தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 8

பச்சைப்புடவைக்காரி - 8

பச்சைப்புடவைக்காரி - 8


ADDED : ஜூன் 03, 2026 11:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாயின் வழி

“என் பையனுக்குத் திடீர்னு வலிப்பு வந்திருச்சி. டாக்டர்கிட்ட ஓடினோம். அவரு ஒரு பெரிய டாக்டர்கிட்ட போகச் சொன்னாரு. மூளையில ஆப்பரேஷன் செய்யணுமாம். பத்து லட்ச ரூபாய் ஆகுமாம். ஒத்தப் பையன்யா. அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா நானும் என் பொண்டாட்டியும் நாண்டுக்கிட்டுச் செத்திருவோம்” என் முன்னால் நின்றவன் செந்தில். எங்கள் வளாகத்தின் செக்யூரிட்டி. திடீரென பத்து லட்ச ரூபாய்க்கு எங்கே போவது?

“கிராமத்துல ஒரு பரம்பரை வீடு இருக்கு. அத வித்தா ஏழு லட்சம் கெடைக்கும். ஆனா அதுக்கு ரெண்டு மாசமாவது ஆகும். டாக்டர்கிட்ட பேசிப் பணம் கட்ட அவகாசம் வாங்கிக் கொடுங்க. மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கறவன்னு சொல்லி பீசக் குறைக்கச் சொலுங்கய்யா.” செந்தில் அழாக்குறையாகச் சொன்னான்.

அன்றே நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான நாகலிங்கத்தை நேரில் சந்தித்தேன்.

“கையில காசு, வாயில தோசை. அதுதான் என் கொள்கை. ஒரு நாள்கூட டயம் தர முடியாது. பணத்த முதல்ல ரெடி பண்ணச் சொல்லுங்க. ஆப்பரேஷன அப்பறமா வச்சிக்கலாம்”

“வேற ஏதாவது வழி...'' பிச்சையெடுக்காத குறையாகக் கெஞ்சினேன்.

“ஒரு வழி இருக்கு. இந்த மாசம் இருபதாம் தேதி ஆஸ்பத்திரி லோனுக்காக இ.எம்.ஐ 22 லட்சம் கட்டணும். எங்க பேங்க்ல பேசி அதுக்கு ஒரு மாசம் டயம் வாங்கிக் கொடுங்க. செந்தில் கொடுக்க வேண்டிய பத்து லட்சத்துக்கு ரெண்டு மாசம் டயம் தரேன்” போகாத ஊருக்கு வழி.

“செந்தில் பாவம் ஏழை. எங்க அப்பார்ட்மெண்ட்லதான் செக்யூரிட்டியா இருக்கான். மாசம் பத்தாயிரம் ரூபாய்தான் சம்பளம். ஆப்பரேஷன் செலவ குறைக்க ஏதாவது வழியிருக்கா?”

“உங்களுக்கு செந்தில்மேல கருணை இருந்தா பாதித் தொகைய நீங்க கட்டுங்க. நீங்க பகுமானமா கார்ல வந்து பேசிட்டுப் நல்ல பேர வாங்கிட்டுப் போயிருவீங்களாம். நாங்க எங்க காச விட்டுக் கொடுக்கணுமாக்கும்?”

அவமானத்தால் என் கண்கள் நிறைந்து விட்டன. மவுனமாக விடைபெற்றேன். அடுத்து அறக்கட்டளை நடத்தி வரும் என் நண்பரிடம் போனேன். விஷயத்தைச் சொன்னேன்.

“எல்லாம் சுத்த ஹம்பக். டாக்டரும் அந்த செக்யூரிட்டியும் உங்கள ஏமாத்தப் பாக்கறாங்க.” வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அசடு வழியச் சிரிப்பது கஷ்டமாகத் தான் இருந்தது.

“அந்தப் பையனுக்கு வலிப்பு வந்து துடிச்சதப் பார்த்தேன்” “உடனே பத்து லட்ச ரூபாய்க்கு ஆப்பரேஷன் பண்ணனுமாக்கும்? கையில காசு இல்லேன்னா வீட்டுல ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க. சரியாயிரும்.”

“பையன் உயிருக்கே ஆபத்துன்னு...''

“சாகட்டுமே. ஜனத்தொகை குறையும்ல.” இதயமே இல்லாமல் பேசினார் நண்பர்.

கண்ணீரை மறைத்துக் கொண்டு கிளம்பினேன்.

அன்று மதியம் சாப்பிடவில்லை. மாலை நேரம் துாறலைப் பொருட்படுத்தாமல் நடந்தே கோயிலுக்குச் சென்றேன். நடுவே மழை வரவே ஒரு கடலைக் கடையில் ஒதுங்கினேன்.

“கடலை இப்போதான் வறுத்தது. இருபது ரூபாய்க்கு தரட்டுமா?”

