
ராமருடன் போரிட போர்க்களத்திற்கு புறப்பட்டான் ராவணன் தம்பி கும்பகர்ணன். அவனது ராட்சஷ உருவத்திற்கு ஏற்ப தேர் பெரிதாக இருந்தது. அதில் பெரிய மணி அசைந்தாடியது. போர் தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாக ராம பாணத்திற்கு அவன் இரையானான். கீழே சரிந்த அவனது கை பட்டு தேரின் மணி கழன்றது. பாரம் மிக்க அந்த மணி, போர்க்களத்தில் நின்ற ஆயிரம் வானரங்களை மூடியது. பயத்துடன் ஒரு வானரம், ''சுக்ரீவனை நம்பி போருக்கு வந்த நாம் மோசம் போனோமே'' என வருந்தியது.
'நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியது தான்'' என்றது இன்னொன்று.
''போருக்கு புறப்பட்ட போது நம்மை பத்திரமாக கொண்டுவந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றாரே ராமர்'' என்றது மற்றொன்று. அப்போது மூத்த வானரம் ஒன்று, ''வாய்க்கு வந்ததை பேசாதீர்கள். நம்பிக்கையுடன் 'ராம் ராம் ராம்' என ஜபம் செய்யுங்கள். நிச்சயம் காப்பாற்றப்படுவோம்'' என்றது. அப்படியே வானரங்களும் ஜபிக்கத் தொடங்கின.
இதற்கிடையில் ராம பாணத்தால் ராவணன் கொல்லப்பட போர் முடிவுக்கு வந்தது.
அப்போது ராமர், ''சுக்ரீவா... நம் படையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா'' எனக் கேட்டார்.
''பிரபோ...ஆயிரம் வானரங்களை மட்டும் காணவில்லை'' என்றான் சுக்ரீவன்.
வானரங்களை தேடி ராமர் புறப்பட அனுமனும் உடன் சென்றார். சந்தேகத்துடன் ஓரிடத்தில் நின்ற ராமர், ''அங்கே பார். அனுமா...பெரிய மணி கிடக்கிறதே.'' என்றார். விரைந்தோடிய அனுமன் தன் வாலின் நுனியால் மணியைக் கட்டி இழுத்தார். சஞ்சீவிமலையை துாக்கிய அனுமனுக்கு இது சாதாரண விஷயம் தானே!
அதனடியில் வானரங்கள் ராமநாமத்தை ஜபித்தபடி இருந்தன. வெளிச்சமும் காற்றும் மேனியில் பட்டதும் கண்விழித்த வானரங்கள் ராமரை வணங்கின. அப்போது ஒரு வானரம், ''பிரபு! உண்மை தெரியாமல் தங்களைத் தவறாகப் பேசி விட்டோம். மன்னியுங்கள்'' என்றது. புன்சிரிப்புடன் அவர் அதன் முதுகில் தடவிக் கொடுத்தார்.
அருகில் நின்ற அனுமனிடம், ''வாலில் மணியுடன் நீயிருக்கும் கோலம் எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தியும், ஞானமும் உண்டாகட்டும்'' என வாழ்த்தினார்.
கர்நாடகா, ஆந்திரா, தமிழக பகுதிகளில் மகான் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 732 கோயில்களில் வாலில் மணியுடன் அனுமன் காட்சியளிக்கிறார்.
மணி கட்டியுள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் விருப்பம் விரைவில் நிறைவேறும். இதற்காக ஒரு சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து, வீட்டிலுள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி மாலை சாத்தி சந்தனம், குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.
பிறகு, அவரது வால் நுனியில் 'ஸ்ரீராம ஜெயம்' என்ற மந்திரத்தை சொல்லியபடி ஒரு நாளுக்கு ஒரு பொட்டு வீதம் சந்தனம் அல்லது குங்குமம் வைத்து வர வேண்டும்.

