ADDED : செப் 20, 2024 07:38 AM

தோரணமலை
அலுவல் பணியாக திருநெல்வேலிக்குச் செல்வதால் தேவையான பொருட்களை எடுத்து வைத்தான் பேரனான யுகன். அவனது மனைவி தேவந்தி உதவினாள். 'ஊருக்கு போயிட்டு எப்ப வருவீங்க அப்பா' எனக் கேட்டான் அமுதன். “இல்ல செல்லம், அப்பாவுக்கு ஆபீஸ்ல ஆடிட் வேலை. என் கூட நாலு பேர் வராங்க. அடுத்த முறை போகும்போது உங்களையும் கூட்டிப் போறேன்” என ஆறுதல் சொன்னான் யுகன்.
“சரிப்பா” என அமுதனும் உதவி செய்தான்.
பாட்டிக்கு மனசெல்லாம் பரபரவென இருந்தது. ''யுகா... அங்க என்ன கோயில்னு கேட்டியே, தோரணமலைக்கு போய்ட்டு வா”
“ஆமாம் பாட்டி. பெட்டியில எல்லாம் அடுக்கி வச்சிட்டு வரேன்” என்ற யுகன் சற்று நேரத்தில் வந்து, “ சொல்லு பாட்டி, தோரணமலை எங்க இருக்கு?”
“தென்காசியில் இருந்து கடையம் போற வழியில் இருக்கு. நம்ம பாரதியாரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊர். பாரதியார் அங்க போறப்ப எல்லாம் தோரணமலைக்கும் போயிருக்கார். 'குகைக்குள் வாழும் குகனே' என தோரணமலை முருகனைப் பாடி இருக்கார்னா பார்த்துக்கோயேன்”
“சரி எப்ப திறந்திருக்கும் பாட்டி நாங்க சாயந்திரம் போக முடியுமா?”
“காலை 7:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். காலையில போறதே நல்லது. ஆயிரம் படிக்கட்டுகள் ஏறனுங்கறதால வெயிலுக்கு முன்பே போங்க. முதல் நாள் ஊருக்கு போய் தங்கி ஓய்வு எடுத்துக்கோங்க. மறுநாள் காலையில் தரிசனம் செய்யலாம். மலை மேல ஏற சாலை வசதி இல்லை. படியேறணும். தோரணமலை உச்சியில் இருக்கும் குகையில் முருகன் கிழக்கு நோக்கி இருக்கிறார். இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான கதை. முன்னொரு காலத்துல சிவபெருமானின் கல்யாணம் நடந்தபோது அதை பார்க்க அனைவரும் வடக்கு நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே இந்த உலகத்தை சமன் செய்ய அகத்தியரை தெற்கு நோக்கி அனுப்பினார் சிவன். அவரும் பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் முருகப்பெருமானிடம் தமிழைக் கற்று அகத்தியம் என்ற இலக்கண நுாலை அவர் எழுதினாரு”
“ஆமாம் பாட்டி இதெல்லாம் நான் கூட படிச்சிருக்கேன்”
“அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு 'அகத்திய வைத்திய சேகரம்' என்ற நுாலை இயற்றினார். இது சித்த மருத்துவர்களுக்கு தெரிந்த விஷயம் தான்”
“பேசாம அகத்தியருக்கு நான் சீடனா போய் இருக்கலாம்”
“ நல்ல ஆசைதான். அகத்தியர் தன் சீடர்களை வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்ய பணித்தார். அவர் வகுத்த பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்பது தான் முதல் பாடமாக இருந்தது.”
பாட்டி சொல்வதை யெல்லாம் ஆர்வமாக கேட்டான் யுகன்.
“அது மட்டுமில்ல தொடர்ந்து கணிதமும் மருத்துவ ஆய்வு வகைகளும், வான சாஸ்திரம், இருநிலை பிரவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதாரத்துவம், இரசாயன ஆய்வு, அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்தி முறை, அனுபான முறை, களிம்பாக்கம், பற்பம், செந்துாரம், உலோகற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், நீர் நிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகியம் முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்களை வழங்கியிருக்கிறார்”
“இதையெல்லாம் எப்படி நீ நினைவு வெச்சிருக்க! பாட்டி ஆனாலும் உனக்கு நினைவுத்திறன் ரொம்ப அதிகம் தான்.”
“பாடத்திட்டம்னா என்ன பாட்டி?” எனக் கேட்டான் அமுதன்.
”அதுவா அமுதா, உங்க ஸ்கூல்ல சிலபஸ்னு சொல்லுவாங்க இல்ல. அந்த மாதிரி மருத்துவத்துக்கு ஒரு சிலபஸயே உருவாக்கியவர் தான் நம்ம அகத்தியர். இதையெல்லாம் நம்ம தோரணமலையில தான் அவரு ஏற்படுத்தினார்.”
