ADDED : ஜூன் 18, 2026 09:17 AM

காமன் - ரதி திருமணம்
படைப்புத் தொழிலை விரிவுபடுத்த விரும்பினார் பிரம்மா. அவரின் சிந்தனையின் வெளிப்பாடாக மனதில் இருந்து அழகும், இளமையும் கொண்ட ஒருவன் தோன்றினான்.
பிரம்மனை வணங்கிய அவன், தனக்கான பணியை சொல்லும்படி வேண்டினான். அவனுக்கு காமன் எனப் பெயரிட்ட பிரம்மன், கரும்பு வில், மலர்க்கணையை கொடுத்து, “இந்த அம்பை எவர் மீது செலுத்தினாலும் அன்பும், காமமும் தோன்றும்” என்றார்.
அதனைக் கேட்ட காமன், சோதனை முயற்சியாக பிரம்மாவின் மீதே செலுத்தினான். அம்பால் தாக்கப்பட்ட பிரம்மாவின் மனதில் அன்பும் காமமும் தோன்றியது. அவர் அங்கிருந்த பெண்ணான சந்தியாவை விரும்பினார். தன்னுடைய மாற்றத்தை உணர்ந்த பிரம்மா, சிறிது நேரத்தில் சுயநினைவு பெற்றார்.
காமனின் செயலால் அவமானமடைந்த பிரம்மா, எதிர்காலத்தில் காமன் எரித்துச் சாம்பலாக்கப்படுவான் என சபித்தார். அதனைக் கேட்டதும், “அம்பைச் சோதனை செய்யவே தங்கள் மீது செலுத்தினேன். மன்னியுங்கள்” என காமன் வேண்டினான்.
மனமிரங்கிய பிரம்மன், சிவபெருமான் கோபத்தால் காமன் எரிந்துச் சாம்பலானாலும், காமனின் மனைவி வேண்டுதலால் மறுபிறப்பு கிடைக்கும் என்று அவனுக்கான சாப விமோசனம் சொன்னார்.
இந்நிலையில், அங்கிருந்த சந்தியா மீது ஆசை கொண்ட பிரஜாபதிகளில் ஒருவரான தட்சனின் உடலிலிருந்து வெளியேறிய வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகளிலிருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள். அவள் கையில் தாமரை மலர் ஒன்று இருந்தது. அவள் பிரம்மாவை வணங்கினாள்.
அவளிடம், “என்னிடமிருந்து தோற்றம் பெற்றிருக்கும் மன்மதன் உயிர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் பணியைச் செய்கிறான். நீ அவனைத் திருமணம் செய்து கொண்டு, அனைவரின் மகிழ்ச்சிக்கும் துணையாக, மோகத்தை ஏற்படுத்தும் நீ ரதி எனப்படுவாய்” என்றார்.
மகிழ்ந்த அவள், காமனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள். அதனைத் தொடர்ந்து, காமன், ரதி இருவருக்கும் பிரம்மன் திருமணத்தை நடத்தி வைத்தார். அங்கிருந்த பிரஜாபதிகள் இருவரையும் வாழ்த்தினர். அதன் பின்னர், இருவரும் புதிய உயிர்கள் உருவாக்கத்திற்கான அன்புப் பணிகளைச் செய்ய கிளம்பினர்.
காமன் தன்னிடமிருக்கும் ஐந்து வகையான அம்புகளால் ஒருவரின் மனதைக் கடைந்து, எதிர்பாலினத்தின் மீது காதல் கொள்ளச் செய்தான். அதனால் அவனுக்கு, 'மனதைக் கடைபவன்' என பொருள் தரும் வகையில் 'மன்மதன்' என பெயர் ஏற்பட்டது.
இருவரின் செயல்பாட்டால் பிரம்மாவின் விருப்பம் நிறைவேறியது. காமன், ரதி சிற்றின்பத்திற்கான தெய்வமாகினர்.
இதற்கிடையே காசியப முனிவர், மாயை தம்பதியின் மகன்களான சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் என்ற மூவரும் கடுந்தவம் மேற்கொண்டு, சிவனின் வழி வந்தவரால் மட்டுமே தங்களுக்கு அழிவு ஏற்பட வேண்டும் என வரம் பெற்றனர்.
தங்களுக்கு இனி அழிவே இல்லை என எண்ணி அனைவரையும் துன்புறுத்த தொடங்கினர். கவலையடைந்த தேவர்கள் இந்திரனிடம் சென்று முறையிட்டனர். சிவனின் மகனால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் என்பதை அறிந்த இந்திரன், சிவனுக்கும் பார்வதிக்குமிடையே காதலை ஏற்படுத்தும்படி காமனுக்கு ஆணையிட்டான். அதனை ஏற்ற காமதேவன், மனைவி ரதி தேவியுடன் புறப்பட்டான்.
தியானத்திலிருந்த சிவனின் மீதும், அவருக்கு பணிவிடை செய்யும் பார்வதி மீதும் காமதேவன் மலரம்புகளைச் செலுத்தினான். அதனால் தியானம் கலைந்த சிவன், யோக நிலையில் இருந்து மோக நிலைக்கு மாறினார். பார்வதியும் மோக நிலையை அடைந்தார்.
