தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 26

தெய்வத் திருமணம் - 26

தெய்வத் திருமணம் - 26


ADDED : ஜூன் 03, 2026 11:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லையப்பர் - காந்திமதி திருமணம்

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் வேதங்கள் நான்கும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக வாழ வேண்டும் என வரம் கேட்டன. அதை ஏற்ற சிவபெருமான் பூமியில் லிங்கமாகத் தோன்றினார்.

நான்மறைகளின் வேண்டுதலால் தோன்றியவர் என்பதால், 'வேண்ட வளர்ந்த நாதர்' எனப் பெயர் பெற்றார். அந்த லிங்கத்தைச் சுற்றி நான்கு வேதங்களும் மூங்கிலாகத் தோன்றி, சிவலிங்கத்துக்கு நிழல் தந்தன. அதன் பிறகு மூங்கில்கள் வளர்ந்து, அந்தப் பகுதியே மூங்கில் வனமானது. இதனால் சிவனை, “வேணுவன நாதர்” என அழைத்தனர்.

இந்நிலையில் ஊர் எங்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஒருநாள் சிவனடியாரான வேதசன்மா தாமிரபரணி நதியில் நீராடி விட்டு, சிவனுக்கு உணவு படைப்பதற்காக சிறிதளவு நெல்லை உலர வைத்து சென்றார். அவர் வருவதற்குள் மழை பெய்யத் தொடங்கியது. நெல் நனைந்து, மழை நீரில் சென்று விடக்கூடாதே எனக் கவலையடைந்த அவர் ஓடிச்சென்று பார்த்தார். அங்கு சுற்றிலும் மழை பெய்து கொண்டிருக்க, நெல் காயும் இடத்தில் மட்டும் வேலி இட்டது போல வெயில் அடித்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்டதும் சுவாமிக்கு நெல்வேலிநாதர் என்றும், நெல்லப்பர் எனவும் பெயரிட்டு அழைத்தார் வேதசன்மா. பின்னாளில் நெல்லப்பர் என்பது நெல்லையப்பர் என்றானது.

கைலாயத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த பார்வதி, விளையாட்டாக அவரது கண்களை கைகளால் மூடினாள். இதனால் பூவுலகம், தேவஉலகம் எல்லாம் இருளில் மூழ்கியது. தேவ உலகத்தில் இருந்த தேவர்கள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அச்சமடைந்தனர். பார்வதியின் விளையாட்டால் சிவபெருமான் கோபமடைந்தார். அவருடைய மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் திறந்தது. அதில் இருந்து நெருப்பு வெளியேறியது. அந்த வெளிச்சத்தில் பிரபஞ்சத்திற்குக் குறிப்பிடத்தக்க அளவு ஒளி கிடைத்தது.

மூன்றாவது கண்ணிலிருந்து வெளியேறிய நெருப்பிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், பார்வதியின் கைகளைச் சுட்டது. அந்தச் சூட்டைத் தாங்க முடியாமல் பார்வதி, கண்களை மூடியிருந்த தன் கைகளை எடுத்தார். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. உலகம் இருண்டு போனதை நினைத்து வருந்திய பார்வதி மன்னிக்கும்படி வேண்டினார்.

கோபத்திலிருந்த சிவபெருமான், 'நீ செய்த தவறால் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து போய்விட்டன. பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தாயாக இருக்கும் நீ செய்த இத்தவறுக்குச் சிறிது காலம் என்னை விட்டுப் பிரிந்திருக்கப் போகிறாய்' என்றார். அதனைக் கேட்ட பார்வதி வருத்தமடைந்தார். தனது தவறை மன்னித்து அருளும்படி வேண்டினார்.

அவரது வேண்டுதலில் கோபம் குறைந்த சிவபெருமான், “ கவலை வேண்டாம். பூவுலகம் சென்று மக்கள் பசியின்றி வாழத் தேவையான உணவைக் கொடு. அவர்களின் நல்வாழ்க்கைக்கு உதவும் முப்பத்திரண்டு அறங்களையும் போதனை செய். தவத்தில் ஈடுபடு. உன்னைத் தேடி நானும் வருவேன்” எனச் சொல்லிப் பார்வதியிடம் இரண்டு நாழி அளவு நெல்லைக் கொடுத்து அனுப்பினார்.