“இவ்வளவும் தோரண மலையிலா நடந்தது?”
“பாடத்திட்டத்தை வகுத்த அகத்தியர் தோரண மலையில் தான் முதல் பாடசாலையை தொடங்கினார். இதை தொடர்ந்து குற்றாலம், திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலியில் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல பகுதிகளில் பாடசாலையின் கிளைகள் உருவாக்கப்பட்டன.”
“அடேயப்பா அந்த காலத்திலேயே ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்காங்களே”
“இந்த காலகட்டத்தில் காசிவர்மன் என்ற மன்னருக்கு தீராத தலைவலி இருந்ததால் அகத்தியர் அவருக்கு கபால அறுவை சிகிச்சை செய்தார். உலகத்திலேயே முதன்முறையாக மண்டை ஓடு அறுவை சிகிச்சை செய்த இடம் தோரணமலை தான். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தேரையர் என்ற சீடர். இவரும் மூலிகை ஆராய்ச்சிக்காக தோரணமலை வந்தவர் தான். தேரையருக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? காசிவர்மனுக்கு அறுவைச் சிகிச்சை செய்த போது அவரது மூளையில் காலால் பற்றிக் கொண்டிருந்தது ஒரு தேரை. அகத்தியர் திகைத்தபோது சீடரான தேரையர் ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து வந்து தேரையின் முன் காட்டினார். அது தண்ணிரிலே தாவிக் குதித்தது. மன்னரின் வலியும் தீர்ந்தது. அறுவைச் சிகிச்சை நல்லபடியா முடிந்தது. இதன் பிறகே அந்த சீடருக்கு தேரையர் என்ற பெயர் நிலைத்தது. தேரையர் இங்கு சமாதி அடைந்திருக்கிறார்”
“அப்போ தேரையருடைய சமாதி நாம் பாக்கலாமா?”
“ம்... பார்க்கலாம். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும் போது முருகனின் சிலை வைத்து வழிபட்டனர். காலப்போக்கில் சிலை காணாமல் போனது. பின்னாளில் பக்தர் ஒருவர் கனவில் முருகன் தோன்றி,
இங்குள்ள சுனையில் மறைந்திருக்கும் தன் சிலையை குகையில் நிறுவும்படி தெரிவிச்சாரு. அதன்படி மீண்டும் சிலை குகையில் நிறுவப்பட்டது”
“அந்த சுனை இன்னும் இருக்கா பாட்டி?”
“என்னடா அப்படி சொல்லிட்ட! அந்த சுனை நீரில் தான் முருகனுக்கு அபிஷேகம் நடக்குது. சித்தர்கள் எல்லாம் வழிபட்ட முருகன் என்பதால் தோரணமலை முருகனை வணங்கினால் கிரக தோஷம் நம்மை நெருங்காது. இதன் காரணமா முருகனின் புகழ் எங்கும் பரவியது. மலையின் வனப்பால் இங்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்களை படம் பிடிக்க தொடங்கினாங்க. மலையில அங்கங்க உட்கார்ந்து போக மண்டபம் கட்டி கொடுத்து இருக்காங்க. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். படி மீது ஏறும்போது ஜாக்கிரதையா ஏறனும் கையில ஏதாவது இருந்தா குரங்கு பிடுங்கும். அப்புறம் அலைபேசியை பார்த்துக்கிட்டே படி ஏறாதே. இது தான் சாக்குனு குரங்கு வந்து மொபைல பிடுங்கிடபோகுது. தேவந்தியும் அமுதனும் பலமாக சிரித்தனர்.
''சரி யுகா, மொத்தம் நாலு நாள் தங்கப் போற இல்லையா தோரண மலையில ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி இறங்கறதால அன்னைக்கு சாயந்திரம் நல்லா ஓய்வெடுத்துக்கோங்க. மறுநாள் இலஞ்சி முருகனை போய் தரிசனம் பண்ணுங்க. பழமை மாறாம இருக்கிற அந்தக் கோயிலை பார்க்க கண் கோடி வேண்டும் தெரியுமா?”
“என்ன பாட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில் சொல்லுவ போல இருக்கே. நான் முதல்ல தோரணமலைக்கு போறேன். அதுக்கப்புறம் அடுத்த நாள் இலஞ்சி முருகனைப் போய் தரிசிக்கறதா இருந்தா உன்கிட்ட பேசிட்டு தெரிஞ்சுக்குறேன். சரிதானே பாட்டி.
இப்ப நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிட உட்காரலாம்“ என்றான் யுகன், பசி கிள்ளும் வயிற்றுடன்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882