்ட திருமூலர், “ஏன் இப்படி திகைக்கிறாய் மார்க்கண்டேயா...” எனக் கேட்டார். “குருவே... ஏன் இப்படி வருத்திக் கொள்கிறீர்கள்” எனக் கேட்டார்.
“தவறு செய்வது இயல்பானது தான். அதற்கான தண்டனை அடுத்த பிறவியில் தானே கிடைக்கும் என சித்தர்கள் விடுவதில்லை. பிறவா வரம் வேண்டும் என எண்ணி, இந்த பிறவியிலேயே தவறுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என தங்களை வருத்துகிறார்கள்” என்றார் திருமூலர். மார்க்கண்டேயன், “குருவே, எனக்குத்தான் வயது என்றும் 16 ஆச்சே... இறப்பே கிடையாதே. அப்படியானால் என் தவறுக்கு தண்டனை கிடையாது அல்லவா” என சிரித்தார்.
அதற்கு திருமூலர், “அந்த வரம் உயிருக்கு தானே தவிர உன் உடலுக்கு இல்லை. நோயின்றி வாழும் வழிமுறையைக் கற்றுக்கொள். உடம்பை காக்காவிட்டால் சாகா வரம் பெற்று என்ன பயன்” என திருமந்திரத்தை உபதேசம் செய்தார். மார்க்கண்டேயரும், ''குருவே! தங்களிடம் உபதேசம் பெற்றது என் பாக்கியம். பிராணாயாமம் மூலம் என் உடலை பாதுகாப்பேன்” என உறுதி அளித்தார்.
இதன் பின் மக்களோடு மக்களாக வாழ்ந்தால் மட்டுமே அனைவருக்கும் யோகக் கலையை போதிக்க முடியும் என திருமூலர் உணர்ந்தார். அதற்காக கூடு விட்டு கூடு பாய நினைத்து வான்வெளியில் பறந்தார். அப்போது ஒரு நாட்டின் அரண்மனை முன்பு மக்கள் சூழ்ந்திருக்க, அந்நாட்டு ராணி அழுவதைக் கண்டார். மன்னர் அப்போது தான் மரணம் அடைந்திருப்பதை அறிந்தார். தன் உடலை பொதிகை மலையில் மறைத்து வைத்து விட்டு, மன்னரின் உடம்பில் புகுந்தார் திருமூலர். உயிர் பெற்ற மன்னரைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
சிவனருளால் உயிர் பெற்றதாக கூறிய மன்னர் அன்று முதல் தர்மநெறிகளை மக்களுக்கு உபதேசித்து வந்தார். ஆனால் ராணியிடம் அவர் நெருங்கவில்லை. கணவர் மீது அவளுக்கு சந்தேகம் வந்தது. மன்னரின் உடலில் இருந்த திருமூலர், “தாயே, நான் உன் கணவன் அல்ல, தர்மத்தை போதிப்பதற்காக இந்த உடலுக்குள் புகுந்துள்ளேன். என் கடமை முடிந்ததும் சென்று விடுவேன்” என்றார். அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை. ஒற்றர்கள் மூலம் பொதிகை மலையிலுள்ள திருமூலரின் பழைய உடலை எரித்து சாம்பலாக்கினாள்.
சில ஆண்டுகள் கடந்த பின் “ நான் வந்த வேலை முடிந்தது” என மன்னர் வடிவில் இருந்த திருமூலர் புறப்பட்டார். ஆனால் அவரது உடலைக் காணாததால் திருவானைக்காவலை அடைந்தார். 3000 ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்து திருமந்திரம் என்னும் நுாலை எழுதினார். இறுதியில் தலவிருட்சமான நாவல் மரத்தில் ஐக்கியமானார்'' என முடித்தார் மகேஸ்வரன். நாரதர் குறுக்கிட்டு, “திருமூலரோ சிவனடியார். ஆனால் பைரவர், சாம்பவி, ராஜேஸ்வரி, காளி, முருகன், விநாயகர் என பலரையும் வாழ்த்திப் பாடியுள்ளாரே ஏன்?” எனக் கேட்டார்.
“ஆம்! நாரதரே... அனைவருக்கும் ஆதாரம் சிவம் மட்டுமே” என மகேஸ்வரன் சொல்ல பார்வதி குறுக்கிட்டாள். “சித்தர்களை இயக்குபவரே தாங்கள்தானே, திருமூலர் கூறிய தத்துவம் எல்லாம் தங்களின் வாக்கு தானே” என்று சொல்ல மகேஸ்வரன் புன்னகைத்தார். “பார்வதி... நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை. சிவமாகிய நான் சக்தியாக உன்னை எப்போதும் வணங்குகிறேன்” என்றார்.
“பூலோகம் போல வானுலகத்திலும் பெண்களின் ஆட்சிதான் நடக்கிறது” என கலகமூட்டினார் நாரதர். “பெண்ணுக்கு சாபமிட்ட கொங்கணவருக்கு என்ன நடந்தது தெரியுமா” என பார்வதி கோபமாக கேட்க, “ பெண்களை தாயாக வணங்குபவன் நான். என்னை தவறாக நினைக்காதீர்கள். கொங்கணவரை பற்றி இப்போதே சொல்லுங்கள்” என்றார் நாரதர்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250

