ADDED : ஜூன் 11, 2026 11:18 AM

ராமர் - சீதை திருமணம்
அயோத்தி நாட்டை ஆண்ட தசரதன், கோசல நாட்டு இளவரசியான கவுசல்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. குழந்தைப் பேறுக்காகத் தசரதன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கவுசல்யா வற்புறுத்தினார். அதனால் தசரதன் சுமித்திரையையும், அதன் பிறகு கைகேயியையும் திருமணம் செய்து கொண்டார். மூன்று மனைவியருக்கும் குழந்தைப்பேறு இல்லாமலே இருந்தது.
தசரதனின் குலகுருவான வசிஷ்டர் ஆலோசனைபடி, ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு குழந்தைப் பேற்றுக்கான வேள்வியை (புத்திரகாமேஷ்டி யாகம்) தசரதன் நடத்தினார். அந்த வேள்வியில் தோன்றிய தெய்வீக உருவம், தசரதனின் கையில் புனித பாயாசக் கலசத்தைக் கொடுத்து, மூன்று மனைவியருக்கும் அதை சமமாகப் பகிர்ந்து கொடுக்கும்படிச் சொல்லி மறைந்தது.
மூன்று மனைவியருக்கும் மூன்று கிண்ணத்தில் பகிர்ந்து கொடுத்தான் தசரதன். அவ்வேளையில் அங்கு வந்த கழுகு ஒன்று, சுமித்திரையின் பாயாசத்தைக் கவர்ந்து சென்றது. சுமித்திரை வருத்தம் அடைந்தாள். அவளின் வருத்தத்தை அறிந்த கவுசல்யாவும், கைகேயியும் தங்களிடமிருந்த பாயாசத்தைச் சுமித்திரைக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
அதை தொடர்ந்து, கவுசல்யாவிற்கு ராமனும், கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருகன் ஆகியோரும் மகன்களாகப் பிறந்தனர். ராமனாகத் திருமாலும், லட்சுமணனாகத் திருமாலின் பாம்புப் படுக்கையான ஆதிசேஷனும், பரதனாகத் திருமாலின் கையிலிருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கும், சத்ருக்கனாகத் திருமாலின் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரமும் பிறந்திருந்தனர்.
நான்கு குழந்தைகளும் வளர்ந்து, வசிஷ்டரின் குருகுலத்திற்குச் சென்று தேவையான கல்வி கற்றுத் திரும்பினர். இந்நிலையில், விஸ்வாமித்திரர் காட்டில் தான் செய்யும் வேள்விக்குத் தீங்கு செய்த அசுரர்களை அழிப்பதற்கு ராமனையும், லட்சுமணனையும் தன்னுடன் அனுப்புமாறு தசரதனிடம் வேண்டினார். முதலில் தசரதன் தயங்கினாலும், விஸ்வாமித்திரரின் வேள்வி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரையும் அனுப்பி வைத்தார்.
விஸ்வாமித்திரரின் வேள்விக்கு இடையூறு செய்த அரக்கி தாடகை, அசுரன் சுபாகு ஆகியோரை ராமனும், லட்சுமணனும் கொன்றனர். அசுரன் மாரீசனைத் தன் அம்பால் தாக்கித் தொலைதுாரத்தில் சென்று விழச் செய்தார் ராமர். அதன் பின்னர் விஸ்வாமித்திரர் நடத்திய வேள்வி வெற்றியடைந்தது.
விஸ்வாமித்திரர் இருவருக்கும் அபாயம், நோய்களில் இருந்து பாதுகாக்கும் பலா, அதிபலா என்ற மந்திரங்களையும், பல்வேறு போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். இதற்கு இடையே, மிதிலை மன்னராக இருந்த ஜனகர் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்திக் கொண்டு இருந்தார். குழந்தைப் பேற்றுக்கான வேள்வி ஒன்றை நடத்தத் திட்டமிட்ட அவர் பூமியைச் சமன் செய்த போது, பூமிக்குள் புதைந்திருந்த பெட்டி ஒன்று வெளிப்பட்டது. அதற்குள் அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தப் பெண் குழந்தையை எடுத்து வந்த ஜனகர், அக்குழந்தைக்கு சீதை என பெயரிட்டு வளர்த்தார்.
அதன் பின்பு, ஜனகருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஊர்மிளை என பெயரிட்டு வளர்த்தார். ஜனகரின் தம்பியான குஜத்வஜனுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நான்கு குழந்தைகளும் வளர்ந்து திருமண வயதை அடைந்தன.