“கடலை தான் குறைச்சல்”

“பட்டினி கிடந்தால் சிறுவனின் நோய் சரியாகி விடுமோ?”

“என்ன தாயே! இப்படி எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு என்னைத் தவிக்க விடுகிறீர்களே!”

“முதலில் கடலையைச் சாப்பிடு” பிரசாதமாக வாங்கி கொண்டேன்.

“தப்பான வழி என்பதால் அடைத்துவிட்டேன். சரியான வழியைக் காட்டுகிறேன்”

மறுநாள் காலை என் நண்பரான நரம்பியல் மருத்துவர் சுந்தரம் அழைத்தார். ஏதோ சந்தேகம் கேட்டார் சொன்னேன்.

“உங்க குரல்ல சுரத்தேயில்லையே! ஏதாவது பிரச்னையாண்ணா?”

செந்திலின் மகன் கதையைச் சொன்னேன்.

“அந்தப் பையன் எங்க இருக்கான்?”

“பக்கத்துலதான் இருக்கான்.”

“என் கிளினிக்குக்கு வரச் சொல்லுங்க”

செந்திலைத் தேடிக் கண்டுபிடித்து அவன் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து சுந்தரம் கிளினிக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

ஒரு மணிநேரம் கழிந்தது. உதவியாளர் ஓடி வந்து,“காலேஜ் புரபசர் சாம்பவியாம். வரச் சொல்லியிருந்தீங்களாம். வந்திருக்காங்க”

“யாரா இருந்தாலும்...''

நான் பேசிக் கொண்டிருக்கும் போதே கம்பீரமான பெண் அறைக்குள் நுழைந்தாள்.

“நான் காட்டிய வழியில் உனக்கு நம்பிக்கை இல்லையா?”

'தாயே' என அவள் கால்களில் விழுந்தேன்.

அலைபேசி ஒலித்தது.

“எடுத்துப் பேசு. என் வழி எப்படி இருக்கிறது என்று பார்” அழைத்தது டாக்டர் சுந்தரம்.

“பையன டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டேண்ணா. மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கேன். மூணு மாசத்துல சரியாயிரும். மாத்திரைக்கு மாசம் 300 ரூபாய் ஆகும். செந்திலோட நிலைமையப் புரிஞ்சிக்கிட்டு இலவசமா கொடுத்துட்டேன். எனக்கு பீசும் வேண்டாம்னு சொல்லிட்டேன்” விம்மல் வெடித்து விடாமல் இருக்க வாயைப் பொத்திக் கொண்டேன்.

“அண்ணா அண்ணா லயன்ல இருக்கீங்களா...'' சுதாரித்துக்கொண்டு கரகரத்த குரலில் பேசினேன்.

“ஆப்பரேஷன் செய்ய வேண்டாமா? உயிருக்கு ஆபத்து இல்லையா?”

“ஆப்பரேஷனா? எந்த மடையன் சொன்னான்? பையன் ஜம்முன்னு இருக்கான்” பேசி முடித்தவுடன் கதறியபடி தாயின் கால்களில் விழுந்தேன். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேசினேன்.

“ஒன்றுமில்லாத விஷயத்திற்கு பத்து லட்ச ரூபாயை ஒரு ஏழையிடம் பிடுங்கப் பார்த்த அந்த நாகலிங்கத்தை...''

“விஷயம்தான் நல்லபடியாக முடிந்துவிட்டதே! அப்புறம் ஏன் அவன் மீது இத்தனை வன்மம்?”

“உயிர் காக்கும் டாக்டர் இப்படி செய்யலாமா”

“அவனும் ஒரு பிரச்னையில் இருக்கிறான். சக்திக்கு மீறிக் கடன் வாங்கிவிட்டான். அவனுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தேன். இந்தப் பையனுக்கு அவன் ஒழுங்காகச் சிகிச்சை செய்திருந்தால் அவன் பிரச்னை எல்லாம் தீர்ந்திருக்கும். ஏழையிடம் காசைப் பிடுங்கிக் கடனைக் கட்டலாம் என குறுக்கு வழியில் யோசித்து மாட்டிக்கொண்டான். அவனை பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்”

“செந்தில் மகனுக்கு வந்தது சாதாரண வலிப்பு. உங்கள் அருள் பெற்ற டாக்டர் சுந்தரம் அதை குணப்படுத்தி விட்டார். நாகலிங்கத்திற்கு வந்திருப்பது தீமை என்ற கொடிய நோய். அது ஆட்கொல்லி நோய். மகா மருத்துவச்சியான நீங்கள்தான் நாகலிங்கத்தைக் குணப்படுத்த வேண்டும். அவர் மனதில் அன்பு மலரட்டும்”

சாம்பவி மறைந்த பின்னும் அவளுடைய சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

- தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us