தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 32

சித்தர்களின் விளையாட்டு - 32

சித்தர்களின் விளையாட்டு - 32


ADDED : ஜூன் 18, 2026 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன்வந்திரி

“மகேஸ்வரரே! பாரத நாட்டின் தொன்மையான சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் ஏன் இப்படி தனித்தனியாக இருக்கின்றன! இரண்டுமே தங்களின் வழித்தோன்றல்கள் தானே. தாங்களும் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறீர்களே” என வேண்டுமென்றே புதிய கலகத்தை ஆரம்பித்து வைத்தார் நாரதர்.

“என்ன நாரதரே! இரண்டு மருத்துவங்களுக்கும் கலகமூட்டப் பார்க்கிறீரோ? உம் கலகம் பலிக்காது” எனக் கூறி மகேஸ்வரரும், பார்வதியும் சிரித்தனர்.

“சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் பாரத நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகள். இதில் என்ன பாகுபாடு கண்டீர்கள். பாரத மக்களின் உணவுமுறை, வாழும் இடம், கிடைக்கக் கூடிய மூலிகைகளின் தன்மை, சீதோஷ்ண அமைப்புக்கு ஏற்றவாறு இரண்டு மருத்துவ முறைகளும் உள்ளன.

எப்படி சிவமும், சக்தியும் இணைந்து இயங்குகிறதோ, அதுபோல சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் இணைந்தே இருக்கின்றன. இதில் எங்கு குறை கண்டீர்?” என மகேஸ்வரி சற்று கோபத்துடன் நாரதரைப் பார்த்துக் கேட்க மகேஸ்வரியை வணங்கிய நாரதர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“சிவசக்தியே... என்னை மன்னியுங்கள். தங்கள் வாக்கு எல்லோருக்கும் தெரிய வேண்டுமல்லவா! ஆகையால்தான் தங்களிடம் இதனைப் பற்றிக் கேட்டேன். தவறு இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” எனப் பணிந்து நின்றார்.

மகேஸ்வரி புன்னகைத்தவாறே “நாரதரே! தங்கள் கலகம் நன்மையில்தான் முடியும். பாரதத்தின் தென்கோடி, வடகோடியை இணைக்கும் மருத்துவங்கள்தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் வணங்கப்படும் ரிஷிகளும், சித்த மருத்துவத்தில் வணங்கப்படும் சித்தர்களும் இணைந்தே இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தை இணைக்கும் பாலமாக விளங்கிய தன்வந்திரியைத் தெரியாதா உங்களுக்கு?” எனக் கேட்டார்.

நாரதர் பதறிப் போய் “மகேஸ்வரியே! என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள், ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையும் மகாவிஷ்ணுவின் அவதாரமுமான மகான் தன்வந்திரியைத் தெரியாதவர் உண்டோ! சிறுபிள்ளைத்தனமாக நான் கேட்ட கேள்விக்கு என்னை மன்னியுங்கள்” என இருவரையும் வணங்கி நின்றார்.

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் உட்கொள்ள வேண்டி பாற்கடலை கடைந்தனர். அங்கே நான்கு வேதங்களும் இசைக்கப்பட்டன. அப்போது நோய் வராமல் காக்கும் மந்திரங்களை அருளியவாறு கைகளில் அமுத கலசம், அட்டைப்பூச்சி, சங்கு, சக்கரம் ஆகியவற்றை பிடித்தபடி மகாவிஷ்ணுவின் அவதாரமாகத் தன்வந்திரி தோன்றினார். மக்களின் நோய் நீங்கும் மந்திரங்களை உச்சரித்தபடி தன்வந்திரி தோன்றியதால் அகிலம் எங்கும் மக்களுக்கு நோய் நீங்கியது.

சீந்தில் போன்ற அபூர்வ மூலிகைகளின் புனித நீர் நிரம்பிய கலசத்தில் உள்ள மருத்துவ குணமுடைய நீர் பட்ட இடங்களில் எல்லாம் நோய்க் கிருமிகள் நீங்கி சுத்தமாயின. அவரது கையில் உள்ள சங்கு, சக்கரம் தீய சக்திகளை அழித்து மக்களின் பயத்தைப் போக்கின. சங்கு ஒலி கேட்டதும் புத்துணர்ச்சி பெற்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடலில் பெருகிய அசுத்த ரத்தத்தை அட்டைப் பூச்சிகள் உறிஞ்சியதால் நோய்கள் நீங்கின.

சுதர்சன சக்கரத்தை ஏந்திய மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய தன்வந்திரி பகவானே மருத்துவ கடவுள். அவருக்குரிய மந்திரம் கூறி வணங்கும் அனைவரும் உடல்நலம் பெற்றனர். நோய் வராமல் காத்துக் கொள்ள கோயில்கள், மருத்துவமனைகளில் தன்வந்திரி மந்திரம் சொல்லப்பட்டன. சமஸ்கிருதத்தில் ஏராளமான ஆயுர்வேத ஸ்லோகங்கள், தமிழில் ஏராளமான சித்த மருத்துவச் செய்யுள்களை படைத்தார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் சுஸ்ருதருக்கு அறுவை சிகிச்சையைக் கற்றுக் கொடுத்தார். இசை வடிவில் 3000 பாடல்களை இயற்றினார். தேவர்களுக்கு மருத்துவராக விளங்கியதால் தேவமருத்துவர் எனப்பட்டார்.

