ADDED : செப் 12, 2024 04:12 PM

தாயாக வேண்டாம்
“நான் அட்வகேட் ஷிவானி”என் முன் அமர்ந்திருந்தவள் அழகாக இருந்தாள். வயது 35. முகத்தில் அறிவுக்களை. ஷிவானியின் கணவர் வருமான வரித்துறையில் துணை ஆணையராக இருக்கிறார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
“எங்களுக்குக் கல்யாணமாகி எட்டு வருஷம் ஆச்சு. குழந்தை இல்லை. மெடிக்கல் செக்கப் செய்தோம். ரெண்டு பேர்கிட்டயும் பிரச்னை இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. கடவுளை வேண்டிக்கங்கன்னு சொன்னாரு.
“அன்னிலருந்து பச்சைப்புடவைக்காரியோட காலப் பிடிச்சிக் கதறிக்கிட்டிருக்கேன். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கோயிலுக்குப் போறேன். மாசம் ரெண்டு கேசாவது ஏழைகளுக்காக இலவசமா வாதாடறேன். இதுக்குமேல நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். எப்படியாவது நான் தாயாகணும், இல்லாட்டி செத்திருவேன்.”அவளைச் சமாதானப்படுத்தி காபி வாங்கிக் கொடுத்தேன்.
“பச்சைப்புடவைக்காரி என் விஷயத்துல ஏன் கல்மனசா இருக்கான்னு தெரியல சார்”
“பிரார்த்திக்கிறேன். ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்”என்றேன்.
“வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போயிட்டு பாக்க வருவேன். நீங்க சொல்றதுலதான் என் வாழ்வே இருக்கு”
ஷிவானிக்குக் குழந்தை பிறக்காவிட்டால் விபரீதமாக முடிவெடுத்து விடுவாளோ? யாருக்காகவும் குறிப்பாக இது வேண்டும் என பிரார்த்தனை செய்யக்கூடாது என்ற என் விரதத்தை மீறி ஷிவானி தாயாக வேண்டும் என பிரார்த்தித்தேன். வியாழக் கிழமை மதிய உணவைத் தவிர்த்து மாலையில் கோயிலுக்கு நடந்து சென்றேன்.
ஒரு இடத்தில் சாலையைக் கடக்க நின்ற போது பக்கத்தில் ஒரு பிச்சைக்காரி தன்னிடம் இருந்த கொய்யாப்பழத்தை கொடுத்தாள். முகம் சுளித்தேன்.“தேவர்களும் முனிவர்களும் என் பிரசாதத்திற்காகக் காத்திருக்கும்போது உன்னிடம் வந்து கொடுத்தேன் பார்!”
அந்தப் பிச்சைக்காரி இடும் பிச்சையில்தான் பிரபஞ்சமே வாழ்கிறது என்பதை உணர்ந்து காலில் விழுந்தேன். பழத்தைப் பெற்றுக்கொண்டேன். இருவரும் சாலையைக் கடந்து சென்றோம்.
“ஷிவானி மனமுருகிப் பிரார்த்தித்தும் அவள் கேட்ட வரத்தைத் தர மறுக்கிறீர்களே!”
“அவள் மனமுருகிப் பிரார்த்தித்ததால்தான் குழந்தை பாக்கியத்தைத் தரவில்லை”“புரியவில்லையே!”
“ஷிவானியின் கர்மக் கணக்கு சரியில்லை. அவளுடைய தந்தை வழி மூதாதையர் ஒருவர் மனநலம் குன்றியவராக இருந்தார். அந்த மரபணு அவளிடம் இருக்கிறது. இந்த நிலையில் அவளுக்குக் குழந்தை பிறந்தால் மன வளர்ச்சியில்லாத குழந்தையாகத்தான் வளரும். அவர் கர்மக் கணக்கின்படி அது தன் 15வது வயதில் இறந்துவிடும். அந்த துக்கத்தில் இருந்து ஷிவானியாலும் அவள் கணவராலும் மீண்டு வரவே முடியாது. அதன்பின் அவர்கள் வாழ்க்கை அஸ்தமித்துவிடும். இதெல்லாம் நடந்தேறியிருக்க வேண்டும். ஷிவானி ஏழைக்காக இலவசமாக வாதாடிய அந்தக் கருணையினால் அந்தச் சோகம் நடக்காதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாயாக முடியவில்லையே என அவள் தவிக்கிறாள். அவள் தாயாகக் கூடாது என நான் நினைக்கிறேன்.
“இதை நீ பூடகமாக அவளிடம் சொல்ல வேண்டும். நான் சொன்னது தேவ ரகசியம். அது அவளுக்குத் தெரியக் கூடாது. அவளுக்குக் குழந்தை பிறக்காமல் இருப்பது நல்லது என நீ புரிய வைக்க வேண்டும்”
“நான் எப்படிச் செய்வேன், தாயே? நீங்களே என் மனதில் எண்ணமாகவும் நாவில் சொற்களாகவும் மலர வேண்டும்”
ஒரு சிரிப்புடன் மறைந்தாள் சிங்காரவல்லி.வியாழக்கிழமை இரவு சரியாகத் துாங்கவில்லை. ஷிவானியிடம் விஷயத்தை எப்படிச் சொல்லப் போகிறேன்?
வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு ஷிவானி வந்தாள். முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தேன்.
“ஷிவானி, நீங்க புத்திசாலின்னு பாத்தாலே தெரியுது”
“என்னை ஐஸ் வைக்க வேண்டாம். விஷயத்துக்கு வாங்க. நான் தாயாக முடியுமா முடியாதா?”ஷிவானியின் குரலில் இருந்த எரிச்சல் என்னைச் சுட்டது.
“எப்படிச் சொல்றதுன்னு தெரியல. எனக்குத் தெரிஞ்ச குடும்பத்துல நடந்ததச் சொல்றேன். பச்சைப்புடவைக்காரி உங்களுக்கு ஏன் குழந்தையக் கொடுக்கலேன்னு அதுலருந்து நீங்க புரிஞ்சிக்கணும்”
“குழந்தையில்லேன்னா தற்கொலை செஞ்சிக்குவேன்”
“அது உங்க இஷ்டம். அப்படி செஞ்சிக்கிட்டா திருப்பி பிறந்து வந்து இதே சோகத்த இன்னொரு ஜென்மம் அனுபவிக்கணும். இது பச்சைப்புடவைக்காரி எனக்குச் சொல்லிய கர்ம விதி”ஷிவானி அடங்கினாள். நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு தச்சு வேலை செஞ்சாரு. மனைவி, மகன், மகள்னு அழகான குடும்பம். அமைதியான நீரோடை போல அழகாப் போய்க்கிட்டிருந்தது. திடீர்னு அவருக்குப் பணத்தாசை வந்திருச்சி. கோடிக்கணக்குல சம்பாதிக்கணும். பெரிய வீடு கட்டணும். கப்பல் மாதிரி கார்ல போகணும்னு கனவு காண ஆரம்பிச்சாரு. அதுக்காக யாகம் எல்லாம் செஞ்சாரு. அவர் வாங்கின லாட்டரி டிக்கெட்டுக்கு பத்து கோடி பரிசு கிடைச்சது.
“அவர் நெனச்ச மாதிரி பெரிய வீடு, கப்பல் மாதிரி கார் வாங்கினாரு. ஆனா சந்தோஷம் கொஞ்ச நாள்தான். சொந்தக்காரங்க பணம் வேணும்னு அவர அரிக்க ஆரம்பிச்சாங்க. கையில இருந்த பணம் கரைஞ்சவுடன இன்னும் நெறையச் சம்பாதிக்கணும்னு ஆசை வந்தது. குறுக்கு வழியில போய் போலீஸ்ல மாட்டிக்கிட்டாரு. ஜெயில்ல போட்டுட்டாங்க. குடும்பம் சின்னாபின்னமாயிருச்சி. அவரைப் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க ஷிவானி?”
“அந்தாளுக்கு அறிவே கிடையாது. பச்சைப்புடவைக்காரி அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையக் கொடுத்தா. கையில உள்ள தொழில் வச்சிக்கிட்டு திருப்தியா வாழ்ந்திருக்கலாம். இல்லாததுக்கு ஆசைப்பட்டாரு, இருக்கறதும் போயிருச்சி”
“கடைசில சொன்னத திரும்ப சொல்லுங்க”
“இல்லாததுக்கு ஆசைப்பட்டாரு, இருக்கறதும் போயிருச்சி”
“அதுதான். அது அவருக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும் ஷிவானி”ஷிவானியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. பின் பெரிதாக அழத் தொடங்கினாள். அவளிடம் தண்ணீர் கிளாசை நகர்த்தினேன். ஒரே மடக்கில் தண்ணீரைக் குடித்துவிட்டு என்னைப் பார்த்தாள்.
“பச்சைப்புடவைக்காரி கல்மனசுக்காரியா இருக்கறதுனாலதான் நான் தாயாக முடியலேன்னு புலம்பினீங்க, ஞாபகம் இருக்கா? அவளுக்கு இளகிய மனசு இருக்கறதுனாலதான் அவ உங்களுக்குக் குழந்தையக் கொடுக்கல. இதை புரிஞ்சிக்கங்க”
“புரிஞ்சது சார். ஆனா என் வாழ்க்கையே வெறுமையா போயிட்ட மாதிரி இருக்கு. நான் என்னதான் செய்யறது?”
“ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாத நீங்க... ஓராயிரம் குழந்தைகளுக்குத் தாயா இருக்கப் போறீங்க. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக பெரிய இயக்கத்த ஆரம்பிக்கப் போறீங்க. அவங்க கூடிய மட்டுல இயல்பான வாழ்க்கை வாழ வழிகாட்டப் போறீங்க. எத்தனையோ குடும்பத்தில் விளக்கேத்தி வைக்கப்போறீங்க. அன்பு காட்டத்தான் நீங்க பிறந்திருக்கீங்க ஷிவானி”
ஷிவானி இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள். என் முன்னால் இருந்த தாயின் படத்தைப் பார்த்தேன். அவள் மனம் குளிர்ந்துவிட்டது என்பதை அவள் புன்னகையே எனக்கு உணர்த்தியது.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com