தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 30

சித்தர்களின் விளையாட்டு - 30

சித்தர்களின் விளையாட்டு - 30


ADDED : ஜூன் 03, 2026 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புலிப்பாணி சித்தர்

மகேஸ்வரரை வணங்கிய நாரதர், “ஐம்புலன்களை அடக்கி ஆள்வதன் மூலம் ஐம்பூதங்களை கைக் கொள்ளலாம் என்பதை பாபாஜி சித்தர் மூலம் எளிமையாக எடுத்துக் காட்டிய தங்களை வணங்குகிறேன்” என பாதம் பணிந்து நின்றார்.

நாரதரை நோக்கி, “குருவின் திருவடியை பின்பற்றி ஞான மார்க்கத்தை அடைவது எளிது. சித்தர்கள் தங்கள் குருநாதரின் கட்டளையை சிரமேற்கொண்டு பணிபுரிவதை தங்களின் தலையாய கடமையாக வைத்திருக்கின்றனர். அதனால் தான் அவர்களால் வாதம், வைத்தியம், யோகம், ஞான மார்க்கங்களில் சாதிக்க முடிந்தது. சாமானியர்களைக் கூட சித்தர் ஆக்கிய பெருமை சிவனுக்கு உண்டு.

சிவனின் பாதத்தை பணிந்தவர்கள் சித்தர்கள். தங்கள் குருவின் கட்டளைக்கு கீழ்படிந்தவர்கள். அதை நிரூபிக்க புலியை வைத்து போகர் முன்பாக சிவன் செய்த திருவிளையாடல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என பார்வதி சொல்ல ஆரம்பித்தார்.

மகேஸ்வரர் புன்னகைத்தபடி, “ஆம் நாரதரே! மனிதர்களின் பல்வேறு குணங்களின் அடையாளத்தை தாங்கி நிற்கும் நரி, சிங்கம், குரங்கு, யானை, புலி என அனைத்துமே மாயைதான். அகத்தின் ஆணவத்தால் தோன்றும் புறக்காரணங்களை புறந்தள்ளி, அகத்தை அடக்கிய சித்தர்களுக்கு புறத்தை அடக்குவது எம்மாத்திரம். அதனால்தான் கொடூரமான புலியை அடக்கி அதன் மீதேறிச் சென்று போகருக்கு சேவகம் செய்த புலிப்பாணி சித்தர் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்” எனக் கூற ஆரம்பித்தார்.

சீன தேசத்தில் இருந்து ஒரு சீடருடன் பாரத தேசம் வந்த போகர் பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை அமைக்க முடிவு செய்தார். அதற்கான கலவையை தயார் செய்து, மூலிகைகளை அரைத்துச் சாறு எடுத்து, நவ பாஷாணங்களுக்குச் சுருக்குக் கொடுத்து பக்குவப்படுத்தினார். அப்போது அவருக்கு மருந்தினை சிறப்பாக முடிக்க பனிநீர் தேவைப்பட்டது.

அமராவதி நதி பிரியும் சண்முக நதியில் பனிநீரை எடுக்க நினைத்தார். அதற்காக மலை உச்சி சென்று புனித நீர் எடுக்கத் தயாரானார். பாஷாணங்களை மருந்தாகச் செய்யும் போது அவை விரைவில் இறுகிவிடும். அவ்வப்பொழுது பனி நீரை ஊற்றி வெப்பத்தைத் தணிக்க வேண்டும். ஆனால் போகர் கொடிய விலங்குகள் வசிக்கும் மலை உச்சிக்குச் சென்று பனி நீரை எடுத்து வரத் தாமதமானால் பாஷாணம் இறுகிவிடும்.

இதனை அறிந்த சீடர் போகரைத் தடுத்து நிறுத்தி “குருவே! தாங்கள் பாஷாணங்களை உருக்குங்கள். நான் வேகமாக மலை உச்சி சென்று பனி நீரைக் கொண்டு வருகிறேன்” எனக் கிளம்பினார்.

சண்முக நதியின் தொடக்கத்தைத் தேடி அமராவதி ஆற்றை நோக்கி மலையேற ஆரம்பித்தார் சீடர். எவ்வளவோ வேகமாகச் சென்றும் அவரால் மலை உச்சியை அடைய முடியவில்லை. வழி எங்கும் கொடிய மிருகங்கள் உலாவிக் கொண்டிருந்தன. இருந்தாலும் தயக்கமின்றி வேகமாகச் சென்று கொண்டிருந்த சீடரை வழிமறித்து நின்றது ஒரு பெரிய புலி.

புலியைப் பார்த்துப் பயப்படாத சீடர் அந்தப் புலியின் மீது அமர்ந்து “வேகமாகப் போ” என ஆணையிட்டார். என்ன ஆச்சரியம். கொடிய குணம் உடைய புலி சாது போல் மாறியது. சீடரின் கட்டளையை ஏற்று மலை உச்சியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புலியைக் கெட்டியாகப் பிடித்திருந்த சீடர் மலை உச்சியை அடைந்து. அங்கிருந்த புனித நீரைத் தனது கைகளில் சேகரித்து எடுத்துக் கொண்டார்.

