sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 32

/

பச்சைப்புடவைக்காரி - 32

பச்சைப்புடவைக்காரி - 32

பச்சைப்புடவைக்காரி - 32


ADDED : செப் 20, 2024 07:36 AM

Google News

ADDED : செப் 20, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடரும் தவம்

“நல்லது செய்யறவங்கள தண்டிப்பதுதான் பச்சைப்புடவைக்காரியின் பொழுது போக்கா புலம்பியவர் ராமலிங்கம். நல்ல செயல்கள் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர். பூர்வீகச் சொத்து கோடிக்கோடியா இருக்கிறது. முதியோர் இல்லம், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அறக்கட்டளை, இலவச மருத்துவமனை என பல தர்மகாரியங்களைச் செய்து வருகிறார்.

“என்னாச்சு?”

“பொண்ணுக்கு திருமணமாகி அஞ்சு வருஷம் ஆச்சு. இப்ப முழுகாம இருக்கா”

“நல்ல சேதிதானே!”

“மாப்பிள்ளையோட மனஸ்தாபம். வீட்டுக்கு வந்துட்டா. மாப்பிள்ளை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்காரு. என் பொண்ணு அழுதுக்கிட்டிருக்கா. வயத்துல இருக்கற குழந்தைக்குப் பாதிப்பு வருமோன்னு பயமா இருக்கு”

“மாப்பிள்ளைட்ட பேசிப் பாத்தீங்களா?”

“பாத்தாச்சு. பத்து லட்சம் ரொக்கமாத் தரேன்னு சொல்லிட்டேன். ஒரு கோடி கொடுத்தாலும் உங்க பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டாரு. எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி நடக்கணும்?”

சிறிது நேரம் புலம்பி விட்டு ராமலிங்கம் சென்றுவிட்டார். நானும் கிளம்பினேன்.

கார் அருகே ஒரு பெண் நின்றிருந்தாள்.

“சொக்கநாதர் கோயில் பக்கத்துல இறக்கிவிடறீங்களா?”

“நான் அங்க போகலையேம்மா”

“எனக்காகப் போகக் கூடாதோ? உனக்காக நான் ஒரு உலகம் விட்டு இன்னொரு உலகத்திற்கு வருகிறேன்”

“தாயே” கதறியபடி விழுந்தேன்.

“ராமலிங்கத்துக்காகக் கவலைப்படுகிறாயா?”

“இல்லை. என் நிலையை நினைத்து பயப்படுகிறேன்”

“பயப்பட என்ன இருக்கிறது?”

“ராமலிங்கம் தர்ம காரியங்களுக்காகச் செலவழிக்கிறார். அவருக்கே இந்த நிலை என்றால்... சுயநலத்துடன் வாழும் என் நிலைமை?”

“ராமலிங்கம் ஏன் அல்லல்படுகிறான் எனக் காட்டுகிறேன்.”

முன்னால் விரிந்த காட்சியில் ராமலிங்கத்தின் அலுவலகம் தெரிந்தது. பொருளுதவி கேட்டு வந்த பெண்ணிடம் அவர் நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.

“ஐயா, குழந்தைங்க படிப்புச் செலவ சமாளிக்க முடியலங்கய்யா. நீங்க ஏதாவது...''

“உன் வீட்டுக்காரர் என்ன வேலை செய்றாரு”

“கவர்ன்மெண்ட் பேங்க்ல குமாஸ்தா”

“வசதியான குடும்பம்னு சொல்லுங்க”

அதை பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சம்பாதிக்கறதெல்லாம் ஓட்டல், சினிமா, பொழுதுபோக்குன்னு செலவழிச்சிட்டு படிப்புச் செலவுக்கு என்கிட்ட வந்திருங்க. நான்தான் இளிச்சவாயன் இருக்கேன்ல?”

அந்தப் பெண் அவமானத்தால் குன்றிப்போனாள். தடுமாறியபடி,“என் புருஷன் என்ன விட்டுப் பிரிஞ்சிட்டாருய்யா”

“என்ன காரணம்?”

“கூட வேலை பாக்கற பொண்ணோட தொடர்பு ஏற்பட்டுப் போச்சுங்க. என்ன வேண்டாம்னு ஒதுக்கி வச்சிட்டாருங்க”

“நீ என்னம்மா செய்யற?”

“நான் ஒரு பிரைவேட் கம்பெனியில சாதாரண வேலை பாக்கறேன்யா. அத வச்சி நானும் என் பொண்ணும் ஏதோ அரை வயித்துக்குச் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்.”

“புருஷனோட சூதானமா வாழ தெரியணும். இல்லாட்டி இப்படித்தான். சரி, சரி கிளம்புங்க. நாங்க என்ன செய்ய முடியும்னு பாக்கறோம்”

ராமலிங்கத்தின் ஆட்கள் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்து உண்மை எனத் தெரிந்தபின் உதவி செய்தார்கள்.

“அந்த உதவியைச் செய்யும்போது ராமலிங்கத்திடம் இருந்த அன்பு அந்த பெண்ணிடம் பேசும் போது இல்லையே. இப்படி பலரை அவன் காயப்படுத்தியிருக்கிறான். அந்தக் கர்மக்கணக்குதான் பாடாய்ப்படுத்துகிறது.

