தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 25

பாரதியாரின் ஆத்திசூடி - 25

பாரதியாரின் ஆத்திசூடி - 25


ADDED : டிச 17, 2025 01:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 01:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயத்தை காப்போம்

ஆத்திசூடி என்றாலே அது குழந்தைகளுக்கான நீதி நுால் என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் பல நுாற்றாண்டுக்கு முன்பே அவ்வையார் சொன்னதை, பாரதியார் இன்னும் கொஞ்சம் சுய முன்னேற்றம், வாழ்வியல் கருத்துக்களைத் தன் பாணியில் சொல்லியதே புதிய ஆத்திசூடி.

இளமையில் கல் என்பதற்கேற்ப, சிறு வயது முதல் ஆத்திசூடி, திருக்குறள், பாரதியாரின் படைப்புக்கள் எல்லாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நான் படித்த நெய்வேலி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வைத்திய நாதேஸ்வரன் புதிய ஆத்திசூடியை ஒரு பதாகையாக ஒவ்வொரு வகுப்பறையிலும் வைத்திருந்தார். மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம் இது கண்ணில் படும். மனதில் பதியும். இன்றைக்கும் எண்பது வயது பெரியவரான அவர் வாரந்தோறும் தினமலர் ஆன்மிக மலர் படித்துவிட்டு அலைபேசியில் பாராட்டுவார். அப்படி நல்ல கருத்துக்கள் மனதில் பதிந்து விட்டால் நேர்மறை எண்ணங்களால் நம் வாழ்வே சிறந்து விளங்கும்.

விவசாயத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற பொருளில் 'மேழி போற்று' என்கிறார் பாரதியார். 'மேழி' என்பது உழவுக் கருவியான கலப்பையைக் குறிக்கும்.

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' எனப் பாடுவதுடன், வேலை செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களைக் கூறும் போது, 'வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்கிறார். விவசாயம் எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் தொழில் மட்டுமல்ல, மண் வளத்தை மேம்படுத்தவும், வளமாக்கவும் உதவும் ஒன்று. இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தானே!.

'உயிர் விதைப்பவன் கடவுள் என்றால்... உயிர் வாழ விதை விதைப்பவனும் கடவுள் தான்...' என்கிறார் கவிஞர் ஒருவர். விவசாயத்திற்கு தனியாக கல்லுாரிகள் இருந்தும் இந்தியா விவசாய நாடு என அறிந்திருந்தும், விவசாயம் பற்றிய உண்மையான புரிதல் இல்லை. விவசாயத்தை மேம்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே குறைவாகவே இருக்கிறது.

விவசாயம் பற்றி திருவள்ளுவர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

அதாவது, விவசாயம் செய்து வாழ்பவர்களே உயர்ந்த வாழ்க்கை கொண்டவர்கள். ஏனெனில், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது அதாவது இயற்கையைப் போற்றி விவசாயத்தைக் காக்க வேண்டும் என்கிறார்.

மேலும்,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்

தில்லாளின் ஊடி விடும்

என்னும் குறளில் தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், உழவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவி போல அது விளைச்சல் இல்லாமல் போய் விடும் என்கிறார். விவசாய வளத்தைப் பற்றிக் கூறும்போது,

இனிய பொழில்கள், நெடிய வயல்கள்

எண்ணரும் பெரும் நாடு

கனியும் கிழங்கும் தானியங்களும்

கணக்கின்றித் தரு நாடு என்றும்

தோட்டத்திலே மரக்கூட்டத்திலே

கனி யிட்டத்திலே பயிரூட்டத்திலே

தேட்டத்திலே யடங்காத நிதியின்

சிறப்பினிலே உயர்நாடு

என்று பாடுகிறார் பாரதியார்.

'வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும்

மாந்தர் குலதெய்வமாவான்'

'ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்' என்றெல்லாம் எழுதுகிறார்.

