தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 32

தெய்வத் திருமணம் - 32

தெய்வத் திருமணம் - 32


ADDED : ஜூலை 16, 2026 11:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹனுமன் - சுவர்ச்சலா தேவி திருமணம்

கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரக் கூட்டத்தின் படைத்தலைவர் கேசரியும், அவரது மனைவி அஞ்சனையும் குழந்தைப்பேறு வேண்டிச் சிவனை வழிபட்டனர். இந்நிலையில் சிவன் தன் தெய்வீக சக்தியின் ஒரு பகுதியைக் வாயுதேவன் வழியாக அஞ்சனையின் கருவில் போய்ச் சேர்த்தார்.

அதை தொடர்ந்து கேசரி, அஞ்சனை தம்பதிக்கு சிவனின் அம்சமாகப் பிறந்தவர் ஹனுமன். அந்த குழந்தைக்கு பெற்றோர் 'மாருதி' என பெயரிட்டனர். எந்தச் செயலையும் துணிவுடன் செய்த மாருதி, ஒருமுறை சூரியனைப் பழம் என நினைத்து, அதைப் பறித்துச் சாப்பிட எண்ணி மேல் நோக்கிச் சென்றான். அவனது பயணத்திற்கு வாயுதேவன் துணையாக இருந்தார்.

அதனைக் கண்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் மாருதியைத் தாக்கினான். அதில் கீழே விழுந்த மாருதி உணர்வற்ற நிலையை அடைந்தான். அதைக் கண்டதும் உயிர்களுக்கு ஆதாரமான காற்றை வழங்காமல் வாயுதேவன் நிறுத்தினார். அதனால் அண்டமே அழியும் நிலை ஏற்பட்டது.

அதிர்ச்சியுற்ற தேவர்கள், இந்திரன் தலைமையில் பிரம்மாவை நாடினர். மாருதியின் அவதார நோக்கம் அறிந்த பிரம்மா, அது பற்றி தேவர்களுக்குச் சொல்லி மீண்டும் உயிர்ப்பித்தார். அப்போது தேவர்கள் அனைவரும் அவனுக்கு தேவையான சக்திகளை வழங்கினர்.

இந்திரனால் தாக்கப்பட்டதால் அவனது தாடை உடைந்து சற்று பெரியதானது. அதன் பின்பு, 'பெரிய தாடையுடையவன்' அதாவது 'ஹனுமன்' எனப்பட்டான். அஞ்சனையின் மகன் என்பதால் 'அனுமன்' என்றும் அழைக்கிறோம். ஹனுமனுக்குத் தேவர்கள் வழங்கிய பல்வேறு சக்திகளால், அணிமா (சிறியதாக மாறுதல்), மகிமா (பெரியதாக மாறுதல்), லகிமா (காற்றை விட இலகுவாதல்), பிராப்தி (விருப்பப்படி எங்கும் பயணித்தல்), பிரகாம்யா (விரும்புவதை அடைதல்), இசித்வா (விருப்பப்படி எதையும் உருவாக்குதல் அல்லது அழித்தல்), வசித்வா (இயற்கையின் கூறுகளைக் கட்டுப்படுத்துதல்), காமவசயிதா (விரும்பும் எந்த வடிவையும் எடுத்தல்) ஆகிய அஷ்டமா சித்திகள் (எட்டு திறன்கள்) கிடைத்தன.

இவற்றை பயன்படுத்தும் முன்பாக ஒரு குருவிடம் கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், சூரிய தேவனிடம் கற்க முடிவு செய்தான். சூரிய மண்டலத்தை அடைந்து சூரியதேவனிடம் முறையான கல்வியைக் கற்றுத் தரும்படி வேண்டினான். அவரும், 'உலகத்திற்கு ஒளி வழங்கும் நான் எப்போதும் பயணம் செய்பவன். என்னிடம் நீ எப்படி கற்க முடியும்? இதனால் என் பணி தடைபடுமே' என்றார்.

அதற்கு அவன் சூரியனை நோக்கியபடி பின்னோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னர் சூரியனிடம், 'இப்படியே நான் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே எப்போதும் போல முன்னோக்கி வாருங்கள்' என்றான். பாடங்களை சொல்லிக் கொண்டே முன்னோக்கியபடி சூரியன் நகர்ந்த வேகத்திற்கு இணையாக, ஹனுமன் பின்னோக்கி நகர்ந்து கொண்டே கற்றான்.

முதலில் வேதங்கள், அதன் பின்பு, நவவியாகரணம் என்னும் வடமொழி இலக்கணங்களை கற்றான். ஹனுமன் பின்னோக்கி நகர்ந்து கொண்டே, அனைத்தையும் கற்றுக் கொண்டான். சூரியனிடம் இருந்து அனைத்துக் கல்வியையும் முழுமையாகக் கற்றுக் கொண்டதால், 'நவ வியாகரண பண்டிதன்' எனப்பட்டான்.

