ADDED : ஜூன் 03, 2026 11:53 AM

கபந்தனைப் போலே
“என்ன கிருஷ்ணவேணிம்மா... சுடிதார்ல வந்து இருக்கீங்க. வயசு குறைஞ்சா மாதிரி இருக்கு. அடையாளமே தெரியல போங்க” என உற்சாக குரல் கொடுத்தார் அமிர்தம்.
“நடக்கும் போது அப்பப்ப புடவை சிக்குதுன்னு சொன்னேன். என் மருமக அளவெடுத்துட்டு போயி சுடிதார் வாங்கி வந்துட்டா. சரி இன்னிக்கு நடந்து பாக்கலாம்னு உடுத்திட்டு வந்தேன்”
“அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலேவை சொல்றதுக்கு அடையாளம் தெரியாமல் வந்து இருக்கீங்களே...'' என்றார் அமிர்தம் சிரித்தபடி.
“உங்க புத்திக்கூர்மைக்கு அளவே இல்லாம போயிடுச்சு. சரி, ரகசியத்துக்கு வருவோம். பெண் பிள்ளை ராமானுஜரிடம் அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலேன்னு சொல்றா இல்லையா... இது ராமாயணத்தில் வரக் கூடிய கதை. யார் இந்த கபந்தன்? இவன் ஒரு அரக்கன். கந்தர்வனாக பிறந்து ஒரு சாபத்தால் கோர அரக்கனாக உருமாறினான்” என்ற கிருஷ்ணவேணியை இடைமறித்த அமிர்தம், “ அரக்கன் என்றாலே கோரம் தானே. இவன் அப்படி என்ன கோரமான அரக்கன்?” என நியாயமான சந்தேகத்தைக் கேட்டார்.
“அதுவா? முழுசா விளக்கினால் புரியும் உங்களுக்கு. சீதை சிறை பிடிக்கப்பட்ட பிறகு ராமர் நினைத்திருந்தால் ஒரே நாளில் ராவணனை வதம் செய்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் காடு, மலை, செடி, கொடிகளிடம் கூட சீதையை கண்டீர்களா என வழி நெடுகிலும் குழம்பி இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றால் அவரால் பலருடைய கர்ம வினை தீர வேண்டி இருந்ததே காரணம். சீதையைத் தேடி ராம லட்சுமணர் வந்த போது முதலில் ஜடாயுவை பார்த்தனர். அந்த நேரம் ஜடாயு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
ராவணன் அதனுடன் சண்டையிட்டு ஜடாயுவை வீழ்த்தி இருந்தான். ஜடாயு ராமனைக் கண்டதும் சீதையை ராவணன் துாக்கிச் சென்ற தகவலை சொல்லி விட்டு உயிர் துறந்தது. ஜடாயு மீது பாசம் கொண்ட ராமன் அதற்கான ஈமச்சடங்குகளை செய்து முடித்தான். ஜடாயு சொன்ன வழியில் சீதையைத் தேடி இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது நீளமான இரு கைகள் அவர்களை பிடித்துக் கொண்டு நெருக்க ஆரம்பித்தது.
லட்சுமணனுக்கு பெரிய ஆச்சரியம்! மந்திர மலையை கொண்டு பாற்கடலை கடைந்த காலத்தில் கயிறாக பயன்பட்ட வாசுகி பாம்பினுடைய நெருக்குதலைப் போலத் தோன்றியது. இந்த நெருக்குதலால் இருவரும் கபந்தனின் எதிரில் சென்றனர். அப்போதுதான் கபந்தனின் கோரமான உருவத்தை பார்த்தனர். கபந்தனுடைய கண்கள் சூரியனைப் போல இருந்தது. அவனுடைய வாய் என்பது வயிற்றுக்குள் புதைக்கப்பட்டு இருந்தது. அவனுடைய வாய் சுறா மீன்கள் விளையாடும் கடல் போல காட்சியளித்தது.
ஐம்பெரும் பூதங்கள் திரண்டு உயிர் பெற்று ஓருடல் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தான் கபந்தன். மெதுவாக இவர்களை நோக்கி அவன் அசைந்து வர அவனுடைய வாயை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர். இருவரும் வாயை போல ஒரு பெரிய குகைக்குள் அகப்பட இருப்பதை பார்த்து அந்த இரு கைகளையும் வெட்டி வீழ்த்தினர்.
கபந்தனுடைய கைகள் வெட்டப்பட்ட உடன் தன் கதையை ராம லட்சுமணரிடம் எடுத்துச் சொன்னான் அவன். 'என் பெயர் கபந்தன். ஒரு காலத்தில் பேரழகனாக இருந்தேன். ஆனால் விளையாட்டாக செய்த ஒரு செயல் என்னை கோர வடிவம் எடுக்க காரணமாக அமைந்தது. துாலசிரசு என்ற முனிவரின் முன் சென்று அவரை நான் பயமுறுத்தினேன். அவர் தன் உணவுக்காக எடுத்து வைத்திருந்த காய், கிழங்குகளை எடுத்து சாப்பிட்டேன்.
உடனே அவருக்கு கோபம் வந்தது. 'இனி இப்படியே கோர உருவத்துடன் நீ இருப்பாய்' என என்னை சபித்தார். நான் உடனே காலில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவரும் இரக்கப்பட்டு சில காலம் இப்படி திரிந்து கொண்டு இருந்த பிறகு ராம லட்சுமணர் உன் கையை வெட்டி உன்னை எரிப்பார்கள். அப்போது பழைய உருவம் வரும் என்றார் முனிவர்.
