ADDED : ஜன 02, 2026 07:56 AM

ஐம்பொறி ஆட்சி கொள்
ஐம்பொறி ஆட்சிகொள் என்றால் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், சவால்களைச் சமாளித்து, மன அமைதி, உறுதியுடன் வாழ்வதாகும். இது சுய கட்டுப்பாட்டின் முக்கிய அம்சம், சுய கட்டுப்பாடு இல்லாத வாழ்வு சோர்ந்து விடும். புலன்கள் அடங்காத போது, தவறான எண்ணம், செயல்களுக்கு வழிவகுக்கும்.
மெய் (தொடு உணர்வு), வாய் (சுவை), கண் (பார்வை), மூக்கு (வாசனை), செவி (கேட்டல்) ஆகிய ஐந்து புலன்களால் ஏற்படும் ஆசைகளை கட்டுக்குள் வைத்து, அவற்றின் வழிகாட்டுதலில் செயல்படாமல், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாரதியார் சொல்லும் ஐம்பொறி ஆட்சி கொள். திருவள்ளுவர் இதை, ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்ற குறள் மூலம் கூறுகிறார். ஆமை தன் ஐந்து உறுப்புகளை உள்ளே இழுத்து ஓட்டிற்குள் அடக்குவது போல, ஐம்பொறிகளையும் அடக்கினால் அது ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்.
ஒருவன் அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள் உடல் வலிமை, கல்வித்தரம் ஆகியவை இருந்தாலும் நல்லெண்ணமும், சமுதாய உணர்வும் தான் அவனை புகழ்படச் செய்கின்றன. எனவே தான் பாரதியார் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். இந்த ஐந்து விதமான உணர்வுகளுக்கு அடிமையானவர்கள் துன்பப்படுகிறார்கள்.
மாதர் போகமே வாழ்க்கை என அலைந்து திரிந்த ஒருவருக்கு அவரின் சகோதரியின் ஒரு வார்த்தை - ஒரே கேள்வி, அவரை அனுபூதி பாடி அழகன் முருகனிடம் ஈடுபடச் செய்தது. அவர்தான் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற இனிய பாடல்களைத் தந்த அருணகிரிநாதர்.
புதிதாக திருமணம் செய்த ஒருவருக்கு மனைவி மீது கொள்ளை ஆசை; அலுவல் காரணமாக வீட்டுக்கு வர முடியாத சூழல்! திடீரென அவருக்கு மனைவியைப் பார்த்து விட வேண்டும் என தணியாத ஆவல்! மனைவியோ பிறந்த வீட்டில் இருந்தாள்! அவர் புறப்பட்ட நேரம் பலத்த மழையுடன் இடி மின்னல் வேறு தொடர்ந்தது. அவர் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும்! அந்தச் சூழ்நிலையில் படகும் இல்லை! கையில் கிடைத்ததைக் கொண்டு அக்கரையை அடைந்தார். மழைச் சத்தத்தில் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பக்கத்தில் இருந்த மரத்தின் விழுதைப் பற்றிக் கொண்டு மாடிக்குச் சென்று கதவைத் தட்டினார்! மனைவி அதிர்ந்தே போனாள்!
என்ன அவசரம்? ஏன் வந்தீர்கள்? எப்படி வந்தீர்கள்? என கேள்வி மேல் கேள்வி கேட்டாள். உன் மீது கொண்ட ஆசையால், மோகத்தால் உடனே பார்க்க வேண்டும் எனத் தோன்றியது! வந்துவிட்டேன் என்றார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு. படகில்லை, அகப்பட்டதைப் பிடித்து வந்தேன் என்றார்! அப்புறம் விழுதைப் பிடித்து மேலே வந்தேன் என்றார்! அப்போது வானிலே மின்னல் வெட்டியது! பார்த்தால் அவர் பிடித்து வந்தது என்னவோ ஆற்றில் மிதந்த ஒரு பிணத்தை! மேலும் அவர் பிடித்தது மரத்தின் விழுதும் அல்ல. மலைப்பாம்பு என அறிந்ததும் மனைவி அதிர்ந்து போனாள்.
அதிர்ந்த மனைவி, இறுதியாக ஒரு கேள்வி கேட்டாள்! அழிந்து போகும் இந்த இளமை மீது ஆசை கொண்டு இத்தனை துன்பங்களை கடந்து வந்திருக்கிறீர்களே! இதில் பாதி அளவு ஈடுபாடு கடவுள் மீது செலுத்தினால் வாழ்வு சிறப்பாக இருக்குமே என்றாள்! அவ்வளவு தான்! அடுத்த கணம், அன்பு மனைவியே குருநாதராக கண்ணுக்கு தெரிந்தாள். அந்த மனிதர் வேறுயாருமல்ல! துளசிதாசர். மனைவி மீது கொண்ட ஆசையை அவர் அடக்கிக் கொண்டார்.
