ADDED : ஜூன் 11, 2026 11:19 AM

குதம்பை சித்தர்
“ஆணாகப் பிறந்தாலும், பெற்றோரின் ஆசைக்கிணங்க பெண்ணின் நளினத்துடன் இவ்வுலகிற்கு ஞானக் கருத்துகளைக் கூறிச் சென்ற குதம்பைச் சித்தரைப் பற்றி சொல்கிறேன். கேளுங்கள்!” என நாரதரிடம் பரமேஸ்வரர் சொல்லத் தொடங்கினார்.
தஞ்சை மாவட்டத்தில் ஓர் ஊரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தம்பதிக்கு நீண்ட நாளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அந்த பெண்மணிக்கோ தனக்குப் பெண் குழந்தை தான் வேண்டும் என்று விருப்பம். அதற்காகப் பெண் குழந்தை வேண்டி இரவு பகலாக சிவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அதுமட்டுமின்றி பிறக்கப் போகும் குழந்தையின் காதில் பெரிய தோடு, காலில் சலங்கை கட்டிய கொலுசு, கைகளில் கலகலக்கும் வளையல், தலையில் பின்னல் முடி என உடல் முழுவதும் ஆபரணங்களை அணிவித்துத் தினந்தோறும் கொஞ்சி மகிழ வேண்டும் என ஆசை கொண்டிருந்தார்.
அவர் வேண்டியபடியே சில நாடகளில் கருவுற்றார். ஆனால் பெற்றெடுத்ததோ ஆண் குழந்தை. அந்தக் குழந்தை பார்ப்பவர்களை வசீகரிக்கும் அழகுடன், ஒளி வீசும் கண்களுடன், பெண்மையின் சாயலுடன், நடனமாடும் நளினத்துடன் பிறந்திருந்தது.
தாய் ஏமாற்றம் அடைந்தாலும், தனக்குக் குழந்தைப் பேறு கொடுத்த சிவனை வணங்கி ஆண் குழந்தையைப் பெண் குழந்தையாகப் பாவித்து வளர்க்கத் தொடங்கினார்.
தான் நினைத்தது போலவே காதில் குதம்பை என்ற தொங்கட்டான், வளையல், கொலுசு, கொண்டை, பூச்சரம் எனக் குழந்தையை அலங்கரித்து தாலாட்டி, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தார். அந்த தொங்கட்டான் பலரையும் ஈர்க்க ஆரம்பித்ததால் குழந்தையை 'குதம்பாய்' என அழைக்க ஆரம்பித்தனர். நாட்கள் செல்லச் செல்ல அந்தக்குழந்தையின் பெயர் குதம்பை என்றே மாறியது. பெண் குரலில் பாடி அறிவுரை கூறும் வழக்கம் குதம்பைக்கு இருந்து வந்தது.
ஒருநாள் நண்பர்களுடன் காட்டில் விளையாடிய போது, ஒரு மரத்தின் அருகே சென்ற குதம்பையின் கண்கள் பிரகாசமாக, அசையாமல் சிலை போல நின்று விட்டார். நண்பர்கள் அழைத்தும் குதம்பை அந்த இடத்தை விட்டு வர மறுத்து விட்டார். குதம்பையின் பெற்றோரிடம் சென்று, நாங்கள் எவ்வளவோ அழைத்தும் குதம்பை வர மறுக்கிறார். ஆகவே தாங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறினர்.
உடனே பெற்றோர் வந்த போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடையச் செய்தது.
அங்கே அந்த மரத்தின் நிழலில் தவக் கோலத்தில் குதம்பை நின்று கொண்டிருந்தார். தாய் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அங்கே மாதவர் என்ற சித்தர் தோன்றினார். அவர் தாயைப் பார்த்து “கவலைப்படாதீர்! இந்தக் குழந்தை தெய்வத் தன்மை உடையது” எனக் கூறித் தனது கமண்டல நீரை குதம்பை மீது தெளித்தார்.
குதம்பை கண் விழித்து சித்தரை வணங்கிய போது, ''முற்பிறவியில் ஞானியாக இருந்தாய். விதியின் பயனால் உன் பிறவி முடிந்து தவத்தை முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டது. ஞான யோகம் நிறைவேற குதம்பைச் சித்தராய் பிறந்திருக்கிறாய். இனி ஞான மார்க்கத்தால் மக்களுக்கு வழி காட்டுவாயாக!” எனக் குதம்பைச் சித்தரின் முந்தைய பிறவி பற்றி விளக்கினார்.
உடனே அவரது பெற்றோர் மாதவர் சித்தரை வணங்கி, “சித்தரே! திருமணம் முடிக்க வேண்டிய எனது மகனைத் தவ வாழ்க்கை வாழ சொல்கிறீர்களே” எனக் கேட்க, சித்தர் சொல்ல ஆரம்பித்தார்.
