ADDED : ஆக 13, 2024 09:17 AM
சிவன்மலை
அலைபேசியில் அரை மணி நேரமா பேசிக்கொண்டே இருந்தான் யுகன். எதையோ கணவரிடம் சொல்ல வந்த தேவந்தி விடாமல் அலைபேசியில் பேசுவதை பார்த்து விட்டு போய் விட்டாள்.
“எந்நேரமும் ஏதாவது உத்தரவு போட்டுட்டே இருந்தா எப்படி சமாளிக்கிறது. நம்மள அடிமைனு நெனச்சிட்டாரா இவரு. ம்... நாம எல்லோரும் சேர்ந்து தான் பூனைக்கு மணி கட்டணும். சரி நாளைக்கு வாங்க பாத்துக்கலாம்” என்றபடி இணைப்பை துண்டித்தான் யுகன்.
“என்னடா யுகா, யாருகிட்ட இவ்வளவு நேரமா சத்தம் போட்டு பேசிட்டு இருக்க?” அவனைக் கவனித்த பாட்டி ஆர்வமாக கேட்டார்.
“ஓ அதுவா பாட்டி, எங்க ஆபிசுக்கு புதுசா வந்த மேனேஜர் புதுசு புதுசா உத்தரவு போடுறார். அதில எதையும் ஏத்துக்க முடியாததா இருக்கு. அதான் நாங்க எல்லாம் கோபத்தில பேசிட்டு இருக்கோம்'' என்றான் யுகன்.
“சிவன்மலை கோயில்ல அப்பப்ப உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருட்கள் மாறுதே, அது போலயா?” எனக் கேட்டார் பாட்டி.
“அங்க உத்தரவு இடுவது கடவுள். இங்க மனுஷன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கே''
“உன் பிரச்னை எனக்கு புரியாதுப்பா. இந்த கோயில்ல பக்தரின் கனவுல கடவுள் உத்தரவு போடுறதா சொல்றாங்க.”
“எனக்கெல்லாம் கனவு என்பது ஏதோ துாங்கி எழுந்த கொஞ்ச நேரம் மட்டும் புகை மூட்டமா தெரியும். அவ்வளவுதான். கொஞ்ச நேரம் கழிச்சு கேட்டா அதுவும் கூட நினைவு இருக்காது. இவங்க எல்லாம் எப்படி சொல்றாங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லு பாட்டி''
“சிவன்மலையில் இருக்கிற முருகன் சக்தி வாய்ந்த தெய்வம். தான் விரும்பும் ஒரு பக்தரின் கனவில கட்டளையிடுவார். குறிப்பிட்ட பொருளை வெச்சு பூஜை செய்ய உத்தர விட்டதும், பக்தரும் அதைக் கோயிலுக்கு கொண்டு வருவார். கோயிலில் அர்ச்சகர் பூ போட்டு பார்த்து உறுதி செய்த பின் பூஜை செய்து மண்டபத்தில்உள்ள உத்தரவு பெட்டிக்குள் பொருளை வைப்பார்கள். அடுத்த பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும் வரை பழைய பொருளே இருக்கும். நடக்கப் போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பு போல இது இருக்கு”
“இது கேள்விப்படாத விஷயமா இருக்கே! சரி இதுவரைக்கும் அப்படி என்ன அங்க வச்சாங்க?”
“கடந்த சில ஆண்டுக்கு முன் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் சில நாளிலேயே மக்களின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி வந்துச்சு. அடுத்து மஞ்சள் வைத்து பூஜை செய்தனர். சும்மா கிடந்த மஞ்சள் அதிகளவுக்கு விற்பனையானது.”
“ஓஹோ!”
“முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவு வந்தது. அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு தாறுமாறா ஏறிடுச்சு. அதே மாதிரி ஒருமுறை 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அதுக்கு பின்பு தான் 10, 50, 100 ரூபாய்க்கு மதிப்பு குறைஞ்சு போச்சு. 500 ரூபாய் சரளமா புழக்கத்தில் இருக்கு''
“சரி பாட்டி தங்கம், வெள்ளின்னு எதுவும் கனவுல வந்ததா?”
“ம், ஒரு சமயம் தங்கத்தை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அடுத்த நாளிலேயே தங்கத்தின் விலை உயர்ந்துச்சு. இது இப்படின்னா இன்னொரு பக்தரோட கனவுல வந்த தேங்காய் வைக்கச் சொல்லி இருக்கார் முருகன். தேங்காய் வைத்து பூஜையும் நடத்தினாங்க. தேங்காய் விலையும் அதிகரிச்சிருக்கு.”
