
ஐயப்பன் - பூர்ணகலா திருமணம்
மகரிஷி சத்யபூர்ணரின் மகள்களான பூரணை, புஷ்கலை இருவரும் ஐயப்பனைத் திருமணம் செய்ய விரும்பி தவமிருந்தனர். அதைக் கண்டு மகிழ்ந்து அவர்களுக்குக் காட்சியளித்த ஐயப்பன், அடுத்தப் பிறவியில் விருப்பம் நிறைவேறும் என வரம் அளித்தார். மறுபிறவியில் பூரணை, வஞ்சி மாநகரை ஆட்சி செய்த பிஞ்சகன் என்ற மன்னரின் மகளாகப் பிறந்தாள். அக்குழந்தைக்கு பூர்ணகலா என பெயரிட்டு வளர்த்தார். குழந்தை பருவத்திலேயே அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தாள்.
திருமண வயதை அடைந்த பூர்ணகலாவிற்கு நாளடைவில் சாஸ்தாவான ஐயப்பன் மீது பக்தி ஏற்பட்டது. தோழிகளுடன் சேர்ந்து சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபடத் தொடங்கினாள். பூர்ணகலாவிற்கு, ஐயப்பன் மீதான பக்தி காதலாக மாறியது. ஆனால் அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தாள். கடவுளைக் காதலிப்பதாகச் சொன்னால் இவளுக்கு மனநிலை பாதித்துவிட்டது என தோழிகள் கேலி செய்வர் என பயந்தாள்.
அவளுக்கு கோயிலில் இருக்கும் சாஸ்தாவின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென தோன்றியது. பெண்ணான தன்னை நீண்ட நேரம் கோயிலில் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தோழிகளுடன் சேர்ந்து அந்தக் கோயிலைச் சுத்தம் செய்தல், அழகுபடுத்துதல் என பணிகளைச் செய்து கோயிலில் அதிக நேரம் இருக்கத் தொடங்கினாள். ஆர்வத்துடன் பணிபுரியும் தன் மகளை நினைத்து அவளுடைய தாய், முதலில் பெருமை கொண்டாலும், பின்னாளில் திருமண வயதை அடைந்த பெண் கோயிலில் அதிக நேரம் இருப்பது சரியல்ல என நினைத்தாள்.
அதன் பின்னர் மகளிடம், கோயிலில் வழிபாடு செய்தவுடன் அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என சொல்லத் தொடங்கினாள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் கோயிலில் அதிக நேரத்தைச் செலவிட்டாள். கவலையடைந்த தாய், விரைவில் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டுமென சொன்னாள். மன்னர் பிஞ்சகனும் தன் மகளுக்கேற்ற மணமகனைத் தேடத் தொடங்கினார். அதை அறிந்த பூர்ணகலா தந்தையிடம், 'சாஸ்தாவான ஐயப்பனையே திருமணம் செய்ய விரும்புகிறேன்' எனச் சொன்னாள்.
அதனைக் கேட்ட மன்னன் ''கடவுளின் மீது பக்தி கொண்டிருப்பது சரி. அதற்காக, திருமணம் செய்ய முடியுமா? மனித வடிவில் பெண்ணாக வாழும் உன்னை எப்படி கடவுள் திருமணம் செய்வார்? நம் தகுதிக்கேற்ப அரச குடும்பத்தில் ஒருவரை திருமணம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னான். உடனே பூர்ணகலா, “ஐயப்பனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். என் மீது விருப்பம் கொண்டு அவரே வருவார்” என்றாள். அதைக் கேட்ட மன்னன், தன் மகள் ஐயப்பன் மீது கொண்ட பக்தி காரணமாக அப்படி சொல்கிறாள், அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைத்தால், பிரச்னை சரியாகும் என நினைத்தார். அதற்கான பணியைத் தொடங்கினார்.