கரிசல் மண் எழுத்தாளர் கி.ரா., படைப்புகளில் கரிசல் விவசாயம், விவசாயப் போராட்டம் பற்றிய இவரது படைப்புகள் விவசாயிகளின் வாழ்வை துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

விவசாய அறிஞர் கோ.நம்மாழ்வார் 'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்' என்ற புத்தகத்தை வெளியிட்டு இயற்கை விவசாயம் மூலம், பசியற்ற சமூகத்தை உருவாக்கும் வழிகளைக் கூறுகிறார். இயற்கை விவசாயத்தின் முக்கியத்தன்மையை நாடு உணரத் தொடங்கி விட்டது. சமீபத்தில் பிரதமர் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை கோவையில் துவக்கி வைத்து அதன் முக்கியத்துவத்தையும், மத்திய அரசின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.

பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். உலகளவில் பல கோடிகளில் வியாபாரம் செய்யும் ஒரு தொழிலதிபர், சமீபத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளார். பெரும்பாலான மக்கள் பொறாமை, பேராசை, கோபம் போன்ற உணர்வுகளால் சிரமப்படக் காரணம் சாப்பிடும் விஷ உணவே என்பதை உணர்ந்து இயற்கை விவசாயத்தில் மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயத்தைச் சார்ந்த கிராமப்புறத் தொழில்கள், கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தி, பட்டு உற்பத்தி, விவசாய உற்பத்திப் பொருள்கள் சார்ந்த சிறு தொழில், குறுந் தொழில்களை வளர்ச்சி பெறும். அதன் மூலமே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

விவசாயத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது நீர்ப்பாசனம். ஏரி, குளம், கண்மாய் கால்வாய்களைச் சீரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். நாட்டிலுள்ள நதிகளை எல்லாம் படிப்படியாக இணைக்க வேண்டும். இதையே,

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

என பாரதியார் தொலைநோக்குடன் பாடினார்.

கவிஞர் மருதகாசி பாடும் போது,

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேணும் வெளிநாட்டில்

ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்

என்ற வரிக்கேற்ப, நம் நாட்டு நீர்வளத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டால் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதை உறுதிப்படுத்த முடியும். அத்துடன் உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என பாரதியார் உணவின் முக்கியத்துவத்தையும், அதில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என நமக்கு வலியுறுத்தினார்.

விவசாயம் பற்றிப் பேசும் போது பாரதிக்குப் பின், கண்ணதாசனின் இந்த வரிகளைக் கூறாமல் இருக்க முடியாது.

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

போராடும் வேலை இல்லை

யாரோடும் பேதம் இல்லை

ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

கைகட்டிச் சேவை செய்து

கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு

பொய் சொல்லிப் பிச்சை பெற்றால்

அன்னை பூமி கேலி செய்வாள்

தேர் கொண்ட மன்னன் ஏது

பேர் சொல்லும் புலவன் ஏது

ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?

போர் செய்யும் வீரன் ஏது?

விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்,

மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே.

அன்று ஒரு பருக்கைச் சோறு சிந்தினால் அதை எடுத்து போட்டு சாப்பிட்ட காலம் மாறி அதன் மதிப்பு தெரியாத காலத்தில் வாழ்கிறோம். நம்மில் எத்தனை பேர் விவசாயம் செய்ய நினைக்கிறோம் என்பதை இன்றைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சாகுபடி செய்வதற்கு உரிய உதவி, பங்களிப்பை அரசு தவறாமல் செய்தால் விவசாயம் சாகும்படியான நிலையை அடையாது. உரிமைக்காக குரல் கொடுத்தது அன்று உணவுக்காக குரல் கொடுக்கும் நிலை வரக் கூடாது.

நிலத்தை விற்றுப் பணத்தைப் போட்டால் வட்டி வரும் -ஆனால் பசிக்குச் சோறு தருமா என்பதை மனதில் நிறுத்தவேண்டும். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் கவிதை, பசித்தோருக்கு உணவளிப்பது அனைவரின் கடமை என உணர்த்துகிறது. அதையே உழவைப் போற்று (மேழி போற்று) என்பதன் மூலம் பாரதியார் நமக்கு எடுத்துச் சொல்கிறார்.

-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us