ADDED : ஜன 08, 2026 11:14 AM

கருவூராருக்கு காட்சியளித்த நெல்லையப்பர்
“பூலோகத்தில் பெண்கள் எல்லாம் கணவர் மீது கோபப்படுகிறார்கள். ஆனால் தாங்கள் மட்டும் எப்படி கணவரிடம் கோபப்படாமல் இருக்கிறீர்கள்?” என பார்வதியிடம் வம்பிழுத்தார் நாரதர். “என்ன நாரதரே, உங்கள் கலகம் இன்று என்னிடமிருந்தா?” என பார்வதி கேட்க, “மன்னியுங்கள். தாங்கள் மகேஸ்வரனிடம் கோபித்து நான் பார்த்ததில்லை. அதனால் தான் கேட்டேன்” என்றார்.
அதற்கு மகேஸ்வரன் சிரித்தபடி, ''நாரதா! நானின்றி அவளில்லை. அவளின்றி நானில்லை. சிவம் பாதி, சக்தி பாதியாக உலகிற்கு உதாரணமாக இருக்கிறோம். எங்களைப் போல இருந்து விட்டால் கோபத்திற்கு இடம் இருக்காது” எனச் சொல்ல பார்வதி வெட்கம் கொண்டாள். மேலும் நாரதர் தொடர்ந்தார். ''தாங்கள் வேண்டுமானால் கோபப்படாமல் இருக்கலாம். ஆனால் பக்தர் ஒருவர் சிவன் மீதுள்ள கோபத்தால் வணங்காமல், திரும்பிப் போனாராமே...” என கலகத்தை மீண்டும் ஆரம்பித்தார்.
“இன்று ஒரு முடிவுடன்தான் இருக்கிறீர். திறமையானவர்கள் இறுமாப்புடன் தானே இருப்பார்கள். சிவனை மறவாத கருவூரார் என்ற சித்தர் கோபத்துடன் போனார். அதுவும் மகேஸ்வரனின் திருவிளையாடலே” என்றாள் பார்வதி.
கொங்கு நாட்டைச் சேர்ந்த பொற்கொல்லர் தான் இந்த கருவூரார். உலோகத்தை உருக்குவதில் வல்லவர். அப்படி மெய் மறந்தவர்களில் மகேஸ்வரரும் ஒருவர். கருவூரார் சிலை வடிப்பதைப் பார்த்து வியந்து போய் அவ்வப்போது நேரில் வருவது மகேஸ்வரனின் வழக்கம். ஒருமுறை கருவூரார் கோயிலை அடைந்தார். கோயிலுக்குள் கருவூரார் வந்த நேரத்தில் சுவாமிக்கு நைவேத்யம் நடந்ததால் கருவறை திரை போடப்பட்டிருந்தது. தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றமடைந்த கருவூரார் காத்திருந்த பக்தர்களிடம், “இந்த கோயிலில் சுவாமி இல்லை. அதனால் இக்கோயிலுக்கு பாதை எதற்கு'' என வெளியேறினார்.
அவர் பிரகாரத்தைத் தாண்டியதும் கோயிலைச் சுற்றி புதர் வளர்ந்து பாதையை மறைத்தன. பக்தர்கள் கோயிலை விட்டு வெளியே வர முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் அதிர்ச்சி அடைந்தனர். பக்தர்கள் அனைவரும் உரத்த குரலில், “நெல்லையப்பரே... இது என்ன விளையாட்டு?” என கத்தினர். கருவூரார் முன்னர் தோன்றி, “ கோபம் வேண்டாம். ஆகம விதிப்படி நைவேத்ய நேரத்தில் தரிசனம் தர முடியாது என்பதால் தான் காட்சிதரவில்லை” என்றார் நெல்லையப்பர். சுவாமியின் காலில் விழுந்து, “நெல்லையப்பரே... என்னை மன்னியுங்கள். தங்களை தரிசிக்க முடியாத வருத்தத்தில் என் புத்தி கலங்கி விட்டது” என கண்ணீர் சிந்தினார் கருவூரார்.
“சித்தரே... உம் திறமையை மட்டுமல்ல, பக்தி, அன்பைக் கண்டு மெச்சினோம்” எனக் கூறி கோயிலுக்கு திரும்பினார் நெல்லையப்பர். அப்போது கருவூரார் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் ஒரு பொற்காசு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டே கோயிலுக்கு திரும்பினார். வழியை மறைத்து வளர்ந்த புல், புதர் எல்லாம் மறைந்தது. மேலும் கருவூரார் அந்த பொற்காசுகளை உருக்கி நெல்லையப்பருக்கு சிலை வடித்தார். சிவனின் திருமேனியை பொன்னால் வடித்த கருவூராருக்கு இக்கோயிலில் சன்னதி உள்ளது.
பின்னர் சிவபெருமானின் ஆணைப்படி பொதிகை மலைக்குச் சென்று அகத்தியரின் ஆசி பெற்றார். சித்த மருத்துவ நுால்களான வாதகாவியம் 700, பல திரட்டு, வைத்தியம் 500, கற்பவிதி 39, அஷ்டமாசித்து ஆகிய நுால்களை எழுதினார். ஒருநாள் கருவூராரை வரவழைத்த திருமூலர், “சிதம்பரம் நடராஜருக்கு சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் சோழ மன்னர். அங்குள்ள பொற்கொல்லர்கள் பலமுறை முயற்சி செய்தும் அந்தப் பணி நிறைவேறவில்லை. ஆனால் மன்னரோ கோபத்தால் பொற்கொல்லர்களை தண்டிக்கிறார். உடனே அங்கு சென்று உதவி செய்'' என ஆணையிட்டார்.