ஆயுர்வேதம் மட்டுமன்றி சித்த மருத்துவத்திலும் தலைசிறந்து விளங்கினார். மூலிகைகளில் இருந்து மருந்து உப்புகளைப் பிரித்தெடுக்கும் சித்த மருத்துவக் கலையைக் கற்றுத் தேர்ந்தார். உலோகங்களைக் கரைக்கக் கூடிய ஜெயநீர், உடலின் ஹார்மோன்களை நிலைப்படுத்தும் முப்பு, அமுரி போன்ற சித்த மருந்து செய்முறைகளைக் கண்டறிந்தார். தன்வந்தரி பகவானைப் பெருமாளின் அவதாரமாகப் பெருமைபடுத்தி அகத்தியர்- 12,000 என்ற நுாலை அகத்தியர் இயற்றினார்.

தான் அறிந்த மருத்துவ முறைகளை எல்லாம் அனைத்து மக்களும் பயன்பெற வேண்டி ஆயுர்வேத நிகண்டு, சிகிச்சா சாகரம் போன்ற ஆயுர்வேத நுால்களை வடமொழியிலும், தன்வந்திரி நிகண்டு, பாலவாகடம், தைலம் 500, வைத்திய காவியம் 1000, கலைஞானம் 500, சூட்சும வைத்தியம், நாலுகண்ட ஜாலம் 100, கருட ஆருடம் 100, செயநீர் 50, முப்பு சூத்திரம் 48, வைத்திய சிந்தாமணி 1200, தண்டகம் 140, தன்வந்தி நிகண்டு 300, கருக்கடை 300 போன்ற சித்த மருத்துவ நுால்களை தமிழிலும் இயற்றினார்.

ஆயுர்வேதம் மட்டுமின்றி சித்த மருத்துவத்திலும் நாட்டம் கொண்ட தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக, மருத்துவக் கடவுளாக அனைவராலும் வணங்கப்பட்டார். பின் தன் அவதாரத்தை நிறைவு பெற வேண்டி வைத்தியநாதராகச் சிவபெருமான் வீற்றிருக்கும் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் முக்தியடைந்தார்.

தன்வந்திரி வரலாறு கேட்ட நாரதர் பெருமையுடன் “சித்தர்கள் காடு, மலை, மொழி, இனம் வேறுபாடின்றி மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் மருத்துவ ரகசியங்களைக் கூறிச்சென்றதை அறிந்து வியப்படைகிறேன்” எனக் கூறி வணங்கினார்.

மகேஸ்வரன் நாரதரிடம் “சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும், பாரத மருத்துவத்தின் இரண்டு கண்கள் என்பதை இப்போதாவது அறிந்தீரா?” எனக் கேட்டார்.

“சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தை இணைக்கும் பாலமாகத் தன்வந்திரி விளங்கியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பாரதத்தின் தொன்மையான மருத்துவ முறைகளில் சித்தமும், ஆயுர்வேதமும் சிறப்பு வாய்ந்தவை. வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும் மக்களின் நோய்களைத் தீர்க்கும் ஏராளமான மூலிகை, உலோக உப்புப் பொருட்கள் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தும் முறைகளுடன் ஞானம், யோகம், மூச்சுப்பயிற்சி, ரசவாதம் ஆகிய அனைத்தையும் தன்வந்திரி மக்களுக்காக அருளிச் சென்றுள்ளார். இவற்றை எல்லாம் தங்கள் அருளால் அறிந்து கொண்டேன்” என்றார்.

இந்த உலகில் பிறந்த சித்தர்கள் சாதாரண நிலையில் பிறந்திருந்தாலும் மக்களின் நன்மைக்காகத் தங்களை வருத்திக் கொண்டு அரும் பெரும் செயல்களைச் செய்தனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தனர். சிவன் மீது ஈர்க்கப்பட்டு, மெய் ஞானத்தை தேடி அட்டாங்க யோகம், அட்டமாசித்தி கைகூடி சித்தராயினர்.

“உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்வதன் மூலம் சாதாரண மக்களும் பூவுலகம் போற்றும் சித்தராக மாறலாம் என்பது தானே தங்களின் திருவிளையாடல்” என நாரதர் கூற மகேஸ்வரன் புன்னகைத்தார்.

“நாரதரே! தங்கள் யூகம் சரியே. யாம் சொல்லப் போகும் அடுத்த சித்தர் யார் என யூகித்து வீட்டீர்கள் போல” என புன்னகை செய்தார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us