தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 11

சித்தர்களின் விளையாட்டு - 11

சித்தர்களின் விளையாட்டு - 11


ADDED : டிச 17, 2025 01:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 01:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநீறில் பிறந்த கோரக்கர்

“மகேஸ்வரா... திருநீறு என்ற சாம்பலை பூசி உலகிற்கு தாங்கள் சொல்லும் செய்தி என்ன?” எனக் கேட்டார் நாரதர். “மனிதர்கள் அனைவரும் ஆஸ்தி(சொத்து) தேடி அலைகின்றனர். ஆனால் கடைசியில் மிஞ்சுவது என்னவோ அவர்களின் அஸ்திதான். யாரும் இதை உணரவில்லை. இதுவே திருநீற்றின் தத்துவம். திருநீறை ஒவ்வொரு முறை அணியும் போதும் மனதிலுள்ள ஆணவம் அழிய வேண்டும். ஒரு விரல், மூன்று விரல், ஐந்து விரல் என மூன்று விதமாக விரல்களை பயன்படுத்தி திருநீறு பூசலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது நாரதரே” என்றார் மகேஸ்வரன்.

புன்னகைத்த மகேஸ்வரியும் தலையாட்டி விட்டு, “மகேஸ்வரனின் விளையாட்டால் சாம்பலில் தோன்றிய சித்தரை உங்களுக்கு தெரியுமா நாரதரே?” எனக் கேட்க, அவர் வியப்பின் உச்சிக்குப் போனார். “சொல்லுங்கள் தாயே! சித்தர்களின் தத்துவங்களை மக்களிடம் சேர்ப்பதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன்” என்றார் ஆர்வமுடன். மச்சேந்திரர் என்ற முனிவர் யாசகம் (பிச்சை) ஏற்று வாழ்ந்து வந்தார். ஒருமுறை ஊருக்குள் சென்று யாசகம் பெற்ற ஒரு பெண் வருத்தமுடன் உணவிட்டாள். அவளிடம், “பெண்ணே, ஏன் கவலையாக இருக்கிறாய்” என்றார். அவளும் மச்சேந்திரரை வணங்கி, “முனிவரே, எனக்கு திருமணமாகி 10 ஆண்டாகி விட்டது. குழந்தைப்பேறு இல்லை. இந்த ஊரார் கேலி செய்வதைக் கண்டு மனம் நோகிறது. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. தங்களுக்குத் தர்மம் செய்வதற்காக வெளியே வந்தேன். உங்கள் முகத்தைப் பார்த்ததும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றாள்.

“கவலைப்படாதே! சாமுத்திரிகா லட்சணப்படி உனக்கு குழந்தைப்பேறு உண்டு. ஆனால் குழந்தை பெறும் காலம் இன்னும் இல்லை. என் சக்தியால் திருநீற்றை வரவழைத்து உனக்கு தருகிறேன். அதை சாப்பிட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்” எனக் கூறி கண் இமைக்கும் நேரத்திற்குள் திருநீறை வரவழைத்து கொடுத்தார். அவளும் “அப்படியே செய்கிறேன், முனிவரே” எனக் கூறி வீட்டுக்குள் சென்றாள். முனிவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இருவரும் பேசியதை கவனித்த பக்கத்து வீட்டுப்பெண் சற்று நேரத்தில் வந்தாள். “நீண்ட நேரமாக முனிவருடன் பேசிக் கொண்டிருந்தாயே... ஏன்” எனக் கேட்டாள்.

அவளும் நடந்ததைச் சொல்ல, “உன்னை மயக்குவதற்காக வசிய மருந்தை திருநீறு எனக் கொடுத்துள்ளார். பத்து ஆண்டாக குழந்தையில்லாத உனக்கு திருநீறு சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா... ஜாக்கிரதை” என பயமுறுத்திச் சென்றாள். நீண்டநேரமாக யோசித்த அவளுக்கு பயம் ஏற்பட்டது. கையில் இருந்த திருநீறை மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாம்பல் குவியல் மீது வீசினாள். ஓராண்டு கழித்து முனிவர் மச்சேந்திரர் மீண்டும் ஊருக்கு வந்தார். வீட்டு வாசலில் நின்றபடி அவளை அழைத்தார். வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்தபடி 'யாசகம் இல்லை' என்றாள். அந்த பெண்ணை நோக்கி, “குழந்தையைக் துாக்கிக் கொண்டு பயப்படாமல் வா” என அழைத்தார். அவள் தயங்கியபடி, “முனிவரே... தவறு செய்த என்னை மன்னியுங்கள். வசிய மருந்து என எண்ணி திருநீறை வீசி விட்டேனே” என அழுதாள்.

