ADDED : செப் 05, 2024 02:09 PM

உள்ளது உள்ளபடி...
ஒருநாள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் ராமசாமி தாத்தாவிடம் ஓடி வந்தான் கந்தன். '' நாளை கிருஷ்ணரின் பிறந்த நாள் என்பதால் எனக்கு விடுமுறை. அவதாரம் என்றால் என்ன... பகவான் கிருஷ்ணர் எதற்காக பூமியில் பிறந்தார்?''எனக் கேட்டான்.
''எப்போது தர்மம் குறைந்து அதர்மம் தலை துாக்குகிறதோ அப்போதெல்லாம் பூமியில் நான் அவதரிப்பேன். இப்போதெல்லாம் கெட்ட விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கு. உலகத்துல எந்த நல்லதும் நடக்கவே இல்லை என்ற நிலை ஏற்பட்டால் அந்த நேரத்தில் கடவுள் அவதரிப்பார். அதைத் தான் அவதாரம் என்கிறோம். இந்த விஷயத்தை புரிஞ்சுகிட்டா பிறவி என்பதே இல்லாமல் போகும் என்கிறார் கிருஷ்ணர்.
பகவத் கீதையின் 4ம் அத்தியாயம் 9வது ஸ்லோகத்தில்
ஜந்ம கர்ம ச மே தி³வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:|
த்யக்த்வா தே³ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ5ர்ஜுந ||4-9||
அர்ஜூனா... தெய்வத்தன்மை கொண்ட என் பிறப்பு மற்றும் செயல்பாடுகளை உள்ளபடியே உணர்ந்த ஞானிகள் இந்த மண்ணில் உடலைத் துறந்த பின்னர் மீண்டும் பிறவி எடுக்க மாட்டார்கள். என்னையே முடிவில் வந்தடைவர்.
இதை திருவள்ளுவரும், 358 வது குறளில்,
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறவி என்னும் துன்பத்திற்கு மூலகாரணம் அறியாமை. அதை நீக்கி விட்டு, முக்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான பரம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. பிறப்பு வேண்டாம் என விரும்புபவர்கள் மெய்ப்பொருளான கடவுளை மனதில் உணர வேண்டும். பகவானுடைய அவதாரம், செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு இன்பம் காண வேண்டும். கந்தா... நீயும் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அவரை உள்ளபடியே உணர்ந்து கொள்'' என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554