கடைசிப் பிறவியை வென்றவர் குதம்பை. அவர் செய்த தவத்தின் பலனாக மீண்டும் ஒரு பிறவியைப் பெற்றிருக்கிறார். இந்தப் பிறவியில் அவர் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அதில் முக்கியமானது இந்த உலகம் செழித்திருக்கவும் இங்கு வாழும் மக்கள் ஞானம் பெறுவதும் அவசியம்.அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்.
பெற்றோர் வியந்தவாறே கேட்டனர்.“இந்தச் சிறு குழந்தையால் என்ன செய்ய முடியும்?” எனக் கூற சித்தர் மீண்டும் விளக்கினார்.
நாட்டில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் மழை பொழிய வைக்கும் ஆற்றல் குதம்பைக்கு உண்டு. அதற்கான வருண மந்திரத்தை அகத்தியரிடம் கற்றுக் கொள்வார். அதை சொல்லவே நான் இங்கே வந்துள்ளேன்.
பூமி வறண்டு வானம் பொய்க்கும் போது இந்தக் காடுகளில் வசிக்கக்கூடிய யானைகள் தங்கள் துதிக்கைகளை உயர்த்திப் பிளிறியபடி வருண பகவானிடம் வேண்ட ஆரம்பிக்கும். அப்போது மழை பெய்யும். அகத்தியர் அருளால் யானைகளுக்கு மட்டுமே தெரிந்த வருண மந்திரத்தைக் குதம்பை கற்றுக் கொள்வார். இனி குதம்பைச் சித்தர் நினைக்கும் போதெல்லாம் மழை பெய்ய வைக்க முடியும் எனக் கூறினார்.
குதம்பை பெற்றோர் வியப்பின் உச்சத்திற்கே சென்றனர். “சித்தரே! வானம் பார்த்த பூமியாக இருக்கும் எங்கள் ஊரில் மழை பொழிந்தால் செழிப்பாக இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை. குதம்பையை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறி வணங்கி நின்றனர்.
குதம்பை சித்தரும், “என்னை தங்களின் சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள். அகத்தியரின் ஞானத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என வேண்டினார். மாதவ சித்தரும் வருண மந்திரங்களை, யோக, ஞான சூத்திரங்களையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
குதம்பைச் சித்தர் பாடும் போதெல்லாம் காட்டிலுள்ள யானைகள் மகிழ்ச்சியடைந்து துதிக்கைகளை உயர்த்தி வானத்தைப் பார்த்துப் பிளிற ஆரம்பிக்க, மழை பொழிய ஆரம்பித்தது. காடும் நாடும் செழிப்படைய ஆரம்பித்தன.
முத்திரை, ஆசை, மோகம், துறவு, ஞானம், கோலம் ஆகியவை எல்லாம் வெறும் போகப் பொருள்கள்தான். வெட்டவெளிதான் உண்மை. பேரண்டத்தில் உள்ள வெட்டவெளி போல் நம் உள்ளத்திலும் வெட்ட வெளி உள்ளது. அதனை அடைவதே ஞான மார்க்கம் எனக் குதம்பை பாட ஆரம்பித்தார்.
ஞான சூத்திரம் 18, ஞானம், குதம்பை பாடல் ஆகியவற்றை எழுதினார். ஆன்மிக சாதனங்களைப் பின்பற்றி நல்வாழ்க்கையைக் பெற வேண்டும் என்பதே குதம்பைச் சித்தரின் பாடலாக இருந்தது. குதம்பைச் சித்தர் பாடலில் எதிரில் இருப்பவரைப் பெண்ணாக உருவகப்படுத்தி ஆடிக் கொண்டே பாடும் தன்மை இருந்ததால் இவர் பாடல்களில் தாளம் மிகுந்திருக்கும்.
இந்த பிறவிக்கடன் சிறப்பாக முடிந்ததை அறிந்த குதம்பைச் சித்தர் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் முக்தியடைந்தார். பூமி வறண்டு, மழை பொய்க்கும் போதெல்லாம் குதம்பைச் சித்தர் பாடல்களைப் பாடினால் மழை பெய்யும் என்பதால் குதம்பைப் பாடல்களைப் பாடுகின்றனர்.
நாரதர் மெய்சிலிர்த்தபடி “வருண மந்திரத்தை பாடல்களாக எழுதியது குதம்பைச் சித்தர் என்பதை அறிந்து வியக்கிறேன். இப்பூலோகமும், மக்களும் செழிப்பாக நோயின்றி வாழ வேண்டும் என சித்தர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தங்கள் விளையாட்டைத் தொடருங்கள் மகேஸ்வரரே” என வணங்கினார்.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250