இனி நான் பழைய வடிவம் எடுக்க நீங்கள் துணை புரிய வேண்டும். என்னை எரித்து பழைய உருவத்தை அடைய உதவ வேண்டும் எனக் கெஞ்சினான். உடனே ராம லட்சுமணர் கட்டைகளை அடுக்கி வைத்து அந்த அரக்கனை எரித்தனர். கபந்தனின் பழைய உருவம் வந்தது.
அவர்கள் சீதையைத் தேடி வந்ததை அறிந்த கபந்தன் அவர்களிடம், 'சுக்ரீவன் என்ற வானர அரசன் தன் அண்ணன் வாலியால் துரத்தி அடிக்கப்பட்டு ரிஷ்ய முகப்பருவத்தில் வாழ்வதையும், அவனுடைய உதவி மூலம் சீதையை அடைய என் வாழ்த்துக்கள் என்றும் சொன்னான். அதற்கு முன்பாக சபரி பாட்டி இருக்கும் இடத்திற்குச் செல்ல வழிகாட்டினான். அவளிடம் சென்றால் சுக்ரீவனிடம் செல்லக்கூடிய வழியைச் சொல்வாள் என சொல்லி விட்டு நகர்ந்தான் கபந்தன்” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கிருஷ்ணவேணி.
“ஓ! ஜடாயு மூலம் கபந்தன், கபந்தன் மூலம் சபரி, சபரி மூலம் சுக்ரீவனா? இப்போ நல்லா புரியுது. ராமனுக்கு சுக்ரீவனிடம் போக வழி சொன்ன கபந்தனின் கதை, எனக்கு சாக்கியருக்கு முக்தி கிடைக்க வழிகாட்டிய சிவனின் கதை தான் நினைவுக்கு வருகிறது.”
“ஆமா! சின்ன வயசுல கேட்ட ஞாபகம் என கிருஷ்ணவேணி சொன்னதும் அமிர்தம் கம்பீரமாக சொல்லத் தொடங்கினார். திருச்சங்கமங்கை என்ற ஊரில் பிறந்தவர் தான் சாக்கியர். மனிதனுக்கு எப்படி முக்தி கிடைக்கும் என அறிவதற்காக பவுத்த மதத்தை பின்பற்றினார். ஆனால் முக்தி கிடைக்கும் வழி தெரியவில்லை. மீண்டும் சைவ மதத்தை பின்பற்றினார். ஆனால் பவுத்த துறவிக் கோலத்திலேயே வாழ்ந்தார். சிவனால் மட்டுமே முக்தியைத் தர முடியும் என்பதை இறுதியில் உணர்கிறார்.
ஒரு நாள் புதரில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டார். அவருக்கு என்ன தோன்றியதோ சிவலிங்கத்துடன் பேசத் தொடங்கி விட்டார். சிவனே உயிர்களுக்கு முக்தியை அளிப்பவர் தாங்கள் தான், எனக்கும் வழி காட்டுங்கள் இல்லாவிட்டால் நாளை தங்களின் மீது கல் எறிவேன் என்றார்.
சொன்னது போலவே மறுநாள் காலை குளித்து விட்டு அந்த சிவலிங்கத்தை வழிபட்டார். சிவன் அவருக்கு அருளவில்லை. ஆனாலும் தன்னுடைய வாக்கின்படி அங்கிருந்த கல்லை எடுத்து லிங்கத்தின் மீது எறிந்தார் சாக்கியர். மறுநாளும் அதே போல கல்லை எறிந்தார். இதைப் பார்த்தவர் அனைவரும் கோபத்துடன் சிவன் மீது கல் எறியும் சாக்கியன் அழிவான் என சபித்தனர். ஆனால் சாக்கியர் கல் எறிவதை நிறுத்தவில்லை.
வாக்களித்தபடி தினமும் சிவன் மீது கல்லை எறிந்து பூஜை செய்வதை சாக்கியர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த பூஜையை தனக்கு உகந்ததாக சிவனும் விரும்பி ஏற்றார். ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாக்கியர், சிவன் மீது கல் எறிந்து பூஜிக்காமல் விட்டுப்போனதை உணர்ந்தார். வழிபாட்டை ஒருநாள் தவற விட்டாலும், அந்த வாய்ப்பு எந்த பிறவியில் கிடைக்குமோ தெரியாது. அதனால் சாப்பிடாவிட்டால் கூட பரவாயில்லை வழிபாட்டை விடக்கூடாது என எண்ணி லிங்க ரூபத்தின் மீது கற்கள் எறிந்து பூஜிக்க சென்று வழிபட்டார்.
சிவனும் அதற்கு மேலும் அவரை சோதிக்க மனம் இல்லாமல் பார்வதி சமேதராக அவருக்குக் காட்சி தந்து முக்தி அளித்தார். 63 நாயன்மார்களில் ஒருவராகும் பேற்றை அவர் பெற்றார் என முடித்தார் அமிர்தம்.
“தன்னலம் இல்லாத ஒரு வழிகாட்டியால் தான் பலரும் உன்னத நிலையை அடைகிறார்கள். எனக்குக் கூட இப்படி ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். நமக்குத் தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லி வழி காட்டுவது சிறப்பான செயல். ஆனால் இன்றைக்கு அதற்குக் கூட பலரும் தயாராக இல்லை. என்ன செய்வது?'
ஆன்மிகம் நமக்குள் வளர வளர நல்ல எண்ணம் அதிகரிக்கும். அதை நாமே உணர்வோம்” எனச் சொல்லி இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
