ADDED : ஜன 02, 2026 07:58 AM

திருப்பதி லட்டு
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் புகழ் பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் திருப்பதி முக்கியமானது. சேஷாத்ரி, கருடாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடமே சப்தகிரி எனப்படும் திருமலை திருப்பதி.
கோயில் பிரசாதம் என்றதுமே முதலில் நம் நினைவிற்கு வருவது திருப்பதி லட்டு பிரசாதமே. திருமலையில் மூன்று நுாற்றாண்டாக 'ஸ்ரீவாரி லட்டு' பிரசாதமாக தரப்படுகிறது. இதற்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது.
1715 முதல் ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வழக்கத்திற்கு வந்தது. தொடக்கத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக வழங்கப்பட்டது. 1803ல் இருந்து லட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. திருப்பதி லட்டு தயாரிக்க கடலைமாவு, சர்க்கரை, நெய், அரிசிமாவு, கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் பயன்படுத்தப் படுகின்றன.
இங்குள்ள மடப்பள்ளியில் தயிர்சாதம், பொங்கல், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி போன்றவையும் பிரசாதமாக தயாரிக்கப்படுகின்றன.
திருமலை ஏழுமலையானின் வலது மார்பில் மகாலட்சுமியும், இடது மார்பில் பத்மாவதித் தாயாரும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். திருச்சானுார் எனப்படும் அலமேலுமங்காபுரத்தில் பத்மாவதித் தாயாருக்கு கோயில் உள்ளது.
பெருமாளின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கைகளோடு அமர்ந்தநிலையில் இருக்கிறார். மூன்றாம் பிரகாரத்தில் விஷ்வக்சேனர் நான்கு கைகளோடு சங்கு, சக்கரம் ஏந்தியநிலையில் உள்ளார். கோயில் விமானத்தின் கிழக்குப் பகுதியில் வரதராஜ சுவாமி, முதல் பிரகாரத்தில் யோக நரசிம்மர் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் பாஷ்யக்காரர் சன்னதி உள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சிணம் எனப்படுகிறது. இந்த பிரகாரத்தில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம், சாலுவ நரசிம்ம மண்டபங்கள் உள்ளன. அடுத்ததாக உள்ளது இரண்டாம் பிரகாரம் அல்லது விமான பிரதட்சிணம். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேஸ்வரர், ஸ்நபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம், கர்ப்பகிரகம் ஆகியவை உள்ளன. மூன்றாம் பிரகாரம் வைகுண்டப் பிரகாரம் எனப்படும். இது வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படும். காணிக்கை செலுத்தும் உண்டியல் உள்ள மண்டபம் 'பரகாமணி மண்டபம்' என அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, ஜென்மாஷ்டமி, மார்கழி உற்ஸவம் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. புரட்டாசி பிரம்மோற்ஸவம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். தினமும் காலை, இரவில் உற்ஸவர் மலையப்ப சுவாமி வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார்.
ஏழுமலையானை தரிசிக்கச் செல்பவர்கள் முதலில் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாளை தரிசித்த பின்னர் அலர்மேல்மங்காபுரம் பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும். அதன் பின் மலையில் உள்ள வராக தீர்த்தக் கரையில் உள்ள வராக மூர்த்தியை தரிசித்த பின்னரே ஏழுமலையானை வழிபடுவது மரபு. திருப்பதி காஞ்சிபுரத்தில் இருந்து 108 கி.மீ., தொலைவிலும் சென்னையிலிருந்து 133 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலமாகவும் திருப்பதியை அடையலாம்.
தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை சேவிக்கிறார்கள். இதனால் அதிகாலை 2:30 மணிக்கு திறக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும்
கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
-குலசேகராழ்வார்
ஏழுமலையான் மீது குலசேகராழ்வார் பாசுரங்களைப் பாடினார். பெருமாளின் அழகை தரிசிக்கும் பேறு தினமும் கிடைக்காதா என ஏங்கினார். இவருடைய வேண்டுதலைக் கேட்டு பெருமாளின் மனமும் உருகியது. இதனால் கருவறைக்கு முன்பு உள்ள படி ஆழ்வாரின் பெயராலேயே 'குலசேகராழ்வார் படி' எனப்படுகிறது. இதன்பின் எல்லா பெருமாள் கோயில்களிலும் கருவறைக்கு முன் உள்ள படியை 'குலசேகராழ்வார் படி' என்றே சொல்வர்.
ஆஸ்தான லட்டு, கல்யாண உற்ஸவ லட்டு, புரோக்தம் லட்டு என மூன்று லட்டு பிரசாதம் இங்கு தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்தான லட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்டின் எடை 750 கிராம். கல்யாண உற்ஸவ சேவை, ஆர்ஜித சேவையில் பங்கேற்பவர்களுக்கு தரப்படுவது கல்யாண உற்ஸவ லட்டு. இதன் எடை 700 கிராம். பக்தர்களுக்கு தரப்படுவது புரோக்தம் லட்டு. இது 175 கிராம் எடை கொண்டது. அதிக அளவில் இதுவே விற்பனை செய்யப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கோயில் நிர்வாகத்தை நடத்துகிறது. லட்டு தயாரிக்க கோயிலுக்குள் சம்பங்கி பிரதட்சிணம் பகுதியில் மடப்பள்ளி தனியாக உள்ளது. இந்த இடத்தை பொட்டு (Potu) என்கின்றனர். தினமும் மூன்று லட்சம் லட்டுகளும், திருவிழா நாட்களில் ஐந்து லட்சம் லட்டுகளும் இங்கு தயாராகின்றன.
திருப்பதி சென்றால் வாழ்வில் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை வணங்கி லட்டு பிரசாதத்தை சுவைக்கும் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைப்பது உறுதி.
-பிரசாதம் அடுத்த வாரம் முற்றும்
ஆர்.வி.பதி

