தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 36

சித்தர்களின் விளையாட்டு - 36

சித்தர்களின் விளையாட்டு - 36


ADDED : ஜூலை 16, 2026 11:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழுகண்ணர்

“மகேஸ்வரனே, சிவாயநம என உங்களை வணங்கும் போதெல்லாம் தங்களை அறியாமல் கண்ணீர் விட்டு பக்தர்கள் அழுகிறார்களே! இது பக்தியின் பரவசமா, பயத்தின் வெளிப்பாடா இல்லை அன்பின் அர்ப்பணிப்பா” எனக் கேட்டார் நாரதர்.

பார்வதி குறிக்கிட்டு, “என்ன நாரதரே! தவறு செய்யும் மனிதர்கள்தான் பயப்படவேண்டும். நல்லதையே நினைக்கும் பக்தர்கள் ஏன் பயப்படவேண்டும். சிவபெருமான் மேல் அன்பு பெருகப் பெருக வெள்ளம் போல் கண்ணீர் பெருகும். பக்தியும், அன்பும் இணையும் போது பேச முடியாமல் மவுனமாகி கண்ணீர் சிந்துவர் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனக் கேட்டார். அதற்கு நாரதர், “அம்மையே! பூலோகத்தில் மனிதர்கள் சிலர் பக்தர்களை கேலி செய்கிறார்கள். கடவுளை வணங்குவதை, அழுவதை கண்டு ஏளனம் செய்கின்றனர். தாங்கள் இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இப்படி கேட்டேன் மன்னியுங்கள்” என்றார்.

மகேஸ்வரன் தொடர்ந்தார்.

“நாரதரே! என் பக்தர்கள் பிறர் துன்பத்தை தங்களின் துன்பமாக ஏற்றுக் கொள்பவர்கள். இப்படி பக்தர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்லி அழுவதைக் கேட்டு தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய அழுகண்ணி சித்தர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என கூறத் தொடங்கினார்.

நாகப்பட்டினம் அருகிலுள்ள கிராமத்தில் வசித்த சிவபக்தர், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அக்கறை கொண்டிருந்தார். கர்ம வினையாலும், விதிப் பயனாலும் கலங்கிய கண்களுடன், சோகமான முகத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்களை பார்த்த அவர் கண் கலங்கினார். அவர்களின் உடல் உபாதை, மனக்குறைகளை தன் துன்பமாக கருதி கண்ணீர் வடித்தார்.

நாளடைவில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேதனையை அறிந்து அதனை தீர்க்குமாறு கடவுளிடம் தானே கண்ணீர் சிந்தி முறையிட ஆரம்பித்தார். இதற்காக தன் வருத்தத்தை எல்லாம் ஒன்று சேர்த்து ஏக்கத்துடன் ஒப்பாரி வடிவில் பாட ஆரம்பித்தார். தன் பாடல்களில் ஞானம், யோகம், போன்ற பல தத்துவங்களை சேர்த்து பாடிக் கொண்டிருந்ததால், தங்களுக்காக சிவனிடம் முறையிடுவதைக் கண்டு அவரை சித்தராக வணங்க ஆரம்பித்தனர். பாடலின் இறுதியில் 'கண்ணம்மா' என முடிப்பது இவரது வழக்கம். பாடி முடித்ததும் அவருடைய கண்களில் அருவி போல கண்ணீர் வடியும். இதனால் அவரை 'அழுகண்ணி சித்தர்' என அழைத்தனர்.

துன்பங்களை யாரிடமாவது வருந்தி முறையிட்டால் அது மறைந்து விடும் என்பதை அறிந்த அழுகண்ணி சித்தர் நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மனிடம் முறையிட்டு அருள் பெற்றார். அனைத்து பிணிகளையும் நீக்கும் காயகற்ப மூலிகையை தேடி அலைந்தார். அம்மனின் அருளால் கோரக்கர் சித்தரை குருவாக ஏற்று சித்த மருத்துவம் கற்றுக் கொண்டார். கோரக்கர் ஆணையை ஏற்று பொதிகைமலை சென்ற அழுகண்ணர் அங்கே மலையடிவாரத்தில் அமர்ந்து கண்ணீர் வடித்தபடி தவத்தில் ஆழ்ந்தார்.

அவருடைய கண்ணீரைக் கண்டு ஐம்பூதங்களும் அமைதியாகின. அருவிகளும், மேகங்களும், தாவரங்களும், விலங்குகளும் அசைவின்றி நின்றன. ஆனால் கடும் தவத்தில் ஆழ்ந்திருந்த அழுகண்ணர் தலையின் மேல் எங்கிருந்தோ தண்ணீர் சொட்டு சொட்டாக விழ ஆரம்பித்தது. எல்லா இயக்கமும் நின்று போயிருக்க தன்மேல் மட்டும் எப்படி தண்ணீர் சொட்டுகிறது என வியந்த அழுகண்ணர் நிமிர்ந்து பார்த்தார். வியந்து போனார். அங்கே மலை உச்சியிலிருந்த ஒரு மூலிகைச் செடி மட்டும் சித்தருடன் சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. தான் தேடிய காயகற்ப மூலிகை இதுதான் என முடிவு செய்து மலை உச்சியை நோக்கி நடந்தார்.