பின்னர் புலியின் மேல் அமர்ந்தவாறே விரைவாக குரு போகர் நவபாஷாண சிலை செய்யும் இடத்துக்கு வந்தார். சரியான நேரத்தில் தனது சீடர் புனித நீருடன் வந்து சேர்ந்ததால் மகிழ்ந்த போகர் நவபாஷாணக் கலவை இறுகாமல் பனிநீர் ஊற்றிப் பக்குவப்படுத்தினார். சீடரைப் பாராட்டிய போகர் “எப்படி இவ்வளவு விரைவாக மலை உச்சிக்குச் சென்று பனி நீர் எடுத்துத் திரும்பி வந்தாய்” என ஆச்சரியத்துடன் கேட்க, போகரை வணங்கிய சீடர் “குருவே! தங்கள் அருளால் இந்தப் புலி தான் எனக்கு உதவி செய்தது” எனக் கூறிப் புலியை அருகில் அழைத்தார். புலியும் போகரை வணங்கி சாதுவாக சீடரின் அருகில் நின்றது.

சீடரின் சாமர்த்தியமான புத்தியை மெச்சிய போகர் “உன்னுடைய திறமையால் புலியை அடக்கிப் பனி நீரைக் கொண்டு வந்ததால் இன்று முதல் புலிப்பாணி சித்தர் என அழைக்கப்படுவாய். அது மட்டுமல்ல. இந்த மலைக்கும் வனத்துக்கும் நீயே என்றும் காவலாக இருப்பாய்” என ஆசி வழங்கினார்.

போகரை வணங்கிய புலிப்பாணி “குருவே! தங்கள் நீண்ட நாள் விருப்பமான நவபாஷாண சிலையைச் செய்வதற்காக தங்களுடன் சீன தேசத்தில் இருந்து வந்தேன். மீண்டும் அங்கு செல்வதற்கு ஆர்வமாக இருக்கிறது. சில நாட்கள் செல்ல அனுமதி வேண்டும்” எனக் கேட்க, தன் சீடனை விட்டுப் பிரிய மனம் இல்லாத போகர், “கவலை வேண்டாம் புலிப்பாணி. நாம் இருவரும் சீனதேசம் செல்வோம்” எனக் கூறி ககன குளிகையை உட்கொண்டு இருவரும் ஆகாய மார்க்கமாகச் சீனாவை சென்றடைந்தனர்.

போகர், புலிப்பாணியை மீண்டும் பார்த்த சீடர்கள் மனம் மகிழ்ந்து போகரிடம் “நீங்களும் புலிப்பாணியும் இங்கேயே இருங்கள். திரும்பிச் செல்ல வேண்டாம்” என அன்புக் கட்டளையிட்டனர். போகரோ அவர்களிடம் தாம் பழநியில் பிரதிஷ்டை செய்த நவபாஷாண சிலை அனைவருக்கும் பயன்பட வேண்டும். அதிலுள்ள மருந்துகள் விஷத்தை விட மேன்மையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். முருகப்பெருமானை வணங்கி அபிஷேகம் செய்து அதில் இருந்து கிடைக்கும் அபிஷேக திரவத்தை எல்லோரும் உட்கொள்ள வேண்டும். அவை சரியாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும். ஆகவே நான் பழநி மலைக்குச் செல்கிறேன் புலிப்பாணி சில நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்றார்.

ஆனால் குருவைத் தனியாக அனுப்ப மனம் இல்லாத புலிப்பாணி, “குருவே! முருகனின் நவபாஷாண சிலைக்கு நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். நான் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறேன். இருவரும் மீண்டும் பழநிக்கே செல்வோம்” எனக் கூறி சீன தேசத்து நண்பர்களிடம் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினார்.

காலங்கி நாதரின் ஆணைப்படி நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்த இடத்தில் ஒரு குகையில் அமர்ந்தவாறே முருகரை வணங்கி முக்தி அடைய போகர் விரும்பினார். தன்னுடைய தவ வலிமை அனைத்தையும் புலிப்பாணிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஜோதிடம், ஜாலம், வைத்தியம், ஞானம் அனைத்திலும் புலிப்பாணி சிறந்து விளங்கினார்.

பின்னர் ஒரு நாள் புலிப்பாணியிடம், “இங்குள்ள குகையில் தான் முக்தியடையப் போவதாகவும் நவபாஷாண சிலை மகிமையை அனைவருக்கும் சொல்லி நோயின்றி வாழ உதவும்” எனச் சொல்லி கடுந்தவம் மேற்கொள்ள ஆரம்பித்தார். போகருக்கும் முருகருக்கும் அன்று முதல் அருகிலேயே இருந்து காவல் காக்க ஆரம்பித்தார்.

போகரிடம் தான் கற்ற சித்த மருத்துவத்தை வைத்திய சாஸ்திரம் 500, ஜாலத்திரட்டு 100, வைத்தியம் 500, ஜோதிடம் 500, ஜாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூஜாவிதி 50, சண்முக பூஜை 30, சிமிழ் வித்தை 25. சூத்திர ஞானம் 12, சூத்திரம் 9, வைத்திய சாரம் போன்ற நுால்களாக எழுதினார்.

சிவத்தின் உருவமாக பாதரசத்தையும், சக்தியின் உருவமாக கந்தகத்தையும் வணங்கி மருந்தாக்கிப் புலிப்பாணி தயார் செய்த ரசகந்தி மெழுகு சித்த மருத்துவத்தின் பொக்கிஷமாக அரிய மருந்தாக உள்ளது. நாரதர் மகிழ்ச்சி கொண்டார். சிறப்பான ரசகந்தி மெழுகைப் போகர் இந்த உலகிற்கு வழங்கியதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களின் திருவிளையாடல் சித்தர்களின் மூலமாக இன்னும் தொடரட்டும் என இருவரையும் வணங்கினார் நாரதர்.

-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us