மனம் தடுமாறிய இருவரும் காமதேவன் அடுத்த அம்பை எய்வதற்கு முன்பாக இயல்பு நிலைக்குத் திரும்பினர். தவம் கலைந்ததால் கோபமடைந்த சிவன், தன் மேல் அம்பு எய்த மன்மதனைக் கோபத்துடன் பார்த்தார். அப்போது, சிவன் நெற்றிக்கண்ணை திறந்தார். நெருப்பு மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது.
கணவன் எரிந்து சாம்பலானதைக் கண்டு அதிர்ந்த ரதி தேவி, தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினாள். அவளுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பித்தார். மன்மதன் உயிர் பெற்ற போதும், எரிக்கப்பட்ட உடல் அவனுக்குக் கிடைக்கவில்லை.
ரதியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான் என்றும், அவன் பிறர் கண்களுக்குத் தெரிய மாட்டான் என்றும், அவனுடைய பணிகளை எப்போதும் போல் அவன் தொடர்ந்து செய்யலாம் என்றும் சிவன் சொன்னார். கணவன் உயிர்ப்பிக்கப்பட்ட போதும், உடலில் இல்லாத கணவனின் நிலையைக் கண்டு வருந்தினாள். தன் கணவரின் உடலை எப்படியாவது மீட்டுத் தரும்படி ரதிதேவி வேண்டினாள்.
மனமிரங்கிய பார்வதி, உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதனுக்கு அவனுடைய உடலையும் மீட்டுத் தருமாறு சிவனிடம் சொன்னார். அதற்குச் சிவன் “உடலை இழந்த மன்மதன் இனி 'அனங்கன்' எனப்படுவான். திருமால் பூமியில் கிருஷ்ணராகப் புதிய தோற்றம் எடுக்கும் போது, கிருஷ்ணரின் மகனாக மன்மதன் பிறப்பான். அப்போது, ரதிதேவியும் பூமியில் பிறப்பாள், பூவுலக வாழ்க்கையில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். அதன் பின்பு மன்மதனுக்கு அவன் இழந்த உடல் கிடைக்கும்” என்றார்.
கம்சன் உள்ளிட்ட அசுர சக்திகளை அழித்துப் பூமாதேவியின் பாரத்தைக் குறைக்க, நல்லவர்களை காப்பாற்ற, பூமியில் தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் பிறந்தார். சிவபெருமான் சொன்னபடி, கிருஷ்ணர், ருக்மணி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த மன்மதன் பிரத்யும்னன் என அழைக்கப்பட்டான். ரதியும் பூமியில் மாயாவதியாகப் பிறந்து, சம்பாராசுரன் எனும் அசுரனிடம் சமையல் வேலை செய்யும் பணிப்பெண்ணாக இருந்தாள்.
இந்நிலையில், கிருஷ்ணனுக்குப் பிறக்கும் மகனால் தனக்கு அழிவு ஏற்படுமென அறிந்த சம்பராசுரன், துவாரகையில் ருக்மணியிடமிருந்த பிரத்யும்னனை, எவருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று கடலில் வீசினான். கடலில் வீசப்பட்ட பிரத்யும்னனை ஒரு மீன் விழுங்கியது. அதன் பின்னர், மீனவர் வலையில் சிக்கிய அம்மீனை மீனவர்கள் சம்பாசுரனிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.
சம்பாராசுரன் அந்த மீனைச் சமைத்துத் தரும்படி மாயாவதியிடம் தந்தான். மாயாவதி, அந்த மீனை அறுக்கும் போது, அதன் வயிற்றில் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தாள்.
அப்போது அங்கு வந்த நாரதர், அந்தக் குழந்தை கிருஷ்ணருடையது என்பதையும், அக்குழந்தை மன்மதனின் மறுபிறப்பு என்பதையும், அவள் ரதிதேவியின் மறுபிறப்பு என்பதையும் எடுத்துச் சொன்னார். அதன் பிறகு, மாயாவதி அந்தக் குழந்தையைக் கவனமுடன் வளர்த்து வந்தாள்.
அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானது. அவன் கிருஷ்ணனின் குழந்தை என்பதையும், சம்பராசுரனை அழிக்க அவன் தோன்றியதாகவும் எடுத்துச் சொன்னாள் மாயாவதி. அதன் பின்னர் அவனும் அசுரனை அழித்தான். தன்னை வளர்த்த மாயாவதி, தன் மனைவி ரதிதேவி என்பதை அறிந்த அவன், அவளை அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றான். பிரத்யும்னன், மாயாவதி இருவருக்கும் கிருஷ்ணர் திருமணத்தை நடத்தி வைத்தார். அவர்களின் இல்லற வாழ்வின் தொடர்ச்சியாக, அவர்களுக்கு அனிருத்தன் என்ற மகன் பிறந்தான்.
பூலோக வாழ்க்கை முடிந்த நிலையில், தேவ உலகம் திரும்பிய மன்மதன், ரதி இருவரும் அவர்களின் அன்புப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
-திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