அங்கு பாதையில் இருந்த அந்த மூலிகை சித்தரைக் கண்டதும், தன் இலைகளை விரித்து மூடி கைகூப்பி வணங்கியது. அழுகண்ணரும் அந்த மூலிகை அருகில் சென்று வருடிக்கொடுத்தார். அந்த மூலிகையும் காயகற்ப மூலிகையை அடையாளம் காட்டுவது போல் அவர் கடந்து செல்வதற்கு வழி விட்டு நின்றது.

அழுகண்ணர் மலைஉச்சியை அடைந்தார். அங்கே தலை கவிழ்ந்து வணங்கியபடி இருந்த மூலிகையைக் கண்டார். தான் தேடி வந்த காயகற்ப மூலிகை அது தானா என உறுதி செய்ய அழுதபடி பெருங்குரலெடுத்து பாட ஆரம்பித்தார். அந்த இடமே நிசப்தமாக மாறியது. மெதுவாக கண்களை திறந்து பார்த்து அதிசயித்தார். ஆம்! அந்த மூலிகை சொட்டு சொட்டாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததை கண்டார்.

“கண்ணம்மா! மக்களின் நோய்களை போக்கும் அரிய மூலிகையை எனக்கு அடையாளம் காட்டிய உன் பாதங்களை பணிகிறேன். கற்ப மூலிகையாக இந்த மூலிகை சித்த மருத்துவத்தின் பெருமையை தரணி எங்கும் பறை சாற்றும்” என மூலிகைச்செடியை வணங்கினார். அந்த மூலிகை நிமிர்ந்து பார்த்து “சித்தரே! நான் ஒரு அரிய மூலிகை. தன்னலம் இல்லாதவர்களின் கண்களில் மட்டுமே நான் தென்படுவேன்.

மக்களின் நோய்களை நீக்கி, அவர்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை எனக்குண்டு. ஆனால் என்னை எல்லோரும் அழித்து விடுகிறார்கள் என்பதால் யாருமே இல்லாத இந்த மலை உச்சியில் வாழ்ந்து வந்தேன். ஆனாலும் தங்களின் பாடலைக் கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்தது. தாங்களும் என்னை நாடி வந்தீர்கள். இனி நான் தங்களுக்குச் சொந்தமானவள்” என்றது அந்த மூலிகை.

அழுகண்ணரும் மகிழ்ச்சியடைந்து “மக்களின் துன்பமெல்லாம் போக்கி அவர்களின் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்கும் பலம் பொருந்திய உன்னை மக்கள் 'அழுகண்ணி' என அழைப்பார்கள். தேவையானவர்களுக்கு மட்டுமே கண்களில் தென்படுவாய்” எனக் கூறி மூலிகையை அங்கேயே விட்டு விட்டார். மேலும் அவர் திரும்பிச் செல்லும் முன்பு மூலிகையைப் பார்த்து, “இந்த வனப் பகுதியில் உள்ள மூலிகைகளை யாரும் பறித்து விடாமல் நீயே பாதுகாப்பாக இருப்பாய். பிறருக்கு தீங்கு செய்பவர்களை இந்த மலைப் பகுதிக்குள் நுழைய விடாதே. அதே நேரம் நல்லவர்களைக் கண்டால் அவர்களை வணங்கி வழிவிடு. அனைவரையும் வணங்கும் நீ இனி 'தொழுகண்ணி' என அழைக்கப்படுவாய்” எனக் கூறி மூலிகையை வணங்கி மலையை விட்டு இறங்கி சென்றார்.

கன்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் காயகற்ப மருந்தை தயார் செய்தார். இதன் மூலம் கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தினார். இந்த உலகைப் பார்த்தும், ஊரைப் பார்த்தும், மக்களைப் பார்த்தும் அழுதபடியே பாடிய இவரது பாடல்கள் ஆழ்ந்த ஞானம் உடையவை. இதை படிக்கும் போதே குரல் உடைந்து அழுகை உண்டாகும். தன் ஞானம், யோகம், வைத்தியம் ஆகியவற்றை சித்தர் 200, ஞான சூத்திரம் 24, அழுகண்ணி வைத்தியம், அழுகண்ணி யோகம், அழுகண்ணி ஞானம் போன்ற நுால்களாக இயற்றினார். கடவுளை வேண்டும் போது அழுகண்ணி சித்தர் மாய ரூபத்தில் அழுதபடி பக்தர்களுக்காக வேண்டுவதை மானசீகமாக அறிய முடியும்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகிலுள்ள திருமலை நம்பி கோயில் முன்புறம் உள்ள புளிய மரத்தடியில் தவமிருந்து முக்தி அடைந்தார்.

நாரதர் வியப்புடன், “அழுகண்ணி சித்தர் பெயரிலே மூலிகை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். சித்தர்கள் மக்களின் மனம், உடல் நோய்களை நீக்குவதற்காக எப்படியெல்லாமம் வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன்” என்றார்.

“நாரதரே! கொஞ்சம் பொறுங்கள். அழுகண்ணி சித்தர் மக்களின் நோயை தன் நோயாக ஏற்றுக் கொண்டு அழுது தொண்டாற்றியது போல எழுத்தாணியால் தன் நாக்கை புண்ணாக்கி பாடல் எழுதிய சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என மகேஸ்வரர் சொல்ல நாரதர் ஆர்வமானார்.

- விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us