சிதம்பரத்திற்கு சென்று பொற்கொல்லர்களை சந்தித்த கருவூரார், “நானும் உங்களைப் போல ஒரு பொற்கொல்லர் தான். மன்னர் ஏன் உங்களை தண்டிக்கிறார்” எனக் கேட்டார். “மன்னர் தன் கனவில் அழகிய நடராஜர் சிலை ஒன்றைக் கண்டார். அதை அப்படியே சிலையாக வடிக்க ஆசைப்பட்டார். அதற்காக சிறந்த ஓவியர் மூலம் நடராஜரை வரைந்தார். அதன் அடிப்படையில் சிலை செய்யும் பணியை எங்களிடம் ஒப்படைத்தார். அதற்காக பத்தரை மாற்று தங்கத்தை எங்களிடம் ஒப்படைத்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் சிலை வடிக்க முடியவில்லை” என்றனர்.
“சிலையை நான் செய்து தருகிறேன். இது திருமூலர் இட்ட கட்டளை. நான் பணியை முடிக்கும் வரை வெளியே காத்திருங்கள்” எனச் சொல்லி கருவூரார் அனுப்பி வைத்தார். மன்னர் வழங்கிய பத்தரை மாற்று தங்கத்தை உலையில் இட்டு உருக்க ஆரம்பித்தார். சரியான உருகுநிலை வந்ததும் 'செம்புச் செந்துாரம்' ஒரு விரல் அளவு சேர்த்தார். உடனே சிவந்த தங்கத்தைக் கொண்டு நடராஜர் சிலையை வடித்தார்.
காத்திருந்த பொற்கொல்லர்களை அழைத்து முழுநிலவு போல பிரகாசிக்கும் நடராஜர் சிலையை வழங்கினார். அதை அவர்கள் மன்னரிடம் அளிக்க அவர் பிரமித்தார். “என் கனவில் தோன்றிய பசும்பொன்னால் ஆன நடராஜர் சிலை இதுவே. நேர்த்தியாக வடிவமைத்து விட்டீர்கள், இவ்வளவு அழகிய சிலையை நான் கண்டதில்லை” என பாராட்டினார்.
பொற்கொல்லர்களும் வணங்கி, “மன்னா! இதை செய்தவர் கருவூரார்'' என்றனர். கோபம் கொண்டார் மன்னர். கருவூரார் தங்கத்தை எடுத்துக் கொண்டு போலி சிலையைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்டார். சோதித்து தங்கத்தில் செம்பு கலந்திருப்பதை கண்டுபிடித்தார். உடனே கருவூராரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அப்போது மன்னரின் முன்பு திருமூலர் தோன்றி, “பத்தரை மாற்று தங்கத்தில் சிலை செய்ய முடியுமா? செம்பு சேர்த்தால் தான் சிலை செய்ய முடியும். தங்கத்தை உனக்கே திருப்பித் தருகிறோம். இந்த சிலையை நீயும் திரும்பி கொடுத்து விடு. என் சீடனான கருவூராரை தண்டிக்காதே” என்றார். அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த கருவூரார் குருநாதரான திருமூலரை வணங்கினார். அப்போது மன்னரிடம், “சிலை செய்ய எவ்வளவு தங்கம் கொடுத்தாயோ அதே அளவு வெள்ளியை எடுத்துக் கொண்டு வா” என மன்னருக்கு கட்டளையிட்டார் திருமூலர். அதே அளவு வெள்ளியை மன்னரும் கொடுத்தார்.
அந்த வெள்ளியை உருக்கி செம்பு செந்துாரத்தை ஒரு விரல் அளவு சேர்த்தார். அப்போது அது இரண்டு மடங்கு பசும்பொன்னாக மாறியது. மன்னர் திகைத்துப் போனார். “சித்தர் கருவூரார் சிறந்த ரசவாதி. நீ அவரை நம்பவில்லை. அவர் செய்த சிலையை அவரிடம் திருப்பிக் கொடு. நீ கொடுத்த வெள்ளியை விட பலமடங்கு உயர்ந்த பத்தரை மாற்று தங்கத்தை கொடுத்துள்ளோம். வைத்துக்கொள். நாங்கள் செல்கிறோம்” என கருவூராருடன் சிலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் திருமூலர்.
துடித்துப் போனார் மன்னர். இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார். “சித்தர்களே... என்னை மன்னியுங்கள். சந்தேக புத்தியால் தவறு செய்து விட்டேன்” எனக் கதறினார். மேலும் கருவூரார் வடித்த நடராஜர் சிலையை சிதம்பரத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறு வேண்டினார்.
நாரதர் குறுக்கிட்டு, “மகேஸ்வரா! சித்தர்கள் செம்பை தங்கமாகவும், ஈயத்தை வெள்ளியாகவும் மாற்றும் வல்லமை உடையவர்கள் என உணர்ந்தேன். இந்த ரசவாதக் கலை எப்படி சித்தர்களுக்கு கைகூடியது” என வியப்புடன் சொல்ல பார்வதி புன்னகைத்தார். “பொறுமையாக இருங்கள் நாரதரே! சித்தர்கள் வழிவழியாக கற்றுக் கொடுத்த மாபெரும் கலை ரசவாதம். கருவூராரின் ரசவாதம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் மகேஸ்வரர்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடஷே்
90030 00250