ஹனுமன் கல்வி முடிந்த நிலையில் சூரியதேவனிடம், “எனக்கு சிறப்பான கல்வியை வழங்கிய தங்களுக்கு என்ன குருதட்சணை வேண்டும்?” எனக் கேட்டார். அப்போதுதான் சூரியனுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வும், அப்போது ஹனுமன் குறித்து பிரம்மா சொன்னதும் நினைவுக்கு வந்தது. சூரியன் அந்த நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்தினான்.

விஸ்வகர்மாவின் மகளான உஷாதேவியைச் சூரியன் திருமணம் செய்து கொண்ட பின்பு, சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அவள் தவித்தாள். அதனையறிந்த அவளது தந்தை விஸ்வகர்மா, சூரியனின் ஒளியை மெருகூட்டுவதாகச் சொல்லி, மருமகனின் ஒளிக்கதிர்களில் இருந்து அதிக வெப்பமான சில ஒளிக்கதிர்களை பிரித்தெடுத்தார்.

அப்படிப் பிரிக்கப்பட்ட ஒளிக்கதிர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு இளம் பெண்ணின் வடிவமாகத் தோற்றம் எடுத்தது. தன்னிடமிருந்து தோன்றிய அந்தப் பெண்ணை, மகளாக வளர்த்த சூரியன், அவளுக்கு சுவர்ச்சலாதேவி என பெயரிட்டார். அந்தப் பெண்ணின் ஒளிமயமான அழகில் மயங்கிய பலரும் அவரை மணக்க விரும்பிய போதும், அவளுடைய உடலின் வெப்பத்தைத் தாங்க முடியாது என பின் வாங்கினர்.

அதனால் கவலையடைந்த சூரியன் பிரம்மனிடம், தன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார் எனக் கேட்டார். அதற்கு சிவனின் நெருப்பு சக்தியுடன் தோன்றிய ஹனுமனே ஏற்றத் துணைவராக இருப்பார். உன் மகள் சுவர்ச்சலாதேவியை அவருக்கு மணம் செய்து கொடு எனச் சொன்னது சூரியனின் நினைவுக்கு வந்தது.

அதை அவருக்கு சொல்லி விட்டு, “என் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் புரிவதே எனக்கான குருதட்சணை” என்றான். அதனைக் கேட்ட ஹனுமன் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் வெளிக்காட்டாமல், “திருமணம் என்ற குடும்பத் தொடர்பில் இணைந்தால் என் வாழ்க்கைக்கான நோக்கம் சிதையும். எனவே வேறு ஏதாவது குருதட்சணை கேளுங்கள்” என்றார்.

சூரியதேவன், “பிரம்மச்சாரியாக வாழ்வது என்ற தங்களின் முடிவை நான் நன்கு அறிவேன். என் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்து கொள்வதால், தங்களது பணிகளுக்கு தடை நேராது. திருமணத்திற்குப் பிறகு, என் மகள் தங்களின் மீது பக்தி கொண்ட மனைவியாக மட்டும் இருப்பாள். இந்த திருமணம் பேரண்டத்தின் நலனுக்கானதாக அமையும். நான் விரும்பும் குரு தட்சணையைத் தாருங்கள்” என்றார்.

ஒரு மாணவனாகத் தன் கடமைகளை நிறைவேற்றவும், தன் ஆசிரியரை மதிக்கவும், ஹனுமன், சுவர்ச்சலா தேவியைத் திருமணம் செய்ய சம்மதித்தார். சுவர்ச்சலா தேவியும் திருமணத்திற்குப் பின்பு, ஹனுமனின் முடிவுக்கு ஆதரவாக தவத்தில் ஈடுபடப் போவதாக கூறினாள்.

அதைத் தொடர்ந்து, ஆனி மாத அமாவாசை திதி, உத்திர நட்சத்திரம் கூடிய நாளில் ஹனுமன், சுவர்ச்சலா தேவி திருமணம் நடந்தது. தேவர்கள் அனைவரும் அதில் பங்கேற்றனர்.

ஆசை அல்லது பற்று இல்லாமல் ஹனுமன் சுவர்ச்சலா தேவியை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு அவள் தவத்தில் ஈடுபட்டாள். ஹனுமன் - சுவர்ச்சலா தேவி திருமணம் என்பது ஆன்மிகத் திருமணம். ஹனுமன் எண்ணம், சொல், செயலால் பிரம்மச்சாரியாகவே இன்றும் வாழ்கிறார். இந்த வரலாறு பராசர சம்ஹிதையில் உள்ளது.

-திருமணம் முற்றும்

தேனி மு.சுப்பிரமணி

இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us