அதே போல பொருள் மீது கொண்ட ஆசை. மைதாஸ் என்பவன் தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கடவுளிடம் கேட்டான். கடவுளும் வரத்தைக் கொடுக்க தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான். ஒரு நாள் தன் அருமை மகள் ஓடிவந்த போது அவளை கட்டிக் கொண்டான். அடுத்த நிமிடம் அவள் தங்கப்பதுமையாக மாறினாள். அப்போது தான் அதன் உட்பொருளை உணர்ந்தான். என் பள்ளிப்பருவத்தில் படித்த கதை இது.
பெண்ணாசையால் பராக்கிரமானாகத் திகழ்ந்த ராவணன் வாழ்க்கை வீழ்ந்தது. தனக்கே மொத்த ராஜ்யமும் வேண்டும் என நினைத்த துரியோதனன் வாழ்க்கையும் பேராசையால் அழிந்தது. புராணங்கள் மட்டுமல்ல வரலாறு கூறுவதும் இதைத்தான். ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் என உலகில் பலர் விழுந்ததும் பதவி ஆசையால் தான். ஐம்பொறிகளை அடக்காவிட்டால் அவை வாழ்க்கையைத் தொலைத்து விடும்.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் ஒரு ஸ்லோகத்தை உதாரணம் காட்டுவார்கள். அதன் பொருள் மனித வாழ்வுக்கு அருமருந்து.
மெய் (உடல்): பெண் இன்பத்தின் மீது கொண்ட மையலால் ஆண் யானை குழியில் தள்ளப்பட்டு பிடிபடுகிறது.
வாய்: நாக்கின் சுவையால் உந்தப்பட்டு மீன் துாண்டிலில் சிக்குகிறது.
கண்: -விளக்கின் ஒளி மீது கொண்ட ஆசையால் விட்டில் பூச்சி தீயில் விழுந்து உயிரை இழக்கிறது.
மூக்கு: நாசி கொண்ட மணத்தால் தேனை உறிஞ்சப் போய் வண்டு மலருக்குள் மடிகிறது.
செவி: காதில் விழும் ஒலியைக் கேட்டு ஓடி வரும் மான், வேடனின் அம்புக்கு இரையாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஆறறிவு கொண்ட மனிதன் எல்லாம் அறிந்தும் இந்த ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வு முழுதும் நிம்மதியை இழக்கிறான்.
பொருளின் மீது ஆசையால் வாழ்வை இழந்தவர்கள் பலர். என் தந்தை சிறுவயதில் எனக்குக் கூறிய டால்ஸ்டாயின் சிறுகதை இன்றைக்கும் நமக்கு பாடம். வறுமையில் வாழ்ந்த ஒருவன் செல்வந்தரை சந்தித்து உதவி கேட்ட போது அவர் விவசாயம் செய்ய நிலம் தருகிறேன் என்றார். '' நீங்கள் என்ன கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறேன்'' என்றான். 'ஒரு நிலத்தை காட்டி சூரிய உதயம் முதல் நீ எவ்வளவு துாரம் ஓடினாலும் அது அனைத்தும் உனக்கே சொந்தம் எனகூற மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.
காலையில் இருந்தே ஓட ஆரம்பித்தான். மதியமான போதும் பசியோடு ஓடினான். அத்தனை நிலமும் எனக்கே சொந்தம் என மனதிற்குள் மகிழ்ந்தான். மாலையில் சூரியன் மறைந்தது. செல்வந்தரிடம் தான் ஓடிய நிலத்தைக் காட்டி, 'அத்தனையும் எனக்குத் தானே' எனக் கேட்டான். ஆமாம் என்றார் செல்வந்தர். அடுத்த நிமிடம் பசி மயக்கத்துடன் மண்ணில் சரிந்தான். இப்போது செல்வந்தர் சொன்னார் 'இவனுக்கு தேவை ஆறடி நிலம்தான்' என்று.
கவிஞர் சுரதா எழுதிய
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்ற வரிகள் என்றும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
ஐம்பொறிகள் கட்டுப்பாடுடன் இருந்தால் தீய எண்ணம் குறையும். அமைதியான, உறுதியான, உயர்ந்த வாழ்க்கை அமையும். ஈகைத்திறன், ஆண்மை, உண்மை, அன்பு போன்ற நல்ல பண்புகள் வளரும். இப்படி ஐம்பொறியை அடக்கும் மனம் கொண்ட சமுதாயம்தான் தேசத்தின் தேவை என்பதை, மகாகவி பாரதியார்,
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
மெய்மை கொண்ட நுாலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற அஞ்சுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
இளையபார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா
என்ற வரிகள் மூலம் கூறுவதே இந்த ஆத்திசூடி.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