பூவுலகம் வந்த பார்வதி தவம் செய்ய இடம் தேடிய போது, வேதங்கள் மூங்கிலாக வளர்ந்திருந்த வேணு வனம் சரியான இடமாகத் தெரிந்தது. காமாட்சியாக அங்கு வந்த அவர், அருகில் இருந்த கம்பை நதிக்கரையில் இரு நாழி நெல்லை விதைத்துப் பயிர் செய்து மக்களின் பசியைப் போக்கினார். மக்களுக்கு முப்பத்திரண்டு அறங்களையும் போதித்து, சிவனை வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்களைப் பற்றிக் கூறினார். அதன் பிறகு சிவபெருமானை நினைத்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யத் தொடங்கினார். அவரது கடும் தவத்தால், அவரது உடல் முழுதும் ஒளிமயமானது. இதனால் 'ஒளியுடையவள்' என பொருள் தரும் காந்திமதி என பெயர் பெற்றார்.

காந்திமதியின் தவம் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு காந்திமதியும் வேண்டினார். தன்னை விட்டுப் பிரிந்த வந்ததால் அப்படியே அழைத்துச் செல்ல முடியாது. மீண்டும் திருமணம் செய்து அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். அதனைக் கேட்டுப் பார்வதி மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது.

திருமண நாளன்று, வேணு வன நாதர் மணமகனாக வருகை தர, அவரைக் கோவிந்தராஜப் பெருமாள் வரவேற்றுத் திருமண மேடைக்கு அழைத்து வந்தார். அதைத் தொடர்ந்து வேணுவன நாதர், காந்திமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

திருமணத்திற்குப் பின்பு, வேண்ட வளர்ந்த நாதர் லிங்கத்தின் அருகே காந்திமதி கோயில் கொண்டார். சிவபெருமானும், பார்வதி வேறில்லை என உணர்த்தும் விதமாக வேண்ட வளர்ந்த நாதரான சிவலிங்கத்தில் சேர்ந்து காட்சியளித்தார்.

அதன் பிறகு காந்திமதி ஒரு குடும்பப் பெண்ணுக்கு என்ன சடங்குகள் நடத்தப்படுமோ, அவற்றை தனக்கும் செய்யப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். சிவபெருமானும் விருப்பம் நிறைவேறும் என்றார். அதைக் கேட்டு காந்திமதி மகிழ்ந்தார்.

இமயமலையில் சிவபெருமான், பார்வதி திருமணம் நடந்த போது, அதைக் காணாத அகத்தியருக்குத் திருமணக் காட்சி தர வேண்டும் என்பதற்காக இத்திருமணம் வேணு வனத்தில் நடந்ததாகவும் சொல்வர்.

குடும்பப் பெண்

நெல்லையப்பர் கோயிலில் அருள்புரியும் காந்திமதி அம்மனுக்கு வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் பெயருண்டு. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது காந்தி பீடமாகும். இங்குள்ள அம்மனுக்குப் பூவுலகில் குடும்பப் பெண்ணுக்கு நடத்தப்படும் பல்வேறு சடங்குகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

வெண்ணிற ஆடை

உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாமப் பூஜையில் வெண்ணிற ஆடை அணிவிப்பர். மறுநாள் காலை, விளாபூஜை வரை வெண்ணிற ஆடையிலேயே காட்சி தருகிறார்.

அன்னம் பரிமாறும் அம்பிகை

நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் கூட்டு, பொரியல், குழம்பு என நைவேத்தியம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. தன் கணவர், விருந்தினரை உபசரித்துப் போற்றும் வழக்கத்தை பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் விதமாக இந்த நடைமுறை உள்ளது.

காந்திமதி நைவேத்தியத் தட்டுடன் நெல்லையப்பரை நோக்கிப் புறப்படுகிறாள். இதனடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர் மேளதாளத்துடன் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என உணவுகளை எடுத்துச் செல்கின்றனர். சுவாமி சன்னதி அர்ச்சகர்கள் அவற்றை நைவேத்யம் செய்கின்றனர்.

பின்னர் பரிவார தெய்வங்கள், கடைசியாக காந்திமதிக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதன் மூலம், கணவருக்கு பின் தான் சாப்பிடுவதை காந்திமதி தினமும் செய்து காட்டுகிறாள்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us