sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 13

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 13

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 13

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 13


ADDED : செப் 12, 2024 04:14 PM

Google News

ADDED : செப் 12, 2024 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரக்கோட்டம்

அலுவலகத்தில் இருந்து வந்ததும் பாட்டியை தேடினான் பேரன் யுகன். வீடு முழுவதும் தேடி விட்டு மனைவியான தேவந்தியிடம் கேட்ட போது, “பக்கத்து வீட்டுக்கு போயிருக்காங்க” என்றாள்.

“எங்கே... அஞ்சலை அக்கா வீட்டுக்கா?”

“ஆமா... ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. மதியம் இங்க வந்தாங்க. கையோட கூட்டிட்டு போனாங்க”

“மதியம் போனவங்க இன்னுமா வரல?”

“ஏங்க... அவங்க என்ன சின்ன குழந்தையா? நாலு அடி எடுத்து வெச்சா பக்கத்து வீடு. வீட்டுக்குள்ளேயே இருக்க பாட்டிக்கு ரொம்ப சிரமமா இருக்கு. உங்களையும் என்னையும் எவ்வளவு நேரம் தான் பார்ப்பாங்க. இருந்துட்டு வரட்டுமே'' என்றாள் தேவந்தி. அவள் சொல்லி முடிப்பதற்குள் பாட்டி வீட்டுக்குள் வந்தார்.

“பாட்டி... உனக்கு நுாறு ஆயுசு. இப்பதான் கேட்டேன். ஆமா ஏன் உன் முகம் வாடியிருக்கு. காபி குடிச்சியா?”

“ஆச்சு. என்னமோ அஞ்சலை குடும்ப நிலவரத்தை சொல்லி கஷ்டப்பட்டுச்சு… பாவம்”

“ஆமா! அஞ்சலை அக்கா வாழ்க்கையில விதி ரொம்ப விளையாடிடுச்சு. பணமிருந்தும் வேறு விதமான சோதனைகள் அவங்களுக்கு. சரி நீ என்ன ஆறுதல் சொன்ன?”“ஒருமுறை காஞ்சி குமரக்கோட்டம் போயிட்டு வான்னு சொன்னேன். எல்லா கஷ்டங்களையும் போக்கி நன்மை தரும் கோயில் குமரக்கோட்டம்”

“சென்னைக்கு பக்கத்துல இருக்குற காஞ்சிபுரம் தானே?”

“ஆமா, கோயில்களுக்கு புகழ் பெற்ற ஊரு. நகரேஷு காஞ்சின்னு அதை சொல்வாங்க. இதற்கு நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று அர்த்தம். அங்கு கோயில் இல்லாத தெருவே இல்லை. அந்தளவுக்கு எங்க திரும்பினாலும் கோயில்தான். சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும் இருக்கு. சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி என்று சொல்ற வழக்கம் உண்டு. முக்கியமா சக்தி பீடங்களுக்கு எல்லாம் தலைமை பீடமான காஞ்சி காமாட்சி கோலோச்சும் ஊர் அது. இத்தனை பெருமை கொண்ட இங்கு முருகனுக்கு குமரக்கோட்டம் கோயில் இருக்கு. பிரம்மசாஸ்தாவா அருள்புரிகிறார் முருகன்”

“ஓ... முருகனுக்கு இந்த கோயில்ல பிரம்மசாஸ்தான்னு பெயரா?”

“இல்ல ஒரு சமயம் படைப்பில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க நினைத்தார் பிரம்மா. அதற்காக சிவனிடம் ஆலோசனை செய்ய கயிலைக்கு வந்தார். அவசர வேலை என்பதால், முருகன் இருப்பதை கவனிக்காமல் பிரம்மா உள்ளே சென்றார். திருவிளையாடல் நடத்த விருப்பம் கொண்ட முருகன், திரும்பி வரும் வழியில் பிரம்மாவை மறித்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் கேட்டார். அவரோ விழித்தார். சுட்டிக் குழந்தையான முருகன் அவரது தலையில் குட்டி சிறையில் அடைத்தார். அது மட்டுமா... பிரம்மாவைப் போல ருத்ராட்ச மாலை, கமண்டலம் ஏந்தி பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலில் ஈடுபட்டார். அந்த கோலத்தில் தான் குமரக்கோட்டத்தில் இருக்கிறார்''

பாட்டிக்கும் யுகனுக்கும் சுண்டல் கொண்டு வந்து கொடுத்தாள் தேவந்தி. “சுண்டல் சூடா இருக்கு. நீங்க சாப்பிடுங்க. குமரக்கோட்டம் வரலாறை சொல்லிட்டு அப்புறமா சாப்பிடுறேன். இந்த கோயிலில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்ற அர்ச்சகர் இருந்தார். அவரின் கனவில் தோன்றிய முருகன், 'எம் வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுக' என்று சொல்லி 'திகடச் சக்கரம் செம்முகம்' என பாடல் அடி(வரி) எடுத்துக் கொடுத்தார். சிவாச்சாரியாரும் கந்தபுராணம் எழுத தொடங்கினார். தினமும் 100 பாடல்களை எழுதி கருவறையில் வைத்து விடுவார். மறுநாள் கருவறை திறக்கும் போது பாடல்களை முருகப்பெருமான் திருத்தம் செய்திருப்பார். என்ன ஆச்சரியம் பாரேன் யுகா! இப்படி ஒரு லட்சம் பாடல்கள் அடங்கிய கந்தபுராணத்தை திருத்தி இருக்கிறார்”

“அம்மாடி... ஒரு லட்சமா”

“அட, இதுக்கே மலைச்சா எப்படி? புலவர்களுக்கு கந்தபுராணத்தில் சந்தேகம் ஏற்பட்ட போது இளைஞன் வடிவில் தோன்றி முருகப்பெருமான் தீர்த்து வைத்தார். இங்கு படைப்புத் தொழில் செய்ததால் வழிபடுவோரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அதனாலதான் அஞ்சலையை குமரகோட்டத்தை தரிசனம் செய்யச் சொல்லிட்டு வந்தேன்”

“படைப்புக் கடவுளான பிரம்ம சாஸ்தா கோலம் பற்றி சொல்லு பாட்டி?”

