ADDED : ஜூலை 30, 2026 08:05 AM

கடுவெளி சித்தர்
“மகேஸ்வரா... என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். அண்டத்தைத் தாண்டி பரம் வெளி என்ற வெட்டவெளியை சித்தர்கள் ஏன் நாடுகின்றனர்'' எனக் கேட்டார் நாரதர்.
“இந்த கேள்விக்கு பார்வதியால் மட்டுமே பதில் சொல்ல முடியும்” எனக் கூற அவரும் புன்னகைத்தபடி, “மகேஸ்வரரே! தாங்கள் என்னை பதில் அளிக்க கட்டளையிடக் காரணம், இந்த பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் சக்தி நானா அல்லது நீங்களா” எனக் குறும்புடன் கேட்டார். இருவரையும் வணங்கிய நாரதர், “சிவமும் சக்தியும் இணைந்தால் தான் இந்த உலகம் இயங்கும் என்பதை அறிந்தேன்” என்றார்.
திருவாரூர் மாவட்டம் இடையூரில் ஆண்டி ஒருவன் வசித்தான். சிவலிங்கத்தை வணங்கி பூச்சூடி அலங்கரித்து பூஜை செய்வது அவனுடைய வழக்கம். இதற்காக பூச்செடிகள் வளர்த்தான். பிச்சை உணவை சாப்பிட்டு வாழ்ந்தான். கோயில் மடத்தில் ஓரமாக படுத்துக் கொள்வான்.
ஒருமுறை மழை வளம் குறைந்தது. செடிகள் வாடி பூக்கள் கருகின. குளத்தில் தேங்கி கிடக்கும் நீரை கைகளால் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றினான்.
இதை கவனித்த ஒரு பெரியவர், “தோண்டி வாங்கினால் தண்ணீர் வீணாகாதே” என்றார். அதைக் கேட்டதும், 'தோண்டி எங்கே கிடைக்கும் எனக் கேட்க ''குயவனிடம் தோண்டி வாங்கலாம்'' என்றார்.
அவனும் குயவன் வீட்டிற்குச் சென்று கேட்டான். “ஒரு தோண்டி கால் அணா” எனச் சொல்ல ஆண்டி விழித்தான். காசில்லாமல் ஆண்டி தினமும் குயவன் வீட்டிற்கு போய் கெஞ்சுவதும், குயவன் துரத்துவதும் வழக்கமாக இருந்தது. இப்படியே பத்து மாதம் கடந்தது. ஒரு நாள் குயவன் எதற்காக தோண்டி கேட்கிறாய் எனக் கேட்க, ஆண்டி “ஐயா! நான் சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறேன். அதற்கு பூக்கள் வேண்டும். தண்ணீர் இல்லாததால் பூச்செடிகள் காய்ந்து விட்டன. ஆகையால் பக்கத்திலுள்ள குளத்தில் இருந்து கைகளால் தண்ணீரை எடுத்து ஊற்றுகிறேன். ஒரு பெரியவர் தங்களிடம் தோண்டி வாங்கி தண்ணீர் எடுத்து ஊற்றச் சொன்னார். அதற்காகத்தான் கேட்டேன்” என்றான் ஆண்டி.
மனமிரங்கிய குயவன், “காசு வேண்டாம்” எனச் சொல்லி புதிய தோண்டியை கொடுத்தான்.
தோண்டி கிடைத்த சந்தோஷத்தில் ஆண்டி நந்தவனத்தை அடைந்தான். அருகே உள்ள குளத்திற்கு சென்று தோண்டியில் தண்ணீர் நிரப்பினான். தலையில் வைத்தபடி ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் நடக்க ஆரம்பித்தான். செடிக்கு தண்ணீர் ஊற்ற குனிந்த போது தோண்டி கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் ஆண்டியோ வருத்தமடையவில்லை. அதற்கு நேர்மாறாக வாய்விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினான். தன் அறியாமையை நினைத்து மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். அங்கிருந்த மக்களை நோக்கி,
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனைவேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில்
வாழ்த்திக் கொண்டாடு”
எனப் பாட ஆரம்பித்தான்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே அதை பாதுகாத்து கடவுளை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் பத்து மாதம் தாயின் வயிற்றுக்குள் பாதுகாப்பாக இருந்து வெளியே வந்த உடலை பாதுகாக்க தவறி கண்டபடி அலைந்து திரிந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறோம். அது மட்டுமின்றி கடவுளை அறிய முடியாமல் உடலை அழித்து விடுகிறோம்.
இது எவ்வளவு பெரிய அறியாமை. அந்தப் பாடலின் பொருளை உணர்ந்த மக்கள், அவனது ஞானத்தை உணர்ந்து வணங்கத் தொடங்கினர்.