''பெண்ணே! திருநீறை எங்கே எறிந்தாய்?” எனக் கேட்க மாட்டுத் தொழுவத்தைக் காட்டினாள். மச்சேந்திரர் அந்த பெண்ணுடன் தொழுவத்திற்கு வந்தார். அங்கு பசு ஒன்று நாக்கினால் சாம்பல் கொட்டிக் கிடந்த இடத்தை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். தன் குரலை உயர்த்தி “கோரக்கா! வெளியே வா! மச்சேந்திரன் அழைக்கிறேன்” என்றார். அப்போது , “வணங்குகிறேன் முனிவரே” என்ற குரல் கேட்டது. சாம்பல் குவியலில் இருந்து அழகான குழந்தை தோன்றியது. அதை துாக்கி, “பெண்ணே! இதோ உன் குழந்தை” என்றார் மச்சேந்திரர்.

ஒரு வயது நிரம்பிய அந்த குழந்தை புன்சிரிப்புடன் தாயைப் பார்த்து சிரித்தது. மச்சேந்திரர், ''பெண்ணே, என் மீது நம்பிக்கை வைக்காமல் திருநீறை வீசி எறிந்தாய். ஆனால் உன் வீட்டு பசுவோ தன் கன்று போல இந்த தெய்வீக குழந்தையை வளர்த்துள்ளது. பசு பாதுகாத்ததால் குழந்தைக்கு 'கோ ரட்ச நாதர்' என பெயரிட்டு 'கோரக்கா' என அழைத்தேன். சாம்பலில் பிறந்த இவனுக்கு அழிவே கிடையாது. இனி குழந்தை இல்லை என்ற கவலை உனக்கு இல்லை. உலகமே போற்றும் ஒருவனை மகனாக பெற்றுள்ளாய். இவன் கோரக்க நாதனாக உலகை ஆட்சி செய்வான்” என்றார்.

முனிவரின் காலில் விழுந்த அந்த பெண் மன்னிப்பு கேட்டாள். குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தாள். வேதம், ஞானத்தை கற்றுக் கொண்ட கோரக்கர் வைத்தியம், ஞானம், யோகம் அனைத்திலும் சிறந்து விளங்கினார். நந்திதேவரை குருநாதராக ஏற்றுக் கொண்டார். திருமூலர், போகர், சட்டைமுனி, கொங்கணர் ஆகிய சித்தர்களுடன் பயின்று சித்து வேலைகளில் கைதேர்ந்தார். சதுரகிரியில் சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். அகவாழ்க்கை, புறவாழ்க்கை இரண்டின் ரகசியத்தையும், உடலோடு பேரின்ப நிலையை அடையும் ரகசியத்தையும் அறிந்தார். மக்கள் நோயின்றி வாழ வேண்டும் என்பதற்காக பல ரகசியங்களை நுால்களாக எழுதி வைத்தார். மரணத்தை வெல்ல வேண்டும், பிரம்மா எழுதிய விதியை வெல்ல வேண்டும். நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக 'பிரம்ம கற்பம்' என்ற நுாலை எழுதினார்.

“பூமியில் வாழும் மக்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என சித்தர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அதற்காக உடல், மனதை வருத்தி யாகங்கள் செய்து, ஆற்றல் பெற்றிருக்கின்றனர். இதை நினைத்தாலே மகிழ்ச்சி பெருகுகிறது” என மகேஸ்வரனை வணங்கினார் நாரதர். “சித்தர்கள் எதையும் எளிதாக பெற்று விடவில்லை. நாங்கள் வைக்கும் ஒவ்வொரு சோதனையிலும் வெற்றி பெற்றே தங்களின் ஆற்றலை மெருகேற்றினர். யாகம் செய்து முப்பெரும் தேவர்களின் ஆற்றலை பெற்ற கோரக்கரைப் பற்றி இன்னும் பல தகவல் உள்ளன. அதையும் சொல்கிறேன். சற்று பொறுங்கள் நாரதரே” என்றார் மகேஸ்வரன்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us