ADDED : செப் 05, 2024 01:04 PM

மருதமலை
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், மதுரை சோமுவின் குரலில் 'மருதமலை மாமணியே முருகையா' என்னும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலை கேட்க கேட்க மனதில் உற்சாகம் ஊற்றெடுத்தது.
“பாட்டி... இந்த பாட்டை கேட்கும் போது ஒரு மனதிடம் வருதே”
“மருதமலைக்கு போனால் நிம்மதியும் கிடைக்கும்”
“ஏன் பாட்டி முருகன் எப்பவும் மலை மேலேயே இருக்காரு” அமுதன் கேட்டான்.
“ஓ அதுவா! தன்னை வழிபடுபவரை மேலான நிலைக்கு உயர்த்துபவர் முருகன். அதனால் தான் உயரமான மலையில் இருக்கிறார். மருதமலை கடல் மட்டத்தில் இருந்து 741மீ உயரத்துல இருக்கு”
“மருதமலை எங்க இருக்கு”
“மருதமலை கோயில் கோயம்புத்துாரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் குன்றின் மீதுள்ளது. கொங்கு சிற்றரசர்கள், விஜயநகர மன்னர்களின் திருப்பணிகளால் கோயில் உருவானது. மருத மரம் தலவிருட்சம். தீர்த்தம் மருது சுனை. இதுவே அபிஷேகத்திற்கும் பயன்படுகிறது. மலைக்குச் செல்ல 837 படிகள் ஏற வேண்டும்''
“முருகன பாக்கணும்னா படி ஏறியே ஆகணுமா... பாட்டி. வயசானவங்க சிரமப்படுவாங்களே...''
“அதுக்கு தான் உடம்பு நல்லா இருக்கும் போதே கோயில்களுக்கு போய் வரணும். மேலும் ஆன்மிக விஷயங்களை நம் தலைமுறையும் தெரிஞ்சிக்கணும்”
“ஆமாம் பாட்டி... உண்மை தான்”
“ சரி பாட்டி, மருதமலையில் என்ன சிறப்புன்னு சொல்லவே இல்லையே?”
“ மருதமலை ஒரு சோமாஸ்கந்த தலம் தெரியுமா?”
“சோமாஸ்கந்த தலமா... புரியலையே”
“இதோ அப்பா அம்மான்னு உங்க இருவருக்கும் இடையில் அமுதன் உட்கார்ந்து இருக்கானே... இதே அமைப்பில் இருந்தா அது சோமாஸ்கந்தர் அமைப்பு. அதாவது சிவன், அம்மனுக்கு நடுவில் முருகன் இருப்பது தான் சோமாஸ்கந்த அமைப்பு. மருதமலையிலும் சிவன் அம்மனுக்கு நடுவில்தான் முருகன் காட்சி தருகிறார். இது முருகன் கோயில் என்றாலும் வலதுபுறம் பட்டீஸ்வரர், இடதுபுறம் மரகதாம்பிகை சன்னதிகள் உள்ளன. அதனால் இது சோமாஸ்கந்த அமைப்புள்ள கோயில். அதோட இங்கு தான்தோன்றி விநாயகரும் இருக்கார்”
“ஓ... இந்த விநாயகர் தானா தோன்றியவரா?”
“சரியாச் சொன்ன யுகா, மருதமலை அடிவாரத்தில் இந்த விநாயகர் சுயம்புவா தோன்றினார். அதனாலதான் இவருக்கு இந்த பெயர். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடம்பு இல்லை. அத்துடன் மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி தும்பிக்கையை நீட்டி இருப்பார். இந்த சுயம்பு விநாயகருக்கு அருகில் மற்றொரு விநாயகரும் இருக்கு. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின் அவருக்கு பூஜை நடக்கும். முருகனுக்கு உகந்த கார்த்திகை, சஷ்டி, விசாகம், அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை விநாயகருக்கும் நடக்கிறது. இதனால் 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என அழைக்கிறார்கள்”
“குடும்பத்தோட முருகன் மருதமலையில் இருக்கார் போல. நாமும் குடும்பத்தோட போவோம்'' எனச் சிரித்தான் யுகன்.
“குடும்பம் தான் நம்ம நாட்டின் பலமே”
“நீ நல்ல குடும்ப (இ)ஸ்திரி பாட்டி”
“கிண்டல் பண்றியா. ஒழுங்கா கேளு”
யுவனும், தேவந்தியும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.
“பழமையான கோயில்களில் சிவன் சுயம்புலிங்கமா இருப்பார். ஆனால் இந்த கோயில்ல முருகன் சுயம்பு மூர்த்தியா இருக்கார். வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருக்காங்க. இக்கோயில் தலவரலாறை எழுதியவர் கச்சியப்ப முனிவர். மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதய்யன் என்றும் பெயருண்டு. இங்கு முருகன் குதிரை மீது ஏறி வருவார் தெரியுமா? அமுதா... நீ குதிரையை பாத்திருக்கியா?”
'' பார்த்திருக்கேன் பாட்டி” என மழலை மொழியில் சொன்னான் அமுதன்.
