தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 16

சித்தர்களின் விளையாட்டு - 16

சித்தர்களின் விளையாட்டு - 16


ADDED : ஜன 28, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்தர் கமலமுனி

“அட்டமா சித்திகளை கற்றுத் தேர்ந்த சித்தர்கள் எப்படி மனிதர்களைப் போல் இறப்பு என்ற வலையில் சிக்குகிறார்கள்” என நாரதர் கேட்க பரமேஸ்வரன் விளக்க ஆரம்பித்தார்.

“நாரதரே! நீர் ஒன்றும் தெரியாதவரல்ல. சித்தர்கள் இறப்பை தாங்களே விரும்பி ஏற்கிறார்கள். அவரது உடல்தான் இறந்து போகிறதே தவிர, ஆன்மா அல்ல. அது வேறொரு உடலில் பிரவேசிக்கும். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக சித்தர்கள் தோன்றியபடி இருக்கிறார்கள். தன் இறப்பிலும் இரண்டு முறை உயிர்த்தெழுந்து வந்த கமலமுனி சித்தரை தெரிந்து கொள்ளுங்கள் நாரதரே” என்றார்.

நான்கு முகம் கொண்ட பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்தார். அவரே பூலோக மக்களுக்கு படைப்பின் ரகசியத்தை கற்றுக் கொடுக்க கமலமுனி என்னும் சித்தராக அவதரித்தார்.

அப்போது பார்வதி குறுக்கிட்டு, “கமலமுனி சீனாவில் இருந்ததாக போகர் குறிப்பிடுகிறாரே! உண்மையில் கமலமுனி எங்கு தோன்றினார்” எனக் கேட்க மகேஸ்வரன் சொல்லத் தொடங்கினார்.

பாரத தேசத்தில் அவதரித்தவர் கமலமுனி. குருநாதரான போகரிடம் சித்துகளை கற்றுத் தேர்ந்தார். ஜோதிட ஞானம் பெற்று கமலமுனி 300, கைரேகை சாஸ்திரம் போன்ற நுால்களை எழுதினார். வாலைக்குமரியை “அம்மையே, அம்பிகையே, ஜோதியே, உமையவளே, வாலை பரமேஸ்வரியே, பராசக்தியே, அம்பாளே, மனோன்மணியே, முக்கன்னியே, உத்தமியே” என வழிபட்டு அருள் பெற்றார். உரோமரிஷியுடன் இணைந்து, பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற நுாலை எழுதினார். கைரேகை சாஸ்திரத்தில் இவர் கூறிய நுட்பமான ரகசியங்கள் இன்றும் போற்றப்படுகிறது. சாமுத்திரிகா லட்சணத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஒருவரின் கைரேகையை பார்த்தும், அவரது முகத்தைப் பார்த்தும் அவருடைய ஆயுளை சொல்லும் திறமை கொண்டிருந்தார்.

ஆன்மிக ஈடுபாடு கொண்ட கமலமுனி எதிர்காலம் பற்றி கணித்த போது மக்கள் ஆன்மிகப் பாதையில் இருந்து விலகுவதை கண்டு மனம் நொந்தார். எப்படியாவது மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என விரும்பிய அவர் சீனாவிலுள்ள மலை மீது அமர்ந்து தவம் மேற்கொண்டார்.

அவரைக் கண்ட பலர் தங்களை சீடராக ஏற்கும்படி வேண்டினர். 'நான் தவமிருக்க வந்ததே பாரத மக்களின் நன்மையை வேண்டித்தான். இதற்காக காகபுஜண்டரிடம் கற்றுக் கொண்ட ஜல சமாதி நிலையில் 20 ஆண்டுகள் இருக்கப் போகிறேன். அப்போது அதிசயங்கள் பாரதத்தில் நிகழும். இயற்கை செழிக்கும். பயிர்கள் நன்றாக விளையும். பறவைகள் இன்னிசை பாடும். விலங்கு மிருக குணத்தை விட்டு மென்மையாக நடக்கும். மலைகளில் தீபஒளி பிரகாசிக்கும். தங்களின் குருவைத் தேடி சீடர்கள் ஆன்மிகப் பயணம் செல்வர். கண்களை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும். பேச முடியாதவர்களும் சரளமாக பேசுவர். வானில் வெள்ளி போல நிலா பிரகாசிக்கும். ஆகாயம் இருண்டு, கரிய மேகம் சூழ்ந்து, மழை பொழிந்து, செழிக்கும். தெய்வ வழிபாடு எங்கும் சிறப்பாக நடக்கும். அரக்கர்கள், பேய்கள், பூதங்கள் கூட இயல்பை மறந்து திருந்துவர்.

20 ஆண்டுகள் கழித்து தாமரை மலரில் இருந்து வெளி வருவேன் எனக் கூறி, காட்டாற்றில் மிதந்த தாமரை மீது அமர்ந்தார். அதன் இதழ்கள் ஒவ்வொன்றாக மூடி நீருக்குள் மூழ்கியது. சீடர்கள் பிரமித்துப் போய் கமலமுனியை வணங்கினர். அவர் சொன்னபடியே அதிசயங்கள் நிகழ்ந்தன. 20 ஆண்டுகள் முடிந்த பின் தாமரை மேலே வந்தது. கமலமுனியைக் கண்டு சீடர்கள் மகிழ்ந்தனர்.

