தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 7

தெய்வத் திருமணம் - 7

தெய்வத் திருமணம் - 7


ADDED : டிச 17, 2025 01:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 01:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரம்மன் - சாவித்திரி திருமணம்

ஒரு சமயம் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கும், செல்வக் கடவுளான மகாலட்சுமிக்கும் இடையில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்தப் போட்டியில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அப்போது அங்கு வந்த பிரம்மனிடம், “இருவரில் யார் உயர்ந்தவர்?” எனச் சொல்லும்படி வேண்டினர்.

சரஸ்வதியின் கணவரான பிரம்மன், “மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களைத் தரும் மகாலட்சுமியே உயர்ந்தவர் என மக்கள் வழிபடுகின்றனர். எனவே அவரே உயர்ந்தவர்” எனத் தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்பைக் கேட்ட சரஸ்வதி கோபத்துடன், “பூலோகத்திலிருப்பவர்கள் பணம் ஒன்றே வாழ்க்கை என்ற மாயையில் மூழ்கிக் கிடக்கின்றனர். வசதியான வாழ்க்கை என நினைத்துப் பலவிதமான பொருட்களைச் சேர்த்துப் பெருமை கொள்கின்றனர். அவை அனைத்தும் அழியக் கூடியவை என்பதும், அனைவரையும் நல்வழியில் வாழ வைக்கும் அழியாத மெய்ப்பொருள் கல்வி என்பதும் தாங்கள் அறியாததா? உண்மையை ஒதுக்கி மாயைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய தங்களுடன் இனி சேர்ந்து வாழப் போவதில்லை” என கோபமுடன் அங்கிருந்து சென்றார்.

பூலோகம் வந்த அவர் சாசிய மலையில் அமர்ந்து தவமியற்றத் தொடங்கினார். சில ஆண்டுகள் கடந்து விட்ட பின்னர், பிரம்மன் தன்னுடைய படைப்புத் திறனை அதிகரிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தத் திட்டமிட்டார். அந்த வேள்வி தம்பதியாக இருவரும் சேர்ந்து செய்ய வேண்டியது என்பதால் சரஸ்வதியைச் சமாதானப்படுத்தித் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக வந்தார் பிரம்மா. அவருடன் வர முடியாது என மறுத்தாள் சரஸ்வதி. தான் செய்ய விரும்பிய வேள்வியை எப்படியும் நடத்த வேண்டுமென்று நினைத்த படைப்புக் கடவுளான பிரம்மா, தன் மனைவியான சரஸ்வதியின் தோற்றத்தில் புதிதாக ஒரு பெண்ணைப் படைத்தார். அவளுக்கு சாவித்திரி என பெயர் வைத்தார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வேள்வியைச் செய்யத் தொடங்கினார்.

பிரம்மா புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வேள்வி நடத்துவதை அறிந்த சரஸ்வதி கோபம் கொண்டார். பிரம்மா தொடங்கிய வேள்வியை அழித்து விட வேண்டுமென நினைத்த அவர் பாலாறு என்னும் பெயரில் பெருக்கெடுத்து வேள்விக் குண்டத்தை நோக்கிப் பாய்ந்தார். அந்த நதியின் வேகத்தில் வேள்வி தடைப்பட்டு நிற்குமோ என பயந்து மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார் பிரம்மா. சரஸ்வதியைச் சமாதானம் செய்ய மகாவிஷ்ணு முன் வந்தார். வேகமாக ஓடி வந்த நதியின் குறுக்காகத் தன் பாம்புப் படுக்கையான ஆதிசேஷனைப் படுக்க வைத்து நதியின் வேகத்தைத் தடுத்தார். பின்பு அந்தப் படுக்கையில் படுத்தபடி நதியாக ஓடி வந்த சரஸ்வதிக்குக் காட்சியளித்தார்.

வேகம் குறைந்த சரஸ்வதி, “நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வேள்வி நடத்தும் பிரம்மாவின் தவறான செயலுக்கு துணை போகாதீர்கள். பிரம்மாவின் வேள்வியை அழித்தால்தான் என் கோபம் தீரும். என்னைத் தடுக்க வேண்டாம்” எனக் கெஞ்சினார். அதைக் கேட்ட மகாவிஷ்ணு, “கோபம் கொள்ள வேண்டாம். பிரம்மா எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் நடத்தும் வேள்வி வெற்றிகரமாக நிறைவேறட்டும். அதுவரை அமைதி கொள்” எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால் சரஸ்வதி அவருடைய சொல்லைக் கேட்காமல், பிரம்மாவின் வேள்வியை அழிப்பதற்காக அங்கிருந்து மாற்று வழியில் தன் பயணத்தைத் தொடங்கினாள்.

அதனைக் கண்ட மகாவிஷ்ணு, அடுத்து ஒரு இடத்தில் அந்த நதியை மறித்து அதன் வேகத்தைக் குறைத்தார். வேகம் குறைந்த சரஸ்வதி, “ என்ன சுவாமி... பிரம்மாவின் தவறைக் கண்டிக்காமல், அவருக்கு ஆதரவாகத் தாங்கள் செயல்படுவது சரியா? என்னை தடுக்காதீர்கள்” என சொல்லியபடி அங்கிருந்து வேறு வழியில் ஓடத் தொடங்கினார். விஷ்ணு அவரது ஓட்டத்தை மீண்டுமொரு இடத்தில் மறிக்கச் செய்தார். அந்த நதியின் வேகம் வெகுவாகக் குறைந்தது. அப்போது விஷ்ணு சரஸ்வதியிடம், “பிரம்மா தான் விரும்பிய வேள்வியைச் செய்வதற்காகப் புதிதாக ஒருத்தியை படைத்துத் திருமணம் செய்து கொண்டு வேள்வியை நடத்துகிறார் என்று தானே கோபம் கொள்கிறாய்” எனக் கேட்டார். அவரும், “ஆமாம்” என்றார்.

“உன்னையே மனதில் கொண்டு, உன் மறு உருவமாக ஒரு பெண்ணைப் படைத்து பிரம்மா திருமணம் செய்து கொண்டார். பிரம்மாவுடன் வேள்வியில் அமர்ந்திருக்கும் அவள் உன்னுடைய மறுதோற்றம் தான். எனவே பிரம்மா வேறு திருமணம் செய்ததாக கருத வேண்டாம். உன் கோபத்தைக் குறைத்து அமைதி கொள்” என்றார் மகாவிஷ்ணு. அதனைக் கேட்ட சரஸ்வதி அமைதியடைந்து, “கோபத்தால் உண்மை புரியாமல் நான் தவறு செய்து விட்டேன். என் தவறைப் பொறுத்து, நதியாக ஓடி வந்த என்னை மறித்து நின்ற இடங்களிலெல்லாம் எழுந்தருள வேண்டும்” என வேண்டினாள். அதை ஏற்ற மகாவிஷ்ணுவும் மூன்று இடங்களிலும் (வேலுார் மாவட்டம் பள்ளி கொண்டா, திருப்பாற்கடல், காஞ்சிபுரம்) கோயில் கொண்டார்.

பிரம்மா அந்த வேள்வியைச் சிறப்பாகச் செய்து முடித்துத் தனது படைப்புத்திறனை மேலும் அதிகரித்துக் கொண்டார். சரஸ்வதியும் பிரம்மா மீது கொண்ட கோபத்தை மறந்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us