“ரெண்டு மாசத்துக்கு முன் பூங்காவுக்கு போனோம். அங்க குதிரை மீதேறி சவாரி போனான். ஆமா முருகனுக்கு வாகனம் மயில் தானே? அப்புறம் எப்படி குதிரை வந்தது?” என கேட்டாள் தேவந்தி.
“நீ கூட நல்லா கவனிக்கிறியே! மாணவர்கள் சந்தேகம் கேட்டா ஆசிரியருக்கு ரொம்ப பிடிக்கும். ஆர்வமா எடுத்துச் சொல்வாங்க. அந்த மாதிரி இருக்கு எனக்கும். முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும் கோயில் திருவிழாவில குதிரையில் எழுந்தருள செய்வதற்கு காரணம் இருக்கு. முற்காலத்தில் இக்கோயிலில் திருடர்கள் கொள்ளை அடிச்சுட்டு தப்பிச்சிட்டாங்க. குதிரை மீது ஏறிச் சென்ற முருகன் அவர்களை மறித்து பொருட்களை மீண்டும் கைப்பற்றினார். அத்துடன் திருடர்களை பாறையாக மாற்றினார். குதிரையில் வேகமாகச் சென்ற போது அதன் கால் பட்ட தடம் இன்றும் இருக்கு. இதை 'குதிரை குளம்பு கல்' என்கிறார்கள். இந்த மண்டபத்தில் குதிரை மீதுள்ள முருகனின் சிற்பம் இருக்கு”
“ கலியுகத்தில் சித்தர் வழிபாடு சிறப்புன்னு சொன்னியே பாட்டி. மருதமலையில் சித்தர் இருக்காரா?”
“பழநி போகர் போல மருதமலைக்கு பாம்பாட்டிச் சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவர். மலைப்பாறைக்கு நடுவிலுள்ள குகையில் சன்னதி உள்ளது. அவரது வலக்கையில் மகுடி, இடக்கையில் தடியும் இருக்கு. அருகில் சிவலிங்கம், நாகர் சிலைகள் உள்ளன. பாம்புகளை பிடிப்பது, விஷத்தை அழிப்பது, பாம்பு கடிக்கு மருந்து தயாரிப்பது என இருந்ததால் பாம்பு வைத்தியர் என இவரை அழைத்தனர். ஒருமுறை மருதமலைக்கு வந்த சட்டைமுனி, 'உடலில் உள்ள பாம்பை (குண்டலினி சக்தி) கண்டுபிடிப்பதே பிறப்பின் நோக்கம்' என உபதேசம் செய்தார்.
அதைக் கேட்ட பாம்பாட்டி சித்தர் ஞானம் பெற்று மருதமலையில் தியானத்தில் மூழ்கவே முருகப்பெருமான் காட்சி தந்தார். முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை நடக்கிறது. இங்கு தரப்படும் விபூதி நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. இவரை தரிசித்தால் விஷபயம், நாகதோஷம் விலகும்''
“சித்தரின் அருள் கிடைத்தது போல நிறைவாக இருக்கு பாட்டி''
“தைப்பூசத்தன்று பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்றாங்க. மருத மரத்தில் திருமணம், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுறாங்க”
“சரி... அருணகிரிநாதர் பாடியிருக்காரா”
“மருதமலை முருகனைப் பற்றிய திருப்புகழ் பாடல்களில் உ.வே.சா, தணிகை மணிக்கும் கிடைத்த ஓலைச்சுவடியின் அடிப்படையில் பாடபேதம் ஏற்பட்டது. 'அவனியு(ம்) முழுதும் உடையோனே' என ஒரு சுவடியிலும், மற்றொன்றில் 'அணிசெயு(ம்) மருத மலையோனே' என்றும் வரிகள் இருந்தன.”
'மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க, ஈசன் மகனோடு மனம் விட்டு பேசி பாருங்கன்னு' என்ற பாடலைத் தான் கேட்டிருக்கேன் பாட்டி''
“ஆமா அந்தக் காலத்தில இது பிரபலமாக இருந்துச்சு”
“வாராவாரம் முருகன் கோயிலா சொல்லிகிட்டே போற. ஆனா என்னால தான் உங்களை கூட்டிட்டு அங்கு போக முடியல. அது மனசுக்கு கஷ்டமா இருக்கு”
“என்னப்பா இப்படி சொல்ற... முருகனுடைய பெருமையை கேக்குறதே நல்ல விஷயம் தானே. நீ கேட்டபடி இருந்தால் போதும். முருகன் அருளால சீக்கிரம் கோயிலைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் யுகா”
“அடுத்த வாரம் எந்த கோயில் பாட்டி?”
“வள்ளிமலை, சிவன்மலை, சென்னிமலை, மருதமலைன்னு நிறைய மலைகள் பார்த்துட்டோம். அடுத்த வாரம் தரை மீதுள்ள முருகனை பார்ப்போமா?”
“நல்லதா போச்சு” என சொல்லியபடி அவரவர் வேலையை பார்க்க புறப்பட்டனர். 'வேல் வேல் வெற்றி வேல்' என பாட்டியும் முருகனுக்கு நன்றியைச் சொன்னார்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882