ADDED : ஜன 02, 2026 07:53 AM

இருளும் மருளும்
“மகேஸ்வரரே! ஆரோக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய சித்தர்கள் புகையிலை, கஞ்சாவை புகைத்தபடி இருக்கிறார்களே ஏன்?” எனக் கேட்டார் நாரதர். அதற்கு புன்னகைத்த மகேஸ்வரன், “இந்த விளையாட்டை விளையாடிய பார்வதியே சொல்லட்டும்” எனக் கூறி பார்வதியைப் பார்த்தார்.
“புகையிலைக்கும், கஞ்சாவுக்கும் எதிரானவர்கள் சித்தர்கள். இந்த மூலிகைகளைக் கூட பிரம்ம பத்திரம், ஆனந்த மூலி என்ற பெயர்களால் தான் குறிப்பிட்டனர். கோரக்கரின் வரலாற்றை தெரிந்தால் அந்த போதை தரும் மூலிகைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்'' என சொல்லத் தொடங்கினாள் பார்வதி.
ஒருமுறை கோரக்கரும், பிரம்மரிஷியும் மரணமில்லாமல் வாழ வேண்டும். இறந்தவர்களை உயிர் பெறச் செய்ய வேண்டும். முப்பெரும் தேவர்களை வெற்றி பெற்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை தாங்களே செய்ய வேண்டும் என விரும்பினர். அதற்காக யாகம் நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக மூலிகைகள் நிறைந்த சதுரகிரி பிரம்ம வனத்தில் யாகசாலை அமைத்தனர். மாசி மாத பவுர்ணமியன்று யாகம் தொடங்கியது. பல நாட்கள் விரதம் இருந்து தவக்கோலத்தில் யாகம் செய்யச் செய்ய யாக குண்டத்தில் பிரமாண்டமாக நெருப்பு எரிய ஆரம்பித்தது. சதுரகிரி மலையே அனலாக கொதித்தது. அங்குள்ள குகைகளில் தவமிருந்த சித்தர்களால் அதை தாங்க முடியவில்லை.
விலங்குகளும், மூலிகைகளும் வாட ஆரம்பித்தன. யாகம் உச்சக் கட்டத்தை அடைந்தது. கோரக்கரின் குருவான நந்தியும், மற்ற சித்தர்களான பதஞ்சலி, வியாக்ரபாதர் யாகத்தை நிறுத்துமாறு வேண்டினர். ஆனால் கோரக்கர் அதை பொருட்படுத்தவில்லை. இன்னும் யாகத்தை தீவிரப்படுத்தினார். இயற்கையின் விதிக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெற விரும்பும் கோரக்கர், பிரம்மமுனியின் யாகம் வெற்றி பெற்றால் பரமேஸ்வரன் அவர்கள் கேட்கும் வரத்தை கொடுத்து விடுவார். இயற்கையை வெல்ல முடியுமா? ஆகவே எப்பாடு பட்டாவது யாகத்தை நிறுத்த வேண்டும் என நினைத்த மற்ற சித்தர்கள் கைலாயம் சென்று பார்வதியைச் சரணடைந்தனர். “தாயே! நீங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்” என்றனர்.
“கோரக்கரும், பிரம்மமுனியும் யாகத்தை முடித்து விட்டால் அவர்கள் கேட்கும் வரத்தை கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்” என மகேஸ்வரனிடம் பார்வதி கேட்க, “பக்தியுடன் செய்யும் யாகத்தை என்னால் நிறுத்த முடியாது. நீயே நல்ல முடிவை எடு” என்றார் பரமேஸ்வரர். யாகத்தை நிறுத்த முடிவு செய்த பார்வதி தன் தோழியரான இருள், மருள் என்னும் இரண்டு அழகிய பெண்களை யாககுண்டத்தின் முன் நாட்டியம் ஆடுவதற்காக பிரம்ம வனத்திற்கு அனுப்பினாள்.
சதுரகிரி மலைக்கு வந்த அந்த பெண்கள் ஆடத் தொடங்கினர். இதனைக் கண்டு மயங்கிய வருணன் மழை பெய்யச் செய்தார். இதனால் ஹோமகுண்டத்தில் அக்னி குறைவதை ஞானசக்தியால் உணர்ந்த கோரக்கரும், பிரம்மமுனியும் அங்கிருந்த இருள், மருள் மீது கோபம் கொண்டனர். சித்தர் கோரக்கர் மருளையும், பிரம்ம முனிவர் இருளையும் தங்களின் இடது கைகளால் பிடித்து கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து 'நீங்கள் இருவரும் புல், பூண்டாகிப் போக கடவது' என சபித்தனர்.
“பார்வதியின் ஆணைப்படியே நாங்கள் இங்கு வந்தோம். எங்களை மன்னியுங்கள். இனி நாங்களாக யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம். ஆனால் எங்களை தீண்டினால் அவர்கள் சாம்பல் ஆகும் வரை விட மாட்டோம். எனவே எங்களுக்கு விமோசனம் கொடுங்கள்'' என இருவரும் கோரக்கர், பிரம்மமுனியிடம் கேட்டனர். அதன்படி கோரக்கரால் சபிக்கப்பட்ட மருள் என்பவள் ஆனந்தமூலி என்ற கஞ்சா செடியாகவும், பிரம்மமுனிவரால் சபிக்கப்பட்ட இருள் என்பவள் புகையிலை என்ற செடியாகவும் பிறவி எடுத்தனர்.
கடவுளுக்கு மேற்பட்ட சக்தியை யாரும் அடைய முடியாது என்பதை உணர்ந்த கோரக்கர் தன் யாகத்தை முடித்தார். மருத்துவம், ஞானம், யோக துறைகளில் 8450 பாடல்கள் அடங்கிய 16 நுால்களை எழுதினார். நந்தி தேவர் சொன்ன ஆயுள் ரகசியங்களை விவரிக்கும் இந்த நுால்களை மற்ற சித்தர்கள் மறைத்து வைத்தனர். முன்பே ஞான திருஷ்டியால் இதை பற்றி அறிந்த கோரக்கர் மலைவாகடம், சந்திரரேகை 200, நமநாச திறவுகோல் என்னும் அரிய நுால்களை இயற்றி அதில் வாதம், வைத்தியம், யோகம், ஞானம் போன்ற குறிப்புகளை எழுதி வைத்தார். பின்னர் சீடர்களுடன் காவிரி கரையில் உள்ள வடக்கு பொய்கை நல்லுாரை அடைந்தார். அங்கேயே முக்தியும் அடைந்தார்.
கஞ்சா, புகையிலை போன்றவை மருத்துவ பயன்பாட்டுக்கே தவிர தனி மனிதனுக்கு உரியதல்ல. இவற்றை ஆசையுடன் தொடுபவர்களை நெருப்பு போல தீண்டும் தன்மை இவற்றுக்கு உண்டு என சித்தர்கள் சாபத்தை மாற்றி அமைத்தனர். சாதாரண மனிதர்கள் புகையிலை, கஞ்சாவை பயன்படுத்தி வாழ்வை அழித்து விடக் கூடாது என்றும் நுால்களில் அறிவுறுத்தியுள்ளனர்.
“மகேஸ்வரா... புகையிலை, கஞ்சா மூலிகைகளைத் தொடுபவர்கள் நெருப்பால் சாம்பல் ஆவது போல தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ள நேரிடும் என்பதை கோரக்கர் மூலம் உணரச் செய்த தங்களின் விளையாட்டு அருமை” எனச் சொல்லி நாரதர் வணங்கினார்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250

