
புனித தலமான காசி விஸ்வநாதர் கோயிலின் பூஜாரி மண்டன மிஸ்ரா. இவர் அங்கு பணிபுரிந்த போது தங்கநகைகள் திருடு போனது. இந்நிலையில் காஞ்சி மஹாபெரியவர் கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகில் முகாமிட்டிருப்பதை மிஸ்ரா கேள்விப்பட்டார்.
சுவாமிகளை தரிசிக்க அங்கு வந்தார். சுவாமிகளிடம் காசியில் நடந்த திருட்டு பற்றி சொல்ல தயக்கமாக இருந்ததால், பொதுவிஷயம் பற்றி பேசினார். அப்போது அங்கு நின்ற தொண்டரிடம், 'மூணு பட்டு சால்வை கொண்டு வா' என்றார் சுவாமிகள்.
பதறிப் போனார் தொண்டர். ஏனென்றால் முகாமிட்ட இடமோ குடியிருப்பே இல்லாத காட்டுப்பகுதி. ஒரு சால்வை கூட கைவசம் இல்லை. தயங்கியபடி தொண்டர் நின்றிருந்த போது பக்தர் ஒருவர் துணி மூடையுடன் உள்ளே வந்தார். சுவாமிகளை நமஸ்காரம் செய்தார். மூடையைப் பிரிக்கும்படி கண்ணால் ஜாடை காட்டினார் மஹாபெரியவர். ஐம்பது பட்டு சால்வைகள் அதில் இருந்தன. அதைக் கண்டு அனைவரும் பிரமித்தனர்.
திருட்டு போனது பற்றி சுவாமிகளிடம் சொல்லலாமா என அவர் யோசித்த போது இன்னொரு பணக்கார பக்தர் முகாமிற்கு வந்தார். தட்டு நிறைய தங்க காசுகளை சமர்ப்பித்தார். சுவாமிகளை நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டார். மிஸ்ராவை பார்த்து புன்னகைத்தார் மஹாபெரியவர்.
'இந்த தங்க காசுகள், பட்டு சால்வைகளை காணிக்கையாக காசி விஸ்வநாதரின் பாதத்தில் சேர்த்து விடு' என்றார். திருட்டு பற்றி சொல்ல தயங்கிய தன்னிடம் விஸ்வநாதருக்காக தங்கத்தை காணிக்கை அளித்த 'நடமாடும் தெய்வமே' எனக் கண்ணீர் விட்டார் மிஸ்ரா.
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களால் மீண்டும் ஆசியளித்தார் மஹாபெரியவர்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யஷேு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

