ADDED : ஜூலை 16, 2026 10:46 AM

1960ல் காஞ்சி மஹாபெரியவர் கோல்கட்டாவில் முகாமிட்டிருந்தார். அங்கு வசித்த நரசிம்மன் என்பவர் சுவாமிகளின் பக்தராக இருந்தார். தரிசனத்திற்காக வந்த பக்தர் நரசிம்மனிடம், “இங்கு வேதபாடசாலை நிறுவ விரும்புகிறேன். அந்த பணியை நீயே பொறுப்பேற்று செய்வாயா?” எனக் கேட்டார் மஹாபெரியவர். நரசிம்மனும் சம்மதித்தார். இதன் பின் பாடசாலை அமைக்க பல இடங்களைப் பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட இடம், நரசிம்மனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் பிடித்திருந்தது. அது ஒரு வங்காள தம்பதிக்கு சொந்தமானது. நரசிம்மன் தன் நண்பர் ஒருவருடன் அவர்களின் வீட்டுக்குச் சென்றார். வேத பாடசாலை நிறுவ, அந்த இடம் வேண்டும் என அவர்கள் அந்த தம்பதியிடம் கேட்டனர்.
மஹாபெரியவரின் உத்தரவுப்படி நிறுவப்படும் வேத பாடசாலை என்பதால், அந்த தம்பதிக்கு மிக்க மகிழ்ச்சி. இடத்தைத் தருவதாக உறுதியளித்தனர். பத்திரம் பதிவதற்காக ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களை வரச் சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன நாளில், நண்பர்கள் இருவரும் வங்காள தம்பதி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், திடீரென அவர்கள், தற்போது தங்களால் அந்த இடத்தைத் தர முடியாது என மறுத்தனர். நண்பர்கள் அவர்களின் முந்தைய வாக்குறுதியை நினைவுபடுத்தினர். ஆனால் வருந்தும் விதத்தில் கடுமையான வார்த்தைகளைச் சொல்லி வெளியேற்றினர்.
ஆனாலும் நண்பர்கள் மேலும் சிலமுறை அந்த தம்பதியரை அணுகினர். ஆனால் சம்மதிக்கவில்லை. இதற்குள் காஞ்சிக்கு சென்று விட்ட மஹாபெரியவரைச் சந்தித்து, இடம் கிடைக்கவில்லை என தெரிவிக்க எண்ணி, மறுநாள் காலை 7:00 மணிக்கு சென்னை விமானத்தில் கிளம்ப திட்டமிட்டனர். அப்போது சுவாமிகள் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்தித்து விபரத்தைச் சொன்னார்கள்.
அதைக் கேட்ட அவர், “நீங்கள் மாலை 5:00 மணிக்கு விமானம் மூலம் கோல்கட்டா புறப்படுங்கள். நாளை காலை அந்த வீட்டிற்குச் சென்று பாருங்கள். பிறகு என்ன நடந்தது எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்களும் உடனடியாக புறப்பட்டனர். மறுநாள் காலையில் அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர்.
என்ன ஆச்சரியம்! அந்த தம்பதிகள் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ''நேற்று இரவு எங்கள் கனவில் காளி தோன்றினாள். வேதபாட சாலைக்கே இடம் கொடுக்க வேண்டும் எனச் சொன்னாள். அந்த இடத்தை நாங்கள் உங்களுக்கே தருகிறோம்” என்றனர். மஹாபெரியவருக்காக காளி நடத்திய திருவிளையாடல் என்பதை உணர்ந்து மகிழ்ந்தனர்.