“சரி பாட்டி எனக்கு கனவு வந்தா கூட நான் போய் சொல்லலாமா?”
“ நீ போய் சொன்னாலும் சுவாமி முன் பூ போட்டு பாப்பாங்க. அதுல வெள்ளைப் பூ வந்தா முருகன் கனவுல தோன்றி சொன்னதை ஏத்துக்கிட்டு சிறப்பு பூஜை செய்து பெட்டியில் பொருள வைப்பாங்க. அதுமட்டுமில்லை. பக்தரின் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் தெரிவித்த தேதி என பெட்டியின் கீழே எல்லாத்தையும் எழுதுவாங்க. இதுதான் அங்கு நடைமுறை”
“நடக்கிறத முன்கூட்டியே சொல்லும் இந்த அருள்வாக்கு மெய்சிலிர்க்க வைக்குதே பாட்டி. ஆமா சிவன்மலையில் இருப்பவர் சிவனா... முருகனா...?”
“முருகப்பெருமான் வள்ளியுடன் இருக்காரு”
“அப்ப ஏன் சிவன்மலைனு பெயர் வந்துச்சு?”
“திரிபுரத்தை அழிக்க மேரு மலையை வில்லாக சிவன் பயன்படுத்திய போது அதிலிருந்து சிதறிய ஒரு சிறு பகுதியே சிவன்மலை. இது பார்வதி, அகத்தியர் தவம் செய்த தலம். வள்ளியை மணம் முடித்த முருகன் இங்கு குடி கொண்டார். அது மட்டுமில்ல சித்தரான சிவவாக்கியர் சிவன்மலையில் தங்கி முருகனுக்கு கோயில் கட்டினார். அவர் பெயரிலேயே இந்த மலை சிவன் மலை எனப்பட்டது'
“இதுவும் பெரிய மலையா... பாட்டி?”
“ஆமாம் கண்ணு. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு பக்கத்தில் உள்ள சிவன் மலைக்கு 496 படிகள் இருக்கு. ஓய்வெடுக்க அங்கங்கே மண்டபமும் இருக்கு. சாலை வசதியும் இருக்கு. இங்க முருகனுக்கு தான் முதல் வழிபாடு”
“ஏன் பாட்டி, மலை மேலேயே நிறைய கோயில் இருக்கு?”
“மலை ஏறினா மன இறுக்கம் குறையும். அது மட்டுமில்ல சமதளத்தில் இருக்கும் போது மக்களின் எண்ண அலைகள் நம்மை தாக்கும். ஆனா மலையில் எதிர்மறை எண்ண அலைகள் தாக்காது. நம்முடைய எண்ணங்களுக்கு வலிமை கூடும். மனம் அமைதி பெறும்”
“ஓ! அதனாலதான் சித்தர்கள் மலையைத் தேடி போறாங்களோ?”
“ ஆமா, இங்கும் நிறைய சித்தர்கள் இருக்காங்க. அவர்களை தரிசிக்க நாம புண்ணியம் செஞ்சு இருக்கணும்.”
“அருணகிரிநாதர் இங்கு பாடி இருக்காரா?”
“திருப்புகழ் பாடியிருக்கார். அதோட இங்கே தைப்பூச தேர்திருவிழா விசேஷமா நடக்கும்”
“தேர் திருவிழா நடத்துவது ஏன் பாட்டி?”
“தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் கோயிலுக்குப் போய் கடவுளை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழாவில் கடவுளைக் கண்டுகளிக்க முடியும். தேர்வடத்தைத் தொட்டு பக்தர்கள் இழுக்கும் போது பிரார்த்தனையின் சக்தி மகத்தாக இருக்கும். வேண்டுதல்சீக்கிரம் நிறைவேறும். தேர் இழுப்பதால் கர்ம வினைகள் தீரும் என்கிறார்காஞ்சி மஹாபெரியவர்”
“தேர் இழுக்கறதுல இவ்வளவு விஷயம் இருக்கா பாட்டி... இங்க இருக்கும் உத்தரவு பெட்டிய பார்க்க ஆசையா இருக்கு. ஆனா நீ சொன்னதே நான் மலையேறின மாதிரி ஆயிடுச்சு. பக்கத்தில இருக்கிற கோயிலா பார்த்துச் சொல்லு. ஏற்கனவே உத்தரவு மேல உத்தரவு போட்டுட்டு இருக்கார் மேனேஜர். அடிக்கடி என்னால லீவு எடுக்க முடியாது”
“பக்கத்தில இருக்கும் சிறுவாபுரி பற்றி அடுத்த வாரம் சொல்றேன். மனச போட்டு குழப்பாம இப்ப போய் சாப்பிடு”
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882