“கமலமுனியே! தங்களின் அருள்வாக்கு பலித்தது. பாரதம் செழித்து விளங்குகிறது. எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்” என்றனர். சீடர்களுக்கு சித்தி அடையும் வழிமுறையை 16 ஆண்டுகள் கற்றுக் கொடுத்தார். அரக்க குணத்தை நீக்கும் நோயைத் தடுக்கும் 'மகர கற்பம்' என்னும் காயகற்பம் செய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். பிரணாயாமம் மூலம் நீண்ட நாள் வாழும் வழியை காட்டினார். மூலிகைகள் அழிந்து விடக் கூடாது என்பதற்காக மூலிகைகளுக்குக் காப்புக் கட்டி, வணங்கும் மந்திரம் பற்றி எழுதினார். அபூர்வ மூலிகைகளையும், நீர்நிலைகளை காப்பதற்காக வராகி, காளி, பேச்சி, கருப்பணன் போன்றவர்களை காவல் தெய்வமாக வணங்கச் செய்தார். அனைத்து யுகங்களையும் கடந்து வாழ்ந்தார்.

ஆனால் நாளடைவில் கமலமுனி செய்த நன்மையை மறந்து மக்கள் மீண்டும் கெட்ட செயல்களில் இறங்கினர். ஆன்மிகம் செழித்திருந்த நாட்டில் மீண்டும் வன்முறையும், ஏமாற்றுச் செயலும் அதிகமானதைக் கண்டு வேதனைப்பட்டார். தன் சீடர்களை நோக்கி “ஒருமுறை ஜலசமாதியை செய்த பின் அடுத்த முறை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உயிர் போய்விடும். ஆனாலும் வேறு வழி இல்லை. மீண்டும் இந்த மக்களை ஆன்மிகத்தின் பக்கம் திருப்ப வேண்டும். அப்போது தான் அமைதி நிலவும். ஆகவே மீண்டும் சமாதி நிலைக்குச் செல்கிறேன். எப்பொழுது வருவேன் எனத் தெரியாது” எனக் கூறிச் சென்றார். அங்கிருந்தவாறே பல பிரளயங்களைக் கண்டார். கிருஷ்ணரின் பல அவதாரங்களைக் கண்டு மகிழ்ந்தார்.

சமாதி நிலைக்குச் சென்ற கமலமுனி வராததால் சீடர்கள் கவலை கொண்டனர். பரமேஸ்வரனை நோக்கி மன்றாடினர். அப்போது “கவலை வேண்டாம். கமலமுனி என் பாதக்கமலத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்” என அசரீரி ஒலித்தது. பரமேஸ்வரன் அருளால் சதுரகிரி மலையில் அருவ வடிவில் இருந்து தன் ஆன்மிக அனுபவத்தை எழுதத் தொடங்கினார் கமலமுனி.

“மக்களிடம் ஆன்மிகம் குறையும் போதெல்லாம் நாட்டில் குழப்பம் ஏற்படும். நீர்நிலைகள் வறண்டு போகும். ராட்சதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவர். மக்களின் நம்பிக்கைகளை பொய் என மறுத்து தெய்வங்களை சிறுமைப்படுத்துவர்” எனக் கணித்தார்.

கமலமுனியை பாராட்டிய உரோமரிஷி அவரது ஜோதிட நுாலை சதுரகிரியில் வெளியிட்டார். சதுரகிரியிலேயே காளங்கிநாதர், காகபுஜண்டர் சமாதி அருகில் தங்கி இருந்த கமலமுனி இறுதியாக குதம்பை சித்தர், அழுகணி சித்தரின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் அம்மன் சன்னதியில் முக்தியடைந்தார்.

மகேஸ்வரி தொடர்ந்தார். “பாரத நாட்டின் நன்மைக்காக சீனாவில் தவமிருந்த கமலமுனியை எண்ணி வியப்படைகிறேன். எதிர்காலத்தை அறிந்து கொண்டால் வாழ்வில் சுவாரஸ்யம் போய் விடுமே. மாயையின் மயக்கம் நீங்கி அனைவரும் மோட்சம் அடைவார்களே” என்று சொல்ல மகேஸ்வரன் புன்னகைத்தார்.

“கமலமுனி இந்த பாரத நாட்டை வளமாக்க வேண்டும் என தன்னை வருத்திக் கொண்டு தவமிருந்தார். இது போல நன்மை செய்பவர்களால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்பது நீ அறியாததா பார்வதி” எனக் கேட்க அவள் புன்னகைத்தாள்.

நாரதர் வியப்புடன்,“சித்தர்கள் மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் என அனைத்திலும் வல்லவராக இருக்கிறார்களே... அவர்களுக்கு சாதாரண மனிதர்களைப் போல துன்பம் நேருமா... மனிதனை ஆட்டுவிக்கும் கிரகங்கள் சித்தர்களை ஏன் ஒன்றும் செய்வதில்லை தாயே?'' என பார்வதியிடம் கேட்டார்.

“நாரதரே! தன்னை ஆட்டுவிக்க வந்த கிரகங்களை ஆளுக்கு ஒரு திசையாக மாற்றி துாங்க வைத்த சித்தரை பற்றி தெரியுமா?” என பார்வதி சொல்ல ஆரம்பித்தார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us