“உன் வீட்டில் தண்ணீர் குழாய்கள் மூலமாக மேலே இருக்கும் தொட்டிக்கு ஏறுகிறது. ஆனால் எங்காவது ஓட்டை இருந்தால்கூட தண்ணீர் நிற்காது. விரயமாகிவிடும். தினமும் பலருக்கு நன்மை செய்வது உண்மைதான். அதில் இவர் கர்மக்கணக்கு நல்லபடியாக மாறுகிறது. ஆனால் உதவி கேட்பவர்களை உதாசீனப்படுத்துவதால் அவர்கள் படும் வேதனையும் கர்மக்கணக்கில் ஏறிய நல்வினைப் பயனை கீழே இறக்கிவிடுகிறது”

“அடுத்து என்ன செய்வது?”

“நாளை அவனே உன்னைத் தேடி வருவான். அப்போது தன்னால் தெரியும்”

மறுநாள் காலையில் ராமலிங்கம் வந்ததும் திடீரென மனதில் ஆவேசம் வந்துவிட்டது. வெறிபிடித்தவனைப் போல் கத்தினேன்.

“புருஷன்கிட்ட சூதானமா நடந்துக்கணும்னு உங்க பொண்ணுக்கு தெரியாதா? இப்போ டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிச்சிட்டான்ல? என்ன செய்யப் போறீங்க”

“என்ன சார்? பிரார்த்தனை செய்வீங்கன்னு பாத்தா இப்படிக் கத்திக் கூப்பாடு போடறீங்க''

“பிரார்த்தனையெல்லாம் செய்வோம். ஆனா பொண்ண பொறுப்பா வளர்க்கத் தெரியலையே உங்களுக்கு? அறிவு வேண்டாம்? சோறுதானே தின்னுறீங்க?”

ராமலிங்கத்திற்கு அழுகை வந்தது. என்னைப் பார்த்துக் கைகூப்பி நின்றார்.

“உட்காருங்க. எனக்காகப் பிரார்த்தனை செய்ய சொன்னீங்க. செய்யறேன்னு சொன்னேன். ஆனா அப்படி சொல்லும்போது என் குரல்ல இருந்த கடுமையை பாத்தீங்கள்ல”

“எனக்குக் குலை நடுங்கிருச்சி சார். எனக்கு இன்னும் படபடன்னுதான் இருக்கு”

“உங்ககிட்ட உதவி கேட்டு வரவங்ககிட்ட நீங்க மனுஷத்தனம் இல்லாம சத்தம் போடும்போது அவங்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? அவங்க அனுபவிக்கற வலிய நீங்க அனுபவிக்கணும்னுதான் நான் என் மனசக் கல்லாக்கிக்கிட்டுக் கத்தினேன். என்னை மன்னிச்சிருங்க. நீங்க செய்யற தப்ப புரிய வைக்க வேற வழி தெரியல”

“நாளையிலருந்து நான் கனிவாப் பேசி...''

“உங்களால அது முடியாது. கொஞ்ச நாளைக்கு உங்க ட்ரஸ்ட் வேலைய உங்க ரெண்டாவது பொண்ணுகிட்டக் கொடுங்க. உதவி கேட்டு வரவங்ககிட்ட அவ பேசட்டும். நீங்க பக்கத்துல இருந்து வேடிக்கை பாருங்க. காலப்போக்குல உங்க மனசு கனிஞ்சிரும்”

“யார் எதைக் கேட்டாலும் கொடுத்துரணும்னு சொல்றீங்களா?”

“இல்ல. நல்லா விசாரிச்சிப் பாத்து அவங்க சொல்றது உண்மைதான் அவங்களுக்கு நிஜமாவே உதவி தேவைப்படுதுன்னு உறுதிப் படுத்திக்கிட்டு உதவி செய்யுங்க. அவங்க கோரிக்கைய நிராகரிக்கறதா இருந்தா அதை மென்மையான வார்த்தைகளாலக் கனிவாச் செய்யுங்க. மனுஷங்களுக்கு உதவறதும் உதவாததும் உங்க இஷ்டம். ஆனா யாரையும் காயப்படுத்தற உரிமை உங்களுக்குக் கிடையாது”

“அப்படியெல்லாம் செஞ்சா என் மகள் வாழ்க்கை சரியாயிருமா?”

“தெரியாது. ஆனா உங்க கர்மக் கணக்கு சரியாக நிறைய வாய்ப்பிருக்கு”

ராமலிங்கம் சென்றவுடன் ஒரு பெண் உள்ளே வந்தாள்.

“அவனைத் திருத்திவிட்டாய். உனக்கு என்ன வேண்டும் சொல்?”

“தாயே, நான் ராமலிங்கத்தை விடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறேன். அவராவது வார்த்தைகளால் நோகடித்துவிட்டு பின்னால் உதவி செய்கிறார். நான் இன்னும் பலரை வார்த்தை ஈட்டிகளால் குத்திக் கொண்டிருக்கிறேன். உதவியும் செய்வது கிடையாது. எனக்கு எப்படி விமோசனம் தரப் போகிறீர்கள்?”

“உன் மனம் இன்னும் நிறையக் கனிய வேண்டும்”

“அதற்கு...''

“அன்பென்னும் தவத்தை நீ தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கவேண்டும்”

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com






      Dinamalar
      Follow us