தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 19

சித்தர்களின் விளையாட்டு - 19

சித்தர்களின் விளையாட்டு - 19


ADDED : பிப் 19, 2026 02:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 02:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி

“பரமேஸ்வரா... தாங்கள் மீனுக்கு முக்தியளித்து சித்தராக அவதரிக்க வைத்த திருவிளையாடல் பற்றித்தானே சொல்கிறீர்கள்” என பார்வதி கேட்க, “ஒன்றும் தெரியாதது போல் கேட்கிறாயே' என அவர் தொடர்ந்தார்.

நாரதர் குறுக்கிட்டு “மகேஸ்வரா... வாழ்வின் ரகசியங்களை தாங்கள் பார்வதிக்கு உபதேசிக்க, அதை தடாகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த மீன் முக்தியடைந்து, மச்சமுனி சித்தராக அவதரித்ததே! அதைப் பற்றியா சொல்கிறீர்கள்?” என நாரதர் ஆர்வமுடன் கேட்டார்.

ஒருமுறை பார்வதிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் சிவபெருமான். மெய்மறந்து கேட்ட பார்வதியோ களைப்பால் சற்று அயர்ந்து விட்டாள். அப்போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று நீருக்கு மேலே வந்தது. கண் விழித்த பார்வதி அதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பரமேஸ்வரன் புன்னகைத்தபடி, “ நான் நீண்ட நேரமாக உபதேசித்ததால் அயர்ந்து விட்டாய். ஆனால் உபதேசத்தை கேட்ட இந்த மீன் ஞானம் பெற்றது” என்றார்.

“மன்னியுங்கள். ஏதோ களைப்பில் அயர்ந்துவிட்டேன்” என்றாள் பார்வதி. சிவனும் புன்னகைத்தபடி, “உன் தவறு ஏதுமில்லை பார்வதி. இந்த மீனுக்கு விமோசனம் அளிப்பதற்காகத்தான் இந்த விளையாட்டை நிகழ்த்தினோம்” என்றார்.

பின்னர் மீனை நோக்கி, “உனது ஜென்ம சாபல்யம் நீங்கியது. அடுத்த பிறவியில் மன்னர் குலத்தில் மச்சநாதராக பிறந்து இந்த உலகை ஆட்சி செய்வாய். ஆன்மிகத்தில் செழித்து விளங்குவாய்” என வரம் அளித்தார்.

பாண்டிய மன்னரான மச்சநாதர் பெருமையுடன் அரசாட்சி செய்தாலும் ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அரச வாழ்வில் மனம் செல்லாமல் முற்பிறவில் பெற்ற ஞானம் தொடர சிவ பக்தியில் ஈடுபட்டார்.

கோரக்கரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இமயமலையில் தவமிருந்தார். யோகக்கலைகளை கற்றுத் தேர்ந்தார். “ஆணவமே அழிவுக்குக் காரணம் என உணர்ந்தார். ஆணவ மலத்தை போக்க ஆன்மிகமே சிறந்தவழி” என மக்களிடம் வலியுறுத்தினார். அதனால் இமயமலை, நேபாள தேசத்தில் பேரும் புகழும் பெற்று மச்சேந்திரநாத் என அங்குள்ள மக்களால் வணங்கப்பட்டார்.

இமயமலையின் பல பகுதிகளில் தவம் செய்து இறுதியாக பாண்டிய நாட்டில் திருப்பரங்குன்றத்தை வந்தடைந்தார்.

ஏழை எளியவருக்கு தான, தர்மம் வழங்கினார். சதுரகிரி, கொல்லிமலை சென்று அரிய மூலிகைகள் கிடைப்பதில் ஏற்படும் சிரமத்தைப் போக்க, செயற்கை மூலிகைகள், உலோகங்கள், மருந்து தயாரிக்கும் முறைகளை கண்டறிந்தார். அதற்கு 'வைப்புச் சரக்கு' எனப் பெயரிட்டார்.

கிடைப்பதற்கு அரிய அபினி, கஸ்துாரி, புனுகு, சாம்பிராணி, போன்றவற்றை செயற்கையாக தயார் செய்யும் வைப்பு ரகசியங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார். அரிய சரக்குகளை செயற்கையாக செய்யும் சித்தர் வித்தைகளை கற்றுத் தேர்ந்ததால் இவருடைய நுால்களை அரங்கேற்ற மற்ற சித்தர்கள் தயங்கினர்.

கடைக் காண்டம், கலைஞானம், நிகண்டு, முப்பு தீட்சை, திராவகம், வைத்தியம், சரக்கு வைப்பு, பெருநுால், காவியம், மகாரம், யோகம், மச்சமுனி திருமந்திரம், வேதாந்தம், குருநுால், தண்டகம், தீட்சா விதி, ஞான தீட்சை, ஸ்துால சூட்சுமம், காரண ஞானம், சூத்திரம் 21 போன்ற மருத்துவ நுால்களையும் மாயஜால இயந்திரங்களை அடிப்படையாக கொண்ட மச்சமுனி மாயஜால காண்டம் என்ற நுாலையும் எழுதி திருமூலர் தலைமையில் வெளியிட்டார்.

சதுரகிரியில் புண்ணாக்கீசர், போகர், நந்திதேவர், காகபுஜண்டர் ஆகிய சித்தர்களிடம் ஆசி பெற்றார். பல ஆண்டுகளாக நீருக்குள் மூழ்கி, ஜலயோகம் செய்யும் ஆற்றலைப் பெற்றார். ஞானமார்க்கத்தில் இறங்கி பல யோக சித்தி கலைகளை கற்றுக் கொண்டார். திருமூலர், பதஞ்சலியோடு இணைந்து ஜலயோகம் பயின்றார். பின் திருமூலரோடு தில்லையில் சிவநடனத்தை கண்டு களித்தார்.

முற்பிறவியில் பெற்ற சிவஞானத்தை இப்பிறவியிலும் பெற விரும்பி பாண்டிய நாட்டில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிவன் காட்சியளித்த கல்லத்தி மரத்தின் அருகில், உள்ள தடாகத்தில் சிவபெருமானை வேண்டி தவமிருந்தார்.

அங்கு மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பின்பக்கமுள்ள சுனையில் தன் முற்பிறவியில் இருந்த மீன் உருவில் ஜலசமாதி அடைந்தார். அங்கிருந்து தினமும் சிவனை தரிசிக்கும் யோகத்தைப் பெற்றார். முருகன் குடியிருக்கும் திருப்பரங்குன்ற மலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்றும் மச்சேந்திரர் 'மச்ச முனியாக' வீற்றிருக்கிறார்.

“நாரதரே! சித்தர்களின் ஆன்மிகத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. பல சித்தர்கள் அரச வாழ்க்கை வாழ்ந்தாலும் சிவனை தரிசிக்க தங்களை அடியாராக மாற்றிக் கொள்கிறார்கள். மச்சமுனியும் அரச வாழ்வைத் துறந்து முக்தியடைந்து மீண்டும் மீனாக பிறவி எடுத்து பரமேஸ்வரரை இன்றும் தரிசித்துக் கொண்டிருக்கிறார்” என்றாள் பார்வதி.

நாரதர் தன் கலகத்தை ஆரம்பித்தார்.

“மச்சமுனியின் நுால்களை மற்ற சித்தர்கள் வெளியிடவில்லை எனக் கூறினீர்களே, இவ்வுலக மக்களை நல்வழியில் நடத்துவது தானே சித்தர்களின் கடமை. பிறகு ஏன் அவர்கள் அப்படி நடந்தார்கள்” எனக் கேட்க விளக்கம் அளித்தாள்.

-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us