ஜனகரின் முன்னோரான தேவரதனுக்குத் தேவர்களால் வழங்கப்பட்ட சிவதனுசு வைக்கப்பட்ட பெட்டி ஒன்று அரண்மனையில் இருந்தது. அந்தச் சிவதனுசு இருந்த பெட்டியை வலிமையுடையவர்கள் கூட நகர்த்துவது கடினமாக இருக்கும்.
ஒருநாள் சீதை, தன் சகோதரிகள், தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அவளுடைய கையிலிருந்த பொம்மை அந்த பெட்டியின் பின்னால் போய்விட்டது.
சீதையின் தோழிகளும் சகோதரிகளும் பொம்மையை எடுக்க முயற்சித்த போது, அவர்களால் அந்தப் பெட்டியைச் சிறிதும் நகர்த்த முடியவில்லை. ஆனால் சீதை அந்தப் பெட்டியை எளிதாக நகர்த்தி விட்டு பொம்மையை எடுத்துக் கொண்டாள். அதனைக் கண்ட ஜனகர், அப்பெட்டியிலிருக்கும் சிவதனுசுவைக் கையில் எடுத்து நாண் ஏற்றுபவருக்குத்தான் சீதையைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென முடிவு செய்தார்.
அதன்படி, சீதையின் திருமணத்திற்கான சுயம்வர அழைப்பை அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பி வைத்தார். ஜனகரின் சுயம்வர அழைப்பு குறித்து அறிந்த விஸ்வாமித்திரர், தன் வேள்வியின் வெற்றிக்கு உதவிய ராமர், லட்சுமணரை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார்.
ஜனகரின் அழைப்பை ஏற்று, பல நாட்டு அரசர்களும், அரசகுமாரர்களும் மிதிலைக்கு வந்து சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். அங்கு சிவதனுசு இருந்த பெட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஜனகர் அதிலுள்ள சிவதனுசுவை எடுத்து நாணேற்றுபவருக்கு சீதையைத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். சுயம்வரத்தில் பங்கேற்ற அரசர்களும், அரசகுமாரர்களும் சிவதனுசுவை எடுக்க முயற்சித்தனர். ஆனால், ஒருவராலும் அதைச் செய்ய முடியவில்லை.
அப்போது விஸ்வாமித்திரர், ராமரிடம் அந்த சிவதனுசுவை எடுத்து நாணேற்றும்படி சொன்னார். ராமர் பெட்டியிலிருந்த சிவதனுசுவை தன் இடது கையால் துாக்கி நிறுத்தினார். பின் வலது கையால் அந்த சிவதனுசுவை எளிதாக உயர்த்தி இழுத்துக் கட்டினார். ஒரு அம்பை அதில் வைத்துப் பின்பக்கமாக இழுத்து, பிறகு அதை விட்டுவிட்டார். அந்தச் சிவதனுசு பெரும் சப்தத்துடன் முறிந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜனகர் தன் மகள் சீதையை ராமருக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். விஸ்வாமித்திரர், ராமரின் தந்தை தசரதனுக்குத் தகவல் அனுப்பினார். குடும்பத்தினருடன் மிதிலை நகருக்கு வந்து சேர்ந்தார் தசரதன். அவர் தன் மகன்கள் நால்வருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த வேண்டுமென விரும்பினார்.
தசரதனின் விருப்பத்தை அறிந்த ஜனகரும் ராமனுக்கு சீதையையும், லட்சுமணனுக்கு ஊர்மிளையையும், பரதன், சத்ருக்கனனுக்குத் தம்பி குஜத்வஜனின் மகள்களான மாண்டவி, சுருதகீர்த்தியைத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். தசரதனும் ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ராமர் - சீதை, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்கன் - சுருதகீர்த்தி திருமணம் ஒரே நாளில் சிறப்பாக நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
திருமணத்தின் போது சீதை, “எந்த நேரத்திலும், எவ்வித இன்ப துன்பங்களிலும் கணவரை விட்டுப் பிரியாமல் இருப்பேன்” என்றும், மாண்டவி, “துன்பம் வரும் காலத்தில் கணவர் நலனுக்காக வேண்டிக் கொள்வேன்” என்றும், ஊர்மிளை, “எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் என் கணவரின் சொல்லை மீற மாட்டேன்” என்றும், சுருதகீர்த்தி, “துன்பம் வந்தால் அதற்கு ஈடு கொடுக்கும் மன உறுதியை கணவருக்குக் கொடுக்கும்படி கடவுளை வேண்டுவேன்” என்றும் உறுதியளித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, தசரதன் நான்கு மகன்கள், மருமகள்களுடன் அயோத்திக்குத் திரும்பினார்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