நாம் எல்லோரும் இந்த உலகத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருக்கிறது. அணு வெடிக்கும் போது எப்படி ஆற்றல் வெளிவருகிறதோ, அதே போல நம் உள்ளிருக்கும் ஆற்றலை வெளியே கொண்டு வந்தால் பரமானந்தம் என்னும் அண்ட பெருவெளியை அடையலாம். அவர் தன் கருத்துக்களை உபதேசங்கள், ஆனந்த களிப்பு, கடுவெளி சித்தர் வாத வைத்தியம், பஞ்ச சாஸ்திர நுால்களாக எழுதினார்.
பிரபஞ்சத்தின் வெளியே இருக்கும் உலகை இவர் கடுவெளி எனக் கூறியதால் இவரை 'கடுவெளி சித்தர்' என மக்கள் வணங்கினர். வேதாரண்யம் சென்ற கடுவெளி சித்தர் தவம் செய்ய ஆரம்பித்தார். சிவபெருமான் தான் உறைந்திருந்த லிங்கத்தை இரண்டாக பிளந்து காட்சியளித்தார். திருவாரூர் கடுவெளியில் சிவலிங்கம் பிளவுபட்ட நிலையில் இன்றும் காட்சியளிக்கிறது.
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமன் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் துாங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆகுமே!
-திருமூலர்
நம் மனம் கல் போல இறுகியிருக்கிறது. அதை இளக்கும் போது மனம் லேசாகும். அதற்கு தவம் செய்ய வேண்டும். மூலாதாரம் உள்ளிட்ட சக்கரங்கள் வாயிலாக தியானம் மூலம் மனதை ஒருநிலை படுத்தும் போது பெருவெளியைக் காணலாம் என்ற கடுவெளி சித்தரின் தியானம், திருமூலரின் கடுவெளி பற்றிய குறிப்புகள் மக்களுக்கு நல்வழி காட்டுகிறது.
மனதில் உள்ள குற்றத்தை நீக்கினால் பெருவெளி கிடைக்கும் என்ற திருமூலரின் பாடல் தத்துவத்தை கடுவெளி சித்தர் ஆழ் தியானமாக அனைவருக்கும் கற்றுக் கொடுத்து முக்தி அடைந்தார்.
பூக்களை தேடித் தேடி சிவனுக்கு பூச்சூடியதால் இவர் முக்தித்தலத்தை சுற்றி கொன்றை, நாகலிங்கம், இலுப்பை, வில்வம், மாவலிங்கம், நொச்சி மரங்கள் இன்றும் பூத்துக் குலுங்குகின்றன. தவமிருந்த போது கடுவெளி சித்தருக்கு சிவலிங்கத்தை பிளந்து சிவன் காட்சியளித்ததால் அந்த ஊர் கடுவெளி எனப்பட்டது. கடுவெளியியில் பிரபஞ்சத்தின் வெளியே ஆனந்தமாக பரவியிருக்கும் சிவசக்தியுடன் ஒளி ரூபமாக காட்சியளிப்பதை அறிந்த மக்கள் கடுவெளி சித்தரை வணங்குகின்றனர்.
“மகேஸ்வரரே! சித்தர்கள் வழிபாட்டில் சிறந்து விளங்கினர். சிவ பக்தியில் சித்தர்களை மிஞ்சியவர்கள் யாருமில்லை. ஆனால் சில சித்தர்கள் கடவுளுக்கு உருவமில்லை எனக் கூறி உருவ வழிபாட்டை எதிர்க்கின்றனரே? மகேஸ்வரர் -மகேஸ்வரி, சுந்தரேஸ்வரர் மீனாட்சி, சிவன் -சக்தி என சிலை வடித்து வணங்கும் மக்களுக்கு குழப்பம் உண்டாகாதா?” எனக் கேட்டார் நாரதர்.
“என்ன நாரதரே! கல்லிலும், மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும், அண்ட வெளியிலும் கலந்து இருக்கும் சிவத்தை ஒரு உருவத்தில் அடைத்து விட முடியுமா? அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப சிவனை வணங்குவதில் என்ன குற்றம் கண்டீர்?” எனக் கூறி கோபமாக நாரதரை பார்த்தார் பார்வதி.
“தாயே! மன்னியுங்கள். சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த கருவூராரும், நவபாஷாணத்தில் முருகன் சிலைவடித்த போகரும் சித்தர்தான். ஆனால் அதே நேரம் நட்ட கல்லும் பேசுமோ என சிலை வழிபாட்டை ஏளனம் செய்த சிவவாக்கியரும் சித்தர்தான். இதனால் மக்கள் குழம்பி விட மாட்டார்களா? அதனால்தான் கேட்டேன்” என்றார் நாரதர். உடனே சிவவாக்கியர் பற்றி சொல்ல ஆரம்பித்தார் பார்வதி.
-விளையாட்டு தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
90030 00250
