ADDED : டிச 17, 2025 01:45 PM

திருவாரூர் தியாகராஜசுவாமி - நெய்முறுக்கு
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் தினமும் காலை பூஜையில் தோசை, சம்பா சாதம், மதிய பூஜையில் சம்பா சாதம், பாவக்காய் மோர்க்குழம்பு, துாதுவளை துவையல் நைவேத்யம் செய்யப்படுகின்றன. மாலை பூஜையில் தலா ஒன்று என்ற எண்ணிக்கையிலும், இரவு பூஜையின் போது தலா இரண்டு என்ற எண்ணிக்கையிலும் தேன்குழல் நெய்முறுக்கு, அப்பம், வடை, சுழியன், புட்டு என ஐந்து பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்படுகின்றன. இரவில் பால்பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
திருவாரூர் கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட தேன்குழல் நெய்முறுக்கு, அப்பம், வடை, சுழியன், புட்டு முதலான ஐந்து பிரசாதங்களும் மாலை 5:45 மணிக்கு மேளதாளத்துடன் தியாகராஜர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டு ஆறு மணி பூஜையின் போது நைவேத்யம் செய்யப்படும். இந்த நெய்முறுக்கை தேன்குழல் என்று சொல்வர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகப் பழமையானது. பிரம்மாண்டமான பெரிய கோயில் இது. சைவ மரபில் இதை பெரியகோயில் எனவும் திருமூலட்டானம் எனவும் சொல்வர். சைவத்திற்கு கோயில் தில்லை என்றால் சிவபெருமான் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 87வது சிவத்தலம் இது. உலகிலேயே பெரிய தேரான ஆழித்தேர் இங்குள்ளது.
திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பது ஐதீகம். சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்ற தலம். “கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி” என்பது இங்கு சொல்லும் பழமொழி. மிக பிரம்மாண்டமாக 33 ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோயிலில் 9 ராஜகோபுரம், 80 விமானம், 12 பெரிய மதில், 13 பெரிய மண்டபம், 15 தீர்த்தக்கிணறு, 3 நந்த வனம், 3 பெரிய பிரகாரம், 365 லிங்கங்கள், 100க்கும் மேலான சன்னதி, 86 விநாயகர் சன்னதிகள் உள்ளன.
வான்மீகிநாதர், தியாகராஜர் என்னும் பெயர்களில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. இதில் வான்மீகிநாதர் சன்னதி பழமையானது. இதிலுள்ள சிவலிங்கம் புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியது. அப்பர் சுவாமிகள் இதனால் இவரை 'புற்றிடங்கொண்டார்' என அழைக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால் அவரது முழு திருமேனியை எவராலும் காண இயலாது. எனவே பக்தர்களால் அவரது திருமுகத்தையும், அருகிலுள்ள அம்மனின் திருமுகத்தை மட்டுமே காண இயலும்.
தியாகராஜர் கோயிலில் உள்ள கமலாம்பாள் சன்னதி புகழ் மிக்கது. இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாக அமர்ந்திருக்கிறாள். முத்துசுவாமி தீட்சிதர் இவள் மீது நவாவர்ணக் கீர்த்தனைகள் பாடியுள்ளார். சரஸ்வதி வீணையை வைத்தபடி இருப்பது வழக்கம். ஆனால் திருவாரூரில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம். இங்கு சிவபெருமானை நோக்கி சரஸ்வதி தவமிருப்பதாக ஐதீகம். ஹயக்ரீவர் தனி சன்னதியில் சிவபூஜை செய்வதை நாம் காணலாம். இதனால் 'ஹயக்ரீஸ்வரர்' என இவரை அழைக்கிறார்கள்.
ஒரு சமயம் தேவலோகத்தில் நேர்மையானவர் யார் என்ற விவாதம் ஏற்பட்டது. நானே நேர்மையானவன் என்றார் எமன். அதற்கு நாரதரோ, 'பூலோகத்தில் மனுநீதிசோழன் என்றொரு நேர்மையான மன்னர் இருக்கிறார்' என்றார். உண்மையை அறிய எமதர்மன் பசுவாக வடிவெடுத்து கன்றுடன் திருவாரூர் ராஜவீதியை வந்தடைந்தார். அச்சமயத்தில் மனுநீதிச் சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரைச் செலுத்தியபடி வந்து கொண்டிருக்க. அப்போது கன்று குறுக்கே வந்து தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்தது.
உடனே பசு அரண்மனைக்குச் சென்று தன் கன்று இறந்து போனதற்கு நீதி கேட்டது. கன்றை இழந்த தாய்ப்பசு எப்படி வேதனைப்படுமோ அதே அளவிற்குத் தானும் வேதனைப்பட வேண்டும் என முடிவு செய்தான் மனுநீதிச்சோழன். மகன் என்றும் பாராமல் வீதிவிடங்கனை தேர்ச்சக்கரத்தில் ஏற்றிக் கொன்றார். பசு வடிவத்தில் இருந்த எமன் சுயரூபத்தைக் காட்டி மனுநீதிச்சோழனிடம் “நீ நேர்மையானவன்” எனக் கூறி எமலோகம் சென்றார். இதை விளக்கும் விதத்தில் கோயிலின் வடகிழக்கு மூலையில் கல்லால் ஆன தேர் உள்ளது.
திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தேவார பாடலில், “ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே” எனக் குறிப்பிடுகிறார். இங்கு தேர்த்திருவிழா மிக புகழ் பெற்றது. “திருவாரூர் தேரழகு” என புகழப்படும் சிறப்புடையது. 96 அடி உயரம், 31 அடி அகலம், 350 டன் எடை கொண்டது. திருவாரூர் தேரில் அமைக்கப்பட்டுள்ள 64 துாண்கள் 64 கலைகளைக் குறிக்கும். நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளும், நானுாறு மரச்சிற்பங்களும் உள்ளன. ஆழித்தேர் அலங்காரம் செய்யப்பட்டு வலம் வருவதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.
மயிலாடுதுறை - நாகப்பட்டினம், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் ரயில் மார்க்கத்தில் திருவாரூர் ரயில் நிலையம் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து பஸ் வசதி உள்ளது. இனி நெய்முறுக்கு செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி களைந்து பின் ஒரு துணியில் பரப்பி நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும். ஈரம் போகக் காய்ந்ததும் உளுந்தைச் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சலித்து அகலமாக பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு உப்பு சீரகத்தைச் சேர்த்து நீர் விட்டு தளதள என்றோ கெட்டியாகவோ இல்லாமல் முறுக்கு பிழியும் பதத்திற்குப் பிசைய வேண்டும்.
பின்னர் நெய்யை அகலமான கடாயில் ஊற்றி நன்கு சூடானதும் அளவான தீயில் வைத்து முறுக்கைச் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது தியாகராஜ சுவாமிக்கு உகந்த நெய்முறுக்கு தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