“இடுப்பில் மான் தோலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் முருகன் உடுத்தியிருப்பார். கீழ் வலதுகை அபயம் அளித்தபடி இருக்கும். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் தாங்கியபடி நின்ற கோலத்தில் இருக்கிறார். அத்துடன் மாமாவும் மருமகனோட ஒன்னாவே இருக்காங்க”

“யாரைச் சொல்ற பாட்டி”

“தாய்மாமா மகாவிஷ்ணு, மருமகன் நம்ம முருகன். இங்கு 'உருகும் உள்ளப் பெருமாள்' என்னும் பெயரில் மகாவிஷ்ணு தனி சன்னதியில் இருக்கார். ஒருமுறை பிரளயம் வந்து உலகம் அழிந்தது. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்தபடி மார்க்கண்டேயர் காஞ்சிபுரத்திற்கு வந்தார். உலகமே அழிஞ்சாலும் அழியாத ஊர் காஞ்சிபுரம். இங்குள்ள ஏகாம்பரநாதரை வழிபட்டு இங்கு தங்கினார். இதையறிந்த மகாவிஷ்ணுவும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரை வழிபட்டார். பின்பு குமரக்கோட்டத்தில் தன் மருமகன் முருகனுடன் 'உருகும் உள்ளத்தான்' என்னும் பெயரில் கோயில் கொண்டார்”

“இந்த கோயிலுக்கு திருப்புகழ் இருக்கா பாட்டி?”

“சிறப்பான இந்தக் கோயிலை அருணகிரிநாதர் விட்டு வைப்பாரா? அவர் மட்டுமின்றி வள்ளலாரும் பாடியிருக்கார். ஒருமுறை பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தார். குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் எங்கோ போயிட்டார். சிறுவனாக தோன்றி வழி காட்டினார் முருகன். ஞானியின் வடிவில் சுவாமி இருப்பதால் நிம்மதி, ஞானம், தெளிவு பெற வேண்டுவோர் இங்கு தியானம் செய்தால் போதும். தெளிந்த ஞானம் கிடைக்கும்”

''வேறு என்ன கிடைக்கும் பாட்டி?”

“சொல்றேன். பிரணவத்தின் பொருளை முருகனிடம் மண்டியிட்டு சிவன் கேட்டார் இல்லையா... என்ன தான் இது திருவிளையாடல் என்றாலும் குருநாதரின் அம்சமான சிவனை சீடனாக ஏற்றதால் முருகனுக்கு தோஷம் ஏற்பட்டது. இதற்காக காஞ்சிபுரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரை சேனாபதீஸ்வரர் எனச் சொல்வாங்க. குமரக்கோட்ட முருகன் முக்தி தரும் மூர்த்தியாக இருக்கார். இங்குள்ள அனந்த சுப்பிரமணியர் என்னும் உற்ஸவர் முருகனுக்கு, ஐந்து தலை நாகம் குடைபிடித்தபடி இருக்கும். இவரை வழிபட்டால் நாகதோஷம் தீரும். அது போல வள்ளி, தெய்வானைக்கும் மூன்று தலை நாகம் குடை பிடித்திருக்கும்”

“அடேயப்பா! அடுக்கிட்டே போறியே பாட்டி”

“ஆமா யுகா... எங்கப்பன் முருகன பத்தி சொல்ல நேரம் போதாது. இந்த முக்தி தலத்தை தரிசிச்சா ஆத்ம திருப்தி உண்டாகும். கந்த சஷ்டி விழா விமரிசையா நடக்கும். பரணி, கார்த்திகை, பூசம் நட்சத்திரத்தன்றும், சஷ்டி திதியிலும் குமரக்கோட்டம் கோயிலை வலம் வந்தால் குறை அனைத்தும் தீரும்”

“சரி பாட்டி. நீ முருகன பத்தி பேசினா நேரம் போறதே தெரியலை. அஞ்சல அக்காவுக்கும் முருகன் அருளால துன்பம் தீரட்டும். நாமும் ஒருநாள் இங்கு போவோம். அப்புறம் பாட்டி, சொல்ல மறந்துட்டேன், அதைச் சொல்லத்தான் உன்னை தேடினேன். இன்னும் பத்து நாள் கழிச்சு நானும் என்கூட வேலை செய்யறவங்க நாலு பேரும் ஆபீஸ் வேலையா தென்காசிக்கு போகப் போறோம். அங்க கோயில் இருந்தா சொல்லு நாங்க தரிசிக்கிறோம்”“தென்காசிக்கா... அங்க தான் தோரணமலை இருக்கு''

“சரி பாட்டி நானே அங்கு போறப்போ கேட்டுக்குறேன். இப்ப சுண்டல் ஆறியிருக்கும் நீ சாப்பிடு” என கிண்ணத்தை யுகன் கொடுத்தான்.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us