sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 17

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 17

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 17

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 17


ADDED : அக் 09, 2024 01:37 PM

Google News

ADDED : அக் 09, 2024 01:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையனார் வேலுார்

'ஓம்'... 'ஓம்'... என கண் மூடியபடியே உச்சரித்துக் கொண்டிருந்தார் பாட்டி. இதை அமைதியாக கவனித்தான் பேரன் யுகன். சற்று நேரத்தில் பாட்டி கண் திறந்தார். பாட்டி வாயைத் திறப்பதற்குள், “என்ன பாட்டி, ஓம் மந்திரம் சொல்லிட்டே இருந்தியே... என்ன விசேஷம்?'' எனக் கேட்டான் யுகன்.

“அட, தினமும் எழுந்ததும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கிறேன். இன்னிக்குத் தான் நீ கவனிக்கிற போல”.

“தினமும் இதை சொல்வியா பாட்டி”

'ஓம்' என்பது சொல் இல்லை. மந்திரங்கள் 'ஓம்' என்ற ஒலியுடன் தான் தொடங்கும்”

“ஆமா பாட்டி, ஓம் சரவண பவ, ஓம் சிவாயநமன்னு இப்படி நிறைய கேட்டிருக்கிறேன்.”

”இந்த 'ஓம்' மந்திரத்தை உச்சரித்தால் மனம், உடல், சுற்றுச்சூழல் அமைதியாவதோடு, நன்மை தரும் கூறுகளை உடலுக்குள் உருவாக்கும். அது மட்டுமில்லை. ஒருவரை வரவேற்கும் போது ஓம் எனச் சொல்லி வரவேற்பது வழக்கத்தில் இருந்துச்சு. தியானம் செய்யும் போது 'ஓம்' எனும் மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தால் மனம் வேகமாக நிலைப்படும். இந்த 'ஓம்' என்பதே கடவுளின் பொதுப்பெயரா சொல்லுவாங்க”

“ஆமாம் பாட்டி, ஒரு சமயம் தேவந்திக்கு தைராய்டு வந்த போது சித்த வைத்தியரை பார்த்தோம். அவர் மருந்துகளை கொடுத்துட்டு தினம் 'ஓம்'னு உச்சரியுங்க, உடம்புல தைராய்டு சுரப்பி நல்லா வேலை செய்யும்னு சொன்னார். அமுதன் பிறக்கும் முன்பே சொன்னதா ஞாபகம். மறந்து போச்சு. நீ சொன்னதும் இப்ப தான் நினைவுக்கு வருது. நீ சொல்றது நிஜம்தான் பாட்டி. பல நன்மை கிடைக்கும் போல”

''உடலுக்கு எதெல்லாம் நல்லதோ, அந்த அறிவியலை ஆன்மிகத்தோடு கலந்து நம் முன்னோர் அறிவுறுத்தி இருக்காங்க. இதை பின்பற்றும் போது நமக்கு நீடித்த பலனை அளிக்கும். வேதங்களின் சாரம் 'ஓம்' என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளது. 'ஓம்' என்ற ஒலியை எழுப்பிய பிறகே இந்த உலகத்தை கடவுள் படைத்தார். அதனால்தான் நம்முடைய எந்த ஒரு வேலையை தொடங்கும் முன்பும் 'ஓம்' எனச் சொல்லி தொடங்கினால் வேலை சிறப்பாக முடியும். அத்தோட இந்த ஒலியை எழுப்ப ஒரு வரைமுறை இருக்கு. 'ஓம்' என சொல்லும் போது எழும் ஓசை மணிஓசை போல எதிரொலிக்கணும். உணர்ச்சியில்லாம வெறுமனே 'ஓம்'னு சொல்லக்கூடாது. தெரிஞ்சிக்கோ. ஆமா..இன்னிக்கு அஞ்சரை மணிக்கு எழுந்துட்டியே”

“நாலு மணியில் இருந்தே துாக்கம் வரல. எவ்வளவு நேரம் தான் புரண்டு புரண்டு படுக்கிறது. உடம்பும் மனசும் வலிக்குது”

“உடம்பு வலிக்குது சரி, அது ஏன் மனசு வலிக்குதுன்னு சொல்ற” என யுகனை பார்த்தார் பாட்டி.

“வேலை செய்ற இடத்துல ஒரே தொல்லை பாட்டி. நாம நேர்மையா நடந்தாலும் நமக்குத் தெரியாமலே நமக்கு எதிரா வேலை பாக்குறாங்க. அதுதான் கவலையா இருக்கு”

''சரிப்பா... ஒன்னும் கவலைப்படாத. போன வாரம் சொல்லியிருந்தேன் இல்ல... இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வாலாஜால கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போகும் போது இளையனார் வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் போயிட்டு வரலாம். அங்க போனா எதிரி தொல்லை எல்லாம் ஒழியும்ப்பா”

“ஏன் பாட்டி, அங்க தரிசனம் பண்ணா எதிரி தொல்லை போயிடுமா”

''ஆமா யுகா... கடவுளை நம்பிக்கையோடு அணுகும்போது அதற்கான வழிமுறைகளை காட்டுவார். அதெல்லாம் படிப்படியா நடக்கும். ஒரு வேளை விதி கடுமையா இருந்தாலும் அதை சமாளிக்குற மனபலத்தை கொடுப்பார். காசிப முனிவருக்கு அருளிய மாதிரி உனக்கும் அருள்புரிவார். அந்த முனிவர் செய்யாற்றங்கரையில் தங்கி உலக நலனுக்காக வேள்வி செய்தார்.

மலையன், மாகரன் என்ற அசுரர்கள் இடையூறு செய்தனர். அந்த அசுரர்கள் இருவரும் சிவனிடம் வரம் பெற்றவர்கள். கடம்பரநாதரையும் அம்பிகை ஆவுடைய நாயகியையும் வழிபட்டு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார் முனிவர். முனிவருக்கு காட்சியளித்ததோடு முருகனையும் வரவழைத்து வேல் கொடுத்து அசுரர்களின் இடையூறை போக்க கட்டளையிட்டனர். அசுரர்களை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த முருகனும் உதவினார். தன்னிடம் இருந்த வேலாயுதத்தை இளையனார் வேலுாரில் நிறுவினார். முருகன் கோயிலில் வேலுக்கு என தனி சன்னதி இருக்காது. இங்கு வேல் பதிந்திருக்கும் ஆழத்தை யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த வேல் சன்னதியில் இரண்டு கால பூஜை நடக்கிறது. இங்குள்ள திருக்குளம் சரவண பொய்கை என அழைக்கப்படுது” .

“ஆமாம், இது எங்கயிருக்கு?

''அதுவா காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் இளையனார் வேலுார் என்ற கிராமத்தில் தான் இந்த சுப்ரமணியர் கோயில் இருக்கு. காஞ்சிபுரத்தில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் இருக்கு. நம்ம சொந்தக்காரங்க கல்யாணம் வாலாஜாவில் தானே. அங்கிருந்து ஒரு 9 கி.மீ., மட்டும்தான். இளையனார் என்றால் முருகன், வேலுார் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். கோயிலில் முருகப்பெருமான் தனி சன்னதி கொண்டு தேவியர் இல்லாமல் தனியாக பிரம்மசாஸ்தா கோலத்தில் 6 அடி உயரத்தில் நின்றகோலத்தில் இருக்கிறார். பாதி வள்ளியும் பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்த கஜவள்ளியாக இங்கு எழுந்தருளி உள்ளார். வள்ளி, தெய்வானை இணைந்த கஜவள்ளி தோற்றத்தை சில தலங்களில் தான் காண முடியும். அப்படி முருகனுடன் சேர்ந்த கஜவள்ளியை இளையனார் வேலுாரில் தரிசிக்கலாம். அது மட்டுமல்ல இந்த கோயிலின் வடகிழக்கு மூலையில் சிவலிங்க மூர்த்தியாக கடம்பரநாதர் இருக்கிறார். இங்கு முருகன் நாள்தோறும் கடம்பர நாதரை வழிபாடு செய்கிறார்''

“ஓ”

“அருணகிரிநாதர், திருப்புகழில் இரண்டு பாடல்களை இத்தல முருகன் மீது பாடியுள்ளார். அதில் அவர் வேலுார் என்றே குறிப்பிட்டுள்ளார். அந்த ரெண்டு பாடல்களும் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கே சுவாமிநாத சித்தரின் சன்னதி உள்ளது. இவரை முனி புங்கர் ஈசான தேசிகர் என்றும் சொல்வாங்க. திருநெல்வேலி ஆதின மடாலயத்தில் கட்டளை தம்பிரானாக இருந்தவர். இவரது இயற்பெயர் சுவாமிநாத தேசிகர். இளையனார் வேலுார் தல வரலாறு இவரால் பாடப்பட்டது தான்”

“இங்கு முருகனுக்கு உரிய கார்த்திகை, சஷ்டி, விசாகம், சித்திரை மாத பிரம்மோற்ஸவம், வைகாசி வசந்தோற்ஸவம், வைகாசி விசாகத்தில் 1008 சங்காபிஷேகம், ஆடி கார்த்திகை, ஆவணி பவித்ரோத்ஸவம், புரட்டாசியில் கஜவள்ளிக்கு நவராத்திரி பூஜை, ஐப்பசி கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் சிறப்பான வழிபாடு நடைபெறும். ஆனா இங்க சூரசம்ஹாரம் மட்டும் கிடையாது. ஆனால் மலையன் மாகரன் வதம் நடக்கும். ம்… சொல்ல மறந்துட்டேனே! மாகரனும் மலையனும் அழிந்தபின் முருகப் பெருமான் தமது படைகளை வருவித்துக்கொண்டு பங்குனி மாதம், சுக்கிலபட்சம், மக நட்சத்திர நன்னாளில் திருக்கடம்பரநாதரான சிவனை பூஜித்தார். காட்சியளித்த சிவன், ''உனது வேல் ஊன்றிய இந்த வேலுாரில் தங்கி வழிபடுவோருக்கு வரம் கொடு'' என கட்டளையிட்டார். அதன்படியே முருகப்பெருமானும் இங்கு தங்கி அருள்புரிகிறார். நம்பிக்கையுடன் அவரை தரிசிப்போம் வாப்பா”

“சரி பாட்டி அவசியம் போகலாம். இப்ப நான் போய் அமுதனை ஸ்கூலுக்கு கிளப்பணும்'' என்றபடி படுக்கையறைக்கு போனான் யுகன். அவன் நகர்ந்ததும் தொலைக்காட்சிக்கு உயிர் கொடுத்தார் பாட்டி. இன்று நாம் தரிசிக்கப் போவது வயலுார் முருகன் கோயில் என்று சொல்லி காட்சி விரிந்தது. கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்க ஆர்வமானார் பாட்டி.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us