ஒரு நாள் மன்னர் பிஞ்சகன் சில வீரர்களுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அங்கு தன்னுடன் வந்தவர்களைப் விட்டுப் பிரிந்து காட்டுக்குள் தனியாகச் சென்று விட்டார். இரவு நேரமாகி விட்டதால் எங்கும் செல்ல வேண்டாமென எண்ணி ஒரு மரத்தடியில் அமர்ந்தார். சுற்றிலும் இருட்டாக இருந்தது. திடீரென அங்கு கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்பு, அழுகை ஓலம் என பலவித ஒலிகள் கேட்டன. பயந்து போன மன்னர் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்த இடம் மயான பூமி என்பதும், அங்கே பேய்களும், பூதங்களும் நள்ளிரவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
அஞ்சிய மன்னர் மனதிற்குள் பூதநாதனாகிய சாஸ்தாவை நினைத்து கண்களை மூடி காப்பாற்றும்படி வேண்டினார். அதை ஏற்று சாஸ்தா, அந்த இடத்தில் குதிரை வீரனாகத் தோன்றினார். குதிரையில் வந்த சாஸ்தாவைக் கண்ட பேய்களும், பூதங்களும் அந்த இடத்தை விட்டுச் சென்றன. கண் முன்னே ஒளி வெள்ளம் தோன்றியதைக் கண்ட மன்னர் கண் விழித்தார். அங்கே இளைஞன் ஒருவன் குதிரையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனிடம், வேட்டையாடும் ஆர்வத்தில், தன்னுடன் வந்த வீரர்களை விட்டு வழிதவறியதைச் சொல்லி, தன்னை அரண்மனையில் கொண்டு போய் விடுமாறு வேண்டினார்.
அந்த குதிரை வீரனும் அவரைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். மன்னர் அந்த இளைஞனிடம் அரண்மனையில் தங்கி ஓய்வெடுக்கும்படியும், பணியாளர்களிடம் அதற்கான வசதிகளைச் செய்யவும் சொன்னார். அந்த இளைஞனும் அரண்மனையில் தங்கினான். மறுநாள் காலையில் மன்னர் காட்டுக்குள் தான் தனியாக சிக்கியதையும், இளைஞன் வந்து தன்னை காப்பாற்றியதையும் மனைவியிடம் கூறினார். மேலும் அவர் அழகும், வீரமும் நிறைந்த அவனுக்கே மகளைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.
அவளோ, அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கும்படி கூறினாள். மன்னரும் அப்படியே செய்தார். அமைச்சரோ தங்களைக் காப்பாற்றிய இளைஞனை முதலில் பாராட்டுவோம். அதன் பிறகு, இளவரசிக்கு அவன் பொருத்தமானவன்தானா? என்பதை விசாரித்து முடிவு செய்யலாம் என்றார். அதன்படி அரசவை கூடியது. அங்கு அந்த இளைஞன் அழைத்து வரப்பட்டான். அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இளைஞனின் பேரழகைக் கண்டு வியந்தனர். முதலில் மன்னரை காப்பாற்றியதற்காக பாராட்டிய அமைச்சர், அந்த இளைஞன் நம் இளவரசி பூர்ணகலாவிற்கு மிகவும் பொருத்தமானவனாக இருப்பான் என்று சொல்ல, மகிழ்ச்சியடைந்த மன்னன் அந்த இளைஞனிடம், தனது மகள் பூர்ணகலாவை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புவதாகச் சொன்னான்.
அந்த இளைஞன், 'தங்கள் விருப்பம் இருக்கட்டும், தங்கள் மகளுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமிருக்கிறதா?' என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னான். அனைவரும் வியந்து பார்க்கும் அழகான அந்த இளைஞனைத் தன் மகள் திருமணம் செய்து கொள்ள மறுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கையுடன், மகளை அங்கு அழைத்து வரும்படி சொன்னான். ஆனால் பூர்ணகலா தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், ஐயப்பனையே தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தாள். அப்போது அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முன் நிற்பது சாஸ்தாவான ஐயப்பன் என்பது புரிந்தது. உண்மையை உணர்ந்ததும் அந்த இளைஞனைத் திருமணம் செய்ய சம்மதித்தாள்.
மன்னரும் இளைஞனிடம், தாங்கள் விரும்பினால், இப்போதே என் மகளை திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றார். இளைஞனும் சம்மதிக்க திருமணம் நடந்தது. அத்திருமணம் நடந்த பின்பு, வந்திருக்கும் இளைஞன் சாஸ்தாவான ஐயப்பன் என்பதை அனைவரும் உணர்ந்து மகிழ்ந்தனர். தர்மசாஸ்தாவான ஐயப்பன் மனைவி பூர்ணகலாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தார்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925

