
காஞ்சி மடத்தில் நடக்கும் பூஜைகளில் விசேஷமானது சந்திரமவுலீஸ்வரர் பூஜை. அப்போது பூஜையில் மட்டும் மஹாபெரியவர் லயித்திருப்பார்.
ஒருநாள் சந்திரமவுலீஸ்வரர் பூஜையின் போது கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது முன்புறத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், 'ஐயோ... என் தங்கச் சங்கிலியைக் காணலையே' என அலறினாள்.
'பூஜையின் போது இப்படி சத்தம் போடக் கூடாது... எல்லாவற்றையும் மஹாபெரியவா பார்த்துக் கொள்வார். பேசாம பூஜையைப் பாருங்க' என மற்றவர்கள் சொல்ல கூட்டம் அமைதியானது. பூஜை தடங்கல் இன்றி முடிந்தது. அதன்பின் மஹாபெரியவர் தீர்த்தம் வழங்கத் தொடங்கினார். வரிசையில் நின்றிருந்த ஒரு பெண் கையை நீட்டிய போது, தீர்த்தம் தராமல் அருகில் நிற்கச் சொல்லி ஜாடை காட்டினார். அவரும் ஓரமாக நின்றார்.
வரிசையில் வந்தவர்களுக்குத் தீர்த்தம் கொடுத்தார். கடைசியாக வந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தார். அவர் தான் தங்கச் சங்கிலி காணவில்லை என அலறியவர். அவரையும் காத்திருக்கச் சொன்னார்.
ஏற்கனவே நிற்கச் சொன்ன பெண்ணிடம், ''சங்கிலியை குடுத்துடு... இது மாதிரி தப்பை இனி செய்யாதே'' என சன்னமான குரலில் சொன்னார்.
அவ்வளவுதான்... திருடிய பெண்ணுக்குத் துாக்கி வாரிப் போட்டது. 'இந்த மகானின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது' என்பதை உணர்ந்தார். மறைத்து வைத்திருந்த சங்கிலியை உரிய பெண்ணிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டார்.
சங்கிலி கிடைத்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் அவள் நன்றி சொன்ன போது, '' உன் உடைமைகளை நீ தான் பத்திரமாகப் பார்த்துக்கணும்'' என அறிவுரை கூறினார் மஹாபெரியவர்.பூஜை நேரத்தில் மஹாபெரியவர் அக்கம்பக்கம் திரும்ப மாட்டார். அவருக்கு பூஜை மட்டுமே முக்கியம். ஆனாலும் சங்கிலியைத் திருடியவர் இவர் தான்... தொலைத்தவர் இவர் தான் என எப்படி அவருக்குத் தெரிந்தது என யாருக்கும் புரியவில்லை.
எல்லாம் மகானின் ஞான திருஷ்டி என்பதைத் தவிர வேறென்ன?
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com