ADDED : ஜூன் 18, 2026 08:57 AM

பரமானந்தம் என்ற பணக்காரருக்கு ஒரு ஆசை. கடவுளைக் காண வேண்டும் என தினமும் பிரார்த்தித்து வந்தார். கனவில் தோன்றிய கடவுள், குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு விருந்துண்ண வருவதாக தெரிவித்தார். மகிழ்ச்சியுடன் தன் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார். உண்மை என நம்பியவர்கள் தங்களின் குறையைச் சொல்லி முறையிட எண்ணினர். நம்பாதவர்களோ விருந்து உண்ணும் வாய்ப்பாக கருதினர்.
குறிப்பிட்ட நாளில் அதிகாலையில் நீராடி கடவுளைக் காண தயாரானார் பரமானந்தம். உறவினர் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.
காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல், வடை, கேசரி என பலகாரம் தயாரானது. ஆனால் யாருக்கும் உணவளிக்கவில்லை. காரணம் கடவுள் சாப்பிடும் முன், யாரும் சாப்பிட வேண்டாம் என்பதில் கறாராக இருந்தார். நேரம் கடந்ததால் அனைவரும் பசியால் வாடினர். தாமதமாகி விட்டதால் மதியம் கடவுள் வருவார் எனக் கருதிய பரமானந்தம், அதற்கு உணவு தயாரிக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் விருந்தினர்களுக்கு காலை உணவு பரிமாறச் சொன்னார். பணக்காரர் என்பதால் உறவினர் யாரும் அவரை எதிர்க்க முடியவில்லை. அப்போது வாசலில் ''ஐயா... பசிக்குதே'' என குரல் கேட்டது. ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தாள்.
அவளைக் கண்ட பரமானந்தம் சீறினார்.
''யாரங்கே! இவளை துரத்துங்க! கடவுளுக்காக காத்திருக்கும் நேரத்தில் இவள் இங்கிருக்கலாமா?''
வேலைக்காரர்கள் அடிக்காத குறையாக விரட்டினர்.
மதிய உணவு தயாரானது. நேரம் கடந்ததே ஒழிய கடவுள் வந்தபாடில்லை.
உறவினர்களிடம் பரமானந்தர், ''பொறுத்திருங்கள்! கடவுளின் வரவுக்காக காத்திருப்பது புண்ணியமான செயல். அவருடன் சேர்ந்து உண்பது நமக்கு கிடைத்த பாக்கியம்'' என்றார்.
அப்போது முதியவர் ஒருவர் தள்ளாடியபடி வாசலில் நின்றார்.
''ஐயா! பசிக்கிறது. கொஞ்சம் உணவிடுங்கள்'' என்றார்.
அவரைக் கண்டதும் பரமானந்தம் கோபத்தில் தடியால் விரட்டத் துணிந்தார். முதியவரும் இடத்தை விட்டு நகர்ந்தார். கடவுளுக்காக காத்திருப்பதில் இனி அர்த்தமில்லை என்ற எண்ணம் வரவே, கடவுள் ஏமாற்றி விட்டதாக அவமானப்பட்டார். தனது படுக்கை அறைக்குள் சென்று உள்ளே தாழிட்டார். படுத்த சிறிது நேரத்தில் களைப்பால் துாங்கி விட்டார்.
'' என்னை ஏமாற்றி விட்டீரே... இது தான் உமது லட்சணமா!'' எனக் கடவுளிடம் கேட்டார்.
''பக்தனே... ஏமாற்றுவது என் தொழில் அல்ல! தாயும், குழந்தையுமாக வடிவெடுத்து காலையில் தேடி வந்தேன். சீறிப் பாய்ந்தாய். மதியம் முதியவராக வந்த போது தடியால் விரட்டினாய். கருணை இல்லாத பக்தி, தர்மம் செய்யாத பணத்தால் பயனில்லை. எல்லா உயிர்களிலும் உள்ளிருப்பவன் நானே! இந்த உண்மையை அறியாமல் விருந்துக்கு அழைத்த உறவினர்களையும் அலட்சியப்படுத்தி விட்டாயே'' என்றார் கடவுள்.
தவறை உணர்ந்த பரமானந்தம் துாக்கத்தில் மட்டுமின்றி அறியாமையில் இருந்தும் விழித்துக் கொண்டார்.
