தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஒரு நதியின் கதை

ஒரு நதியின் கதை

ஒரு நதியின் கதை


ADDED : ஆக 13, 2024 09:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 09:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை முனிவர் ஒருவர் கங்கை நதிக்கரைக்குச் சென்றார். அப்போது சிலர், ''தாயே! என் பாவத்தை போக்க வேண்டும்'' எனச் சொல்லியபடியே நீராடினர்.

இதைக் கேட்டதும், '' கங்கையில் நீராடினால் இவர்களின் பாவம் என்னைச் சேருமே'' என தயங்கினார் முனிவர்.

அப்போது ''சுவாமி... கங்கையில் நீராட ஏன் தயங்குகிறீர்கள்?'' எனக் கேட்டாள் ஒரு பெண். முனிவர் தன் எண்ணத்தை தெரிவித்தார்.

''சுவாமி! இந்த கங்கை கடலில் கலக்கிறது, எனவே பாவம் எல்லாம் கடலைச் சென்றடையும். நீங்கள் தாராளமாக நீராடலாம்'' என்றாள். உடனே கடலரசனான வருண தேவனை நோக்கி முனிவர் ஜபிக்கவே அவரும் காட்சியளித்தார். ''வருண தேவா...கங்கையில் சேர்ந்த பாவம் எல்லாம் கடலாகிய உன்னை அடைகிறது. அப்படியிருக்க கடலில் நீராடுதல் எப்படி புனிதமாகும்?'' எனக் கேட்டார்.

''முனிவரே! கடலைச் சேர்ந்த பாவம் அங்கேயே தங்குவதில்லை. அவற்றை சூரியன் ஆவியாக்கி உறிஞ்சும் என்பதால் கடல் நீராட ஏற்றது தான்'' என்றார் வருணன். அதன்பின் சூரியனை வரவழைத்த முனிவர், ''சூரியனே! கடலின் பாவத்தை கதிர்களால் ஈர்க்கும் போது உனக்கு பாதிப்பு ஏற்படாதா?' எனக் கேட்டார்.

'' முனிவரே... பாவம் என்னை தீண்ட முடியாது. காரணம் அளவுக்கு மீறிய உஷ்ணம் கொண்டவன் நான். அவை மேகமாக வானத்திலேயே தங்கி விடும்'' என்றார். உடனே முனிவர் மேகத்திடம் விளக்கம் கேட்டார். அது ''முனிவரே... சூரிய ஒளியால் ஈர்க்கப்பட்ட பாவம் எல்லாம் மேகமாகிய என்னில் தங்கினாலும், மழை பொழியும் போது பூமியை வந்தடையும். எனவே பூமாதேவியிடம் கேளுங்கள்'' என்றது. பூமாதேவியை சந்தித்தார். '' முனிவரே! மேகம் அளித்த பாவத்தை நான் ஏற்பதில்லை. அவை மரம், செடிகளின் வேரால் உறிஞ்சிப்பட்டு காய், கனிகளாக மாறும். அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் உண்ணும் போது மீண்டும் அதற்குரியவர்களை சேரும்'' என்றாள். உண்மையறிந்த முனிவர் திடுக்கிட்டார்.

''முனிவரே! நீங்கள் கங்கையைச் சந்தித்தால் உண்மை விளங்கும்'' என்றாள் பூமாதேவி.

மீண்டும் கங்கைக்கரையை அடைந்த முனிவர், ''தாயே! மனிதர்கள் தொடர்ந்து நீராடுவதால், தங்களுக்கு பாவச்சுமை ஏற்படாதா?'' எனக் கேட்டார். ''ஒருமுறை எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. சிவபெருமானிடம் தெரிவித்த போது, ''கங்கா! பாவிகள் மட்டும் உன்னிடம் நீராடுவதில்லை. முற்றும் துறந்த ஞானிகள், துறவிகளும் பூமியில் வாழ்கிறார்கள். அவர்கள் நீராடும் போது பாவச்சுமை தீரும். அவர்களின் திருவடி பட்டால் கொடிய பாவமும் பறந்தோடும்'' என்றார்.

''முனிவரே... உம் சந்தேகம் தீர்ந்ததா?'' எனக் கேட்டாள் கங்கை. உண்மையை உணர்ந்த முனிவரும் நீராட கங்கைக